Kutti kadhai
கடமை
கனகசபை ஒரு கார்கோடன். பிழிந்து எடுப்பார் வேலையாட்களை.
அதேபோல் தானும் உழைக்கும் ஆசாமி.அவரது அலுவலகம் ஒரு விஞ்ஞான கூடம்.
ரொம்ப சொல்வானேன் அவர் ஒரு அப்துல் கலாம் என்றுவைத்துகொள்வோமே .
அவரே கடிகாரம் பார்க்காமல் உழைக்கும்போது அவர் சிப்பந்திகள்
கடிகாரம் முள் 5 காட்டிய வுடன் டிபன்பாக்ஸ் பையை தோளில் மாட்டி
கொண்டு நழுவ முடியுமா.?
சுப்ரமணிய சர்மா ஒரு இளம் விஞ்ஞானி. தன்னை வேலைக்கு அர்பணித்து
கொண்டு “உங்களுக்கு ஆபிஸ்தான் பொண்டாட்டி நான் இல்லை” என்று சரசாவிடம் வாங்கி கட்டி கொள்பவன் அன்று சனிக்கிழமை. கோடை விடுமுறையாதலால் வீட்டில் பசங்கள் ரொம்ப மகிழ்ச்சியோடு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். குழந்தைகள் மூவரையும்கண்காட்சிக்கு சாயந்திரம் கண்டிப்பாக அழைத்து போவதாக எட்டு முறை நேரிலும் போனிலும் வாக்களித்திருந்தான். காலை 10மணிக்கே மெதுவாக கனகசபையிடம் “ சார், நான் இன்று ஒருநாள்
கொஞ்சம் சீக்கிரம் போகவேண்டும் வீட்டில் குழந்தைகளை எக்சிபிஷனுக்கு மாலை அழைத்து போக வாக்களித்து விட்டேன் ரொம்ப நாளாக தள்ளி போட்டுக்கொண்டே வந்ததை இன்று மீற முடியாது. ஆகவே
5.00 மணிக்கு சாயந்திரம் போக அனுமதி வேண்டும்.” என்று அறிவித்திருந்தான் சர்மா. “அதற்கென்ன நீ போயேன். ஆனால் நீ போவதற்கு முன் நான் கேட்ட அந்த லேப் ரிபோர்டை தயார் செய்து கொடுத்துவிடு. நாளைக்கு காலையில் நான் அதை அனுப்பவேண்டும். விஞ்ஞானிகள் மீட்டிங் டெல்லியில் நாளன்னிக்கு தெரியுமோ இல்லையோ உனக்கு?. “தெரியும் சார்”. சர்மா பிசாசு. வேலையில் மூழ்கிவிட்டால் முடிக்கும் வரை அவன் பேர் கூட அவனுக்கு மறந்து விடும்.
ரிப்போர்ட் முடித்து நிமிர்ந்து உட்கார்ந்தான் அவன் கண்கள் எதிர் சுவற்று கடிகாரத்தை பார்க்கும்போது தலை சுற்றியது. பேனா கையிலிருந்து நழுவி கீழே உருண்டது. ரிப்போர்ட் கீழே விழுந்து பேப்பர்கள் சிதறின. கடிகார சின்ன முள் 7 லும் பெரியமுள் 6 லும் கடந்து நகர்ந்துகொண்டிருந்தது. அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால் யாரையும் காணோம். எல்லோரும் போயாகிவிட்டது. கனகசபை அறையில் கூட வழக்கமாக எரியும் விளக்கு அணைக்க பட்டிருந்தது.
“ ச்சே !! நான் என்ன மனிதன் எப்படி சரசா முகத்தில் விழிப்பது.? குழந்தைகள் எப்படி எமாற்றமடைந்திருப்பர்கள்?
விசனத்துடன் வீடு திரும்பி திருடன் போல் மெதுவாக உள்ளே நுழைந்தான் சர்மா. வீடே நிசப்தம்.
அவன் மனைவி சரசா அவன் வந்ததை கூட கவனிக்காமல் டிவியில் மூழ்கி இருந்தாள். அமைதி அவனை கொன்றது. புயலுக்கு முன்னே அமைதி!! எப்போது வெடிக்க போகிறதோ.
"ரொம்ப லேட் ஆய்ட்டுதே காபி யா இல்லை ஒரே அடியா ரா சாப்பாடா. ரொம்ப களைச்சி போயிருக்கே முகம். ரொம்ப வேலையோ இன்னிக்கு?”. “ம்”“ ம்”, மென்று முழுங்கினான் சர்மா.
“எங்கே குழந்தைகளை காணோம்?”
“அவர்கள் எல்லாம் தான் சாயந்திரமே எக்சிபிஷன் போய்ட்டாளே”
“என்ன கேலி பண்றியா என்னை?”.
“எதுக்கு உங்களை நான் கேலி பண்ணணும்?”
“பின்னே எப்படி குழந்தைகள் எக்சிபிஷன் போனா?”
“என்ன ஒன்னும் தெரியாத மாரி கேக்கறேளே. நீங்க சொன்னதாக தானே. ஒத்தர் உங்க ஆபிஸ்லெருந்து ஒரு கார் எடுத்துண்டுவந்து குழந்தைகளை எக்சிபிஷனுக்கு அழைச்சுண்டுபோனாரே. உயரமா மாநிறமா
முன்னாலே ரொம்ப வழுக்கையா திக் கண்ணாடி போட்டுண்டு தொளதொள ன்னு ஒரு கருப்பு கோட் போட்டுண்டு. யார் தெரியணம் னு உங்க பேர் என்னன்னு கேட்டேன். “என்னமோ ஒரு சபை” ன்னு சொன்னார். தான் ரொம்ப முக்யமான ஒரு வேலையில் ஈடுபட்டு நேரத்தோடு வீடு திரும்ப முடியாததை
உணர்ந்து அந்த மனிதர் தானே காரை எடுத்துக்கொண்டு வந்து தன் குழந்தைகளை எசிபிஷன் கூட்டிசென்ற பெரிய மனதை தனக்குள்ளே
நன்றியுடன் நினைத்தான் சர்மா.
நீதி: உண்மையான உழைப்பு என்றுமே தனியாக ஒரு மதிப்பும் மரியாதையும் பெறும்.
No comments:
Post a Comment