குட்டி கதை
64 கடத்தல் திருமணம்
சின்ன குழந்தையாக இருந்தபோதே நிறைய முனிவர்கள், ரிஷிகள்,ஏன், நாரதர் கூட பீஷ்மக ராஜாவின் அரண்மனைக்கு வந்த போதெல்லாம் சொன்னதென்ன?
"இந்த குட்டி கிருஷ்ணனுக்கு என்று பிறந்தவள்"
.
"யார் இந்த கிருஷ்ணன்"
என்று அந்த சிறுமி கேட்டாள்
அவனது கம்பீரம், அழகு,வீரம், சாதுர்யம், பழகும் இனிமை அன்பு, பண்பு, இதெல்லாம் கேட்டு தெரிந்த பின் அவள் மனம் மெதுவாக அவனையே நினைத்து தன்னை அவன் மனைவி எனவே எண்ண வைத்தது. கிருஷ்ணனுக்கும் அவளை பற்றிய சகல விவரங்களும் போய் சேர்ந்தது. இவளே எனக்கு மனைவியாக தகுந்தவள் என்று கிருஷ்ணனின் மனம் ஏற்றுகொண்டது. ஒரே ஒரு சிக்கல். மூத்த அண்ணன். தன் ஒரே தங்கை தனது நண்பனுக்கு தான் என்று முடிவெடுத்தபின் ராஜாவின் குடும்பம் அதற்கே கட்டுப்பட்டது. அந்த நண்பனோ கிருஷ்ணனின் பரம வைரி. என்ன செய்ய முடியும்? கல்யாணத்துக்கு நாளும் குறித்தாகிவிட்டது. அவள் நன்றாக யோசித்த பிறகு மணந்தால் கிருஷ்ணன், அன்றேல், மரணம். அதற்குமுன் இந்த நிலைமையை கண்ணனுக்கு எப்படி சொல்வது? இந்த சிறைப் பறவை வழி தேடியபோது தான் அரண்மனைக்கு சுனந்தனன் என்கிற ப்ராமணர் வந்தார்.
தனியாக அவரை சந்தித்து கிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் கொடுத்து எப்படியாவது கிருஷ்ணனிடம் இதை கொடுத்து விடுங்கள்” என்றாள்.
"கிருஷ்ணா, புவன சுந்தரா (உலகிலேயே அழகா), அழகு, வீரம், தைர்யம், அறிவும், சாதுர்யம் அனைத்திலும் சிறந்தவா!! உன்னை நான் பார்த்ததே இல்லை, உன்னை பற்றி கேள்விபட்டே உன்னையே என் கணவனாக வரித்து விட்டேன். எந்த அளவுக்கு உன் மேல் காதல் இருந்தால் வெட்கத்தை விட்டு அந்நிய புருஷன் உனக்கு இதை எழுதுகிறேன். புரிந்து கொள். உடனே என்னை வந்து காப்பாற்றி அழைத்து செல்.இன்னொருவன் எனக்கு தாலிக்கயிறு கட்டு முன் தூக்கு கயிறு என் கழுத்தை அலங்கரித்து விடும். ஒருவேளை இந்த ஜன்மத்தில் உன்னை அடைய முடியாவிட்டால் அடுத்தடுத்த ஜன்மங்களிலாவது உன்னை அடைய பாடு படுவேன். - -- உனக்காகவே வாழும் ருக்மிணி"
துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனை வீரர்களிடம் சுநந்தன் கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று சொல்லி காத்திருந்தார் "உள்ளே விடு"
என்றான். கற்றறிந்த ஒரு பிராமணருக்கு உரிய உபசாரங்களை அளித்தபின் என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள் என்று கிருஷ்ணன் கேட்டதற்கு எல்லா விவரங்களையும் சொன்னார் சுனந்தன். அந்த பெண்ணின் அழகை வர்ணித்தார். அவள் கொடுத்த கடிதம் கிருஷ்ணன் கைக்கு வந்தது. புன்முறுவலுடன் அதை படித்த கிருஷ்ணன் தக்க வெகுமதியுடன் அவரை அனுப்பி வைத்ததோடல்லாமல்
"அவளை பார்த்து சொல்லுங்கள், கடிதம் கிடைத்தது. தக்க தருணத்தில் வந்து அவளை காப்பாற்றுகிறேன் என்று அவளிடம் சொல்லுங்கள்". என்று சேதியும் சொல்லி அனுப்பினான்.
குல வழக்க பிரகாரம் கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தனியாக தோழிகளுடன் ஊருக்கு வெளியே இருந்த பார்வதி கோவிலில்
பூஜை செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ள சென்றாள். அங்கு ஒரு ரதம் காத்திருந்தது. மாறு வேடத்தில் கிருஷ்ணன் அவளை அங்கு சந்தித்து அவளை கடத்தி சென்றான். ருக்மிணி கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் த்வாரகையில் ருக்மிணி ராணியும் ஆனாள். அவளை
எவன் தாலி கட்ட காத்திருந்தானோ அவன் ஏற்கனவே கிருஷ்ணனின் ஜன்ம வைரியாக இருந்த பின்னும், பொறுத்திருந்து அவனுக்கு திருந்துவதற்கு கிருஷ்ணன் நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்தான் வேறுவழியின்றி கிருஷ்ணனிடம் அவன் உயிரிழந்ததை வேறு ஒரு குட்டி கதையில் படிப்போமா??,
No comments:
Post a Comment