பல நாட்களாக என் உள் மனதில் பொங்கியெழுந்த ஆவல் இன்று நிறைவேறியுள்ளது. ராமானுஜ -- கூரத்தாழ்வான் குரு- சிஷ்ய பாவம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். இது சம்பந்தமாக நான் தேடி எடுத்த சில சம்பவங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எனக்கு தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். (கொஞ்சம் பெரிய செய்தி மடல்) . நான் எடுத்துக்கொண்ட பிரயாசைக்கு நீங்கள் இதை படித்து எனக்கு உங்கள் அபிப்ராயங்களை தெரிவிக்கலாமே
அருமையான குரு அபிமான சிஷ்யன்
கூரேசனை (கூரம் என்கிற ஊர்காரர்-- பின்னர் கூரத்தாழ்வான்) பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ சொன்னாலும் எழுதினாலும் பாடினாலும் அலுக்காத காரணம் அவருடைய குரு பக்தி. .ரொம்ப வசதியான குடும்பம். நிலம் நீச்சு என்று ஏராளமான சொத்து. அருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மா) அமைந்தது தான் விசேஷம். தம்பதியர் இருவருமே தான தர்மத்தில் ஒருவரை யொருவர் மிஞ்சினர் . கஞ்சி வரதனிடம் அளவற்ற பக்தி . காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக விசிஷ்டாத்வைத பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்த ராமனுஜரிடம் அமோக பக்தி கூரேசருக்கு. காந்தம் போல் கவரப்பட்டார். அவரது
எண்ணற்ற சீடர்களில் தானும் ஒருவராக இணைந்துகொண்டார். ராமானுஜரிடம் வேத சாஸ்த்ரங்களை கற்று மீமாம்ச சூத்ரங்களையும் தெரிந்துகொண்டார். இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நேசம், நட்பு , பாசம், சகலமும் உண்டானது. காஞ்சியே வாசமானார் கூரேசர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர் போக நேரிட்டது. .அங்கு அப்போது சைவர்களின் ஆக்ரமிப்பு கெடுபிடி கொஞ்சம் அதிகம். சூரியனை தாமரை பிரிந்தது. கூரேசன் கூரத்திலேயே ஐக்கியம். ஆனால் காஞ்சி வரதனும் பெருந்தேவி தாயாரும் வேறு திட்டம் வைத்திருந்தார்களே!!!!!
நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து அவர்களின் மாளிகை கதவு தாழ் போடப்பட்டது. கோட்டைகதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை பெருந்தேவி தாயார் " நாதா! இது என்ன சப்தம்?. எங்கிருந்து ? என கேட்டாள். "தெரியவில்லையே. கேட்டு சொல்கிறேன்”” என்று வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்து கேட்டார். "சுவாமி, நானும் கேட்டேன். அது கூரத்தில் அன்றாட அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு தாழ்ப்பாள் போடும் சப்தம்" கபட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்!!!. தெரியாதது போல் "அடே அப்படியா, கூறேசனும் ஆண்டாள் அம்மாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா. எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் அழைத்து வா " என திருக்கச்சி நம்பிக்கு கட்டளை இட்டார். அம்பு போல் விரைந்து கூரேசரிடம் பெருமாளின் விருப்பத்தை தெரிவிக்க கூரேசர் வெகுண்டார். "என்ன அக்ரமம் செய்துவிட்டேன். பாவி, நான்? அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வதுபோல் கதவு தாழ்ப்பாள் சத்தம் போட்டு தம்பட்டம் அடித்துவிட்டேனே. பெருமாளுக்கும் தாயாருக்கும் சத்தத்தால் அமைதி இழக்க செய்து மகா பாவத்தை தேடிக்கொண்டு விட்டேனே?!!”. ஆடிப்போய் விட்டார் கூரேசர். இனி நான் செய்யவேண்டியது சொத்து சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடி குரு நாதர் ராமானுஜரை சரண் அடைவது ஒன்றே. ‘’அடியே ஆண்டாளு, கட்டின துணியோட உடனே கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்”” . அவ்வாறே இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். வழியே சில இடம் காட்டு பாதை. கள்வர் பயம் ஆண்டாளை கலக்கியது கண்டார். "என்ன பயம், நம்மிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் எதாவது பொருள் உள்ளதா, சொல்? என்று கேட்ட கூரேசரிடம் உண்மையை உடைத்தாள் ஆண்டாள் அம்மாள். வழியில் உங்களுக்கு எதாவது தாக சாந்திக்காவது உதவுமே என்று நினைத்து இந்த சிறிய தங்க பாத்திரத்தை கொண்டு வந்தேன் என்று புடவை முடிச்சிலிருந்து அந்த சிறிய பாத்திரத்தை நீட்டினாள் ஆண்டாள் அம்மாள். “பேதை பெண்ணே!! , எல்லா வற்றையும் துறந்து என்று சொன்னபோது அதில் இந்த பாத்திரமும் சேர்ந்தது தான்”” . அந்த பாத்திரத்தை வாங்கி வீசிஎறிந்தார். "அப்பாடா!! இனி உனக்கு பயம் தேவை இல்லையே, எது காரணமோ அதை வீசி எறிந்தாயிற்றே.”” ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சி. விரைவில் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!! . ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது, தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை. எனவே ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார் 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர் இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று எல்லாவற்றையும் அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரதுக்கும் பாஷ்யம் எழுத தொடங்கினார். " கூரேசா, நீ தான் நான் சொல்ல சொல்ல என்னோட பாஷ்யத்தை எழுதணும் . எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிருத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன் ". இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கினார் . பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆச்சர்யனுக்கு கோவம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார் ஆச்சர்யன். " கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத்தால் நீயே எழுது. போ”” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள் ஏன் இவ்வாறு செய்தாய் என வினவினர் என்ன விபரீதம் இது என நடுங்கினர். “”நண்பர்களே கவலை வேண்டாம். நான் ஆச்சர்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்." இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததை படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக்கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்திய படி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா." “”என் மகனே, நீ தான் ரைட். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்" இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரகம், கீதா பாஷ்யம் உரு பெற்றது . எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீ ராமானுஜருக்கு, விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்கள் உரை ( குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்!! அப்படியே காஷ்மீரம்.---- எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள் மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக்கொள்வானா? நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்தி களுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். குரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச்சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்ற அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜா அனுமதி பெற்றார்கள். ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்ககூடாது என்று மற்றொரு கெடுபிடியும் போடப்பட்டது. விடுவாரா கூரேசர். ஆஹா அப்படியே அன்று அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுத தொடங்கினர். கூறேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூறேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு. ஸ்ரீ வைஷ்ணவமும் ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு, . கூரேசருக்கு மட்டும் தனக்கு ஒரு பிள்ளை இல்லை என்ற குறை. உஞ்சவ்ரத்தியில் தான் காலம் சென்றது அவருக்கு. ஒருநாள் கொட்டும் மழை நிற்கவில்லை. எனவே கூறேசருக்கும் ஆண்டாள் அம்மாளுக்கும் உஞ்சவ்ரத்திக்கு வெளியே போக முடியாததால் உணவில்லை.
பெருமாளின் துளசி ஜலம் தான் ஆகாரம். அன்றிரவும் வாயு பக்ஷணம் தான் போலும். ஆனால் கூறேசருக்கோ பரம சந்தோஷம். இன்று திருவாய் மொழி படிக்க நிறைய நேரம் கிடைத்ததே என்று!!!. ஆண்டாளுக்கோ நெஞ்சிலும் வயிற்றிலும் வலி. தனக்கு பசி என்பதற்காக அல்ல, கணவர் பட்டினி கிடப்பதை பார்த்து!!!. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மணி சாயந்தர நைவேத்ய பூஜையை அறிவித்தது. ஆண்டாள் அம்மாள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அவள் மனம் "ஹே!! ரங்கநாதா உன் பக்தன் இங்கே ஆகாரமின்றி வாட உனக்கு மட்டும் உண்ண மனம் வருகிறதா?”” ரங்கன் இதை கேட்டு சும்மாவா இருப்பான்? கோவில் பிரதான பட்டாச்சார்யர் உத்தம நம்பியின் கனவில் ரங்கனின் கட்டளை : “”உடனே பிரசாதங்களுடன் கூரேசன் வீட்டுக்கு போ. பசியோடு உள்ளான். என் ஆசிகளையும் பிரசாதத்துடன் அனுப்பினேன் என்று சொல்". உத்தம நம்பிக்கு உடல் சிலிர்த்தது வியர்க்க விருவிருக்க ஓடினார். மேள தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய பிரசாதங்களுடன் அனைவரும் புடை சூழ நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு நடந்தார். வெறும் ஜலம் அருந்தி படுத்திருந்த கூரேசன் திடுக்கிட்டார். உத்தம நம்பி சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை. ரங்கனின் கருணை அவரை திக்குமுக்காட வைத்தது. ஆண்டாள் அம்மா மனதில் நன்றியுடன் ரங்கனை வணங்கினாள். “”இது ரங்கன் அனுப்பியது. அவசியம் நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்”” என்றாள். கூரேசன் மனதில் ஒரு ஐயம். இது ஆண்டாளின் வேலையோ?? என்று. அவரது கேள்விகளுக்கு விடையாக தான் ரங்கனிடம் முறையிட்டதை சொன்னாள். " ஆண்டாள் நீ என்ன காரியம் செய்து விட்டாய் ஒரு கவளம் சோற்றுக்காக அந்த பேர் அருளாளனை சோதிக்கலாமா? " இரவு ரங்கன் கூரேசன் கனவில் தோன்றி " கூரேசா!!! நான் உனக்கு அனுப்பியது வெறும் சோறு மட்டும் அல்ல. உனக்கும் ஆண்டாளுக்கும் பிறக்கப்போகிற இரண்டு குழந்தைகளுக்கான வரப்ரசாதமும் கூட . அவர்கள் எம் குழந்தைகளும் ஆவர். எம்மை அவர்களில் நீங்கள் இருவரும் காண்பீர்”” கூரேசர் குதித்து எழுந்தார். அடியே ஆண்டாளே இந்த அதிசயத்தை கேள் என்று கூரேசர் அவளை எழுப்பி விவரம் சொன்னதில் அவளது சந்தோஷத்தை எழுத எனக்கு வார்த்தை இல்லை. ராமானுஜருக்கு விவரம் சென்றது. ஒரே வருடத்தில் இரு பிள்ளைகள் பிறந்தன. ராமானுஜரே அவர்களுக்கு “வியாச பட்டர்” “ பராசர பட்டர்” என நாமகரணம் செய்வித்தார். பிற்காலத்தில் பராசர பட்டரே ராமானுஜரின் வாரிசாக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சம்பிரதாய ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர், ஸ்ரீ ராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம் வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரை போற்றினாலும் சில எதிரிகளும் முளைத்தனர். சைவ சமயம் அவரை எதிர்க்காவிட்டாலும் சில சைவர்கள் அவர் வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புறத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது. அந்த சோழ தேச ராஜா குலோத்துங்கன் வம்ச கிருமி கண்ட சோழன் ஒரு வீர சைவன். தனது ராஜ்யத்தில் வைஷ்ணவ பூண்டை வேரோடு ஒழிக்க நினைத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே முடியும் . "அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே”” , கட்டளை பிறந்தது. ராமானுஜரை தனது சைவ குருமார்களுடன் விவாதம் செய்யவைத்து தோற்கடிக்க வேண்டும் வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்க செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிடவேண்டும். இந்த எண்ணம் செய்தியாக கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடன் ஓடினர். எக்காரணம் கொண்டும் நீங்கள்
கங்கைகொண்ட சோழபுரம் செல்ல கூடாது. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கெஞ்சினர். அரசனின் ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரை தேடி. கூரேசர் எப்படியோ ராமானுஜரை சம்மதிக்க வைத்து தான் அரசனை சந்தித்தார். விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் மட்டும் கர்நாடகாவில் மேல் கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதிவசமாகியது . மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீ சம்பத் குமாரன் கோயில் கட்டினார். அவரது விடா முயற்சியில் மேல்கோட்டை ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்ததாக சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது. ஒரு நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைஷ்ணவர் ராமானுஜரை சந்தித்தார். ஆர்வத்துடன் ஆசார்யன் மூச்சு விடாமல் “” என் உயிரான ஸ்ரீரங்கம் எவ்வாறு இருக்கிறது. என் பிள்ளைகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் நலமா???”
“ நீங்கள் இல்லை என்கிற குறை தவிர எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது அங்கு” என்றார் வைஷ்ணவர்.
”என் சீடன் கூரேசன் எப்படி இருக்கிறான் ??அவனை இழந்து நான் தனியனாகிவிட்டேனே!!! “ என்று ஆதங்கத்தோடு கேட்டார் ஆசார்யன். கண்களில் நீர் பெருக, நா தழுதழுக்க ஸ்ரீ வைஷ்ணவர் சொன்னார்:
"சுவாமி தங்களை ஜாக்ரதையாக அனுப்பிவிட்டு கூரேசரும் மஹா பூரணரும் அரசன் ஆணைக்கு கட்டு பட்டு கங்கை கொண்ட சோழ புரம் அழைத்து செல்லப்பட்டனர். ராஜா அவர்களிடம் "சிவனை காட்டிலும் பெரிதொன்றும் இல்லை" என சம்மதித்து எழுதிகொடுங்கள் என்றான். கூரேசன் மறுத்தார். வேதம் சாஸ்த்ரம், உபநிஷத் ஸ்ம்ரிதி புராணம் இவற்றிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டி நாராயணனே மேலானவன் போற்றதக்கவன் என நிருபணம் செய்தார். ஏற்க மறுத்தான் சோழன். கையொப்பமிட்டு கொடு இல்லாவிட்டால் உன் கண் இங்கே பிடுங்கப்படும் என ஆணையிட்டான். “”கெடுமதி கொண்ட அரசனே, உன் விருப்பம் நிறைவேறாது. உனக்கு வேலை மிச்சம் பண்ணுகிறேன். நானே என் கண்களை பிடுங்கி கொள்கிறேன் என்று அவன் நீட்டிய எழுத்தாணியால் கண் விழி கோளங்களை வெளி கொணர்ந்து அவன் காலடியில் எறிந்தார். உன்னை பார்த்ததால் அந்த கண்கள் செய்த பாவத்திற்கு இது தண்டனையாகட்டும். “”நீ கையொப்பமிடு என மஹா பூர்ணர் நம்பிகளை ஆணையிட்டு அவரும் மறுக்கவே அரசனின் சேவகர்கள் அவர் நேத்ரங்களை அழித்தனர். கூரேசர் வயதில் இளையவராதளால் நம்பிகளை தாங்கி வர ரத்தம் பீறிட வழியெல்லாம் ஆறாக பெருக அரண்மனை விட்டு வெளியேறினர். கங்கை கொண்ட சோழபுரம் தாண்டி வந்தவுடன் நம்பிகளின் பெண் அத்துழாய் பிராட்டி அவருக்காக காத்திருந்தவள் கண்ணற்ற தந்தையை கட்டிக்கொண்டு கதறினாள். நம்பிகளால் மேற்கொண்டு நகர இயலவில்லை. கூரேசன் மடியில் தலையும் அத்துழாய் மடியில் காலுமாக சோழ மண்ணிலே சாய்ந்தார். “””சுவாமி!! ரங்கனை விட்டு பிரிந்ததும், ஸ்ரீரங்கத்தை பிரிந்ததும், ராமானுஜரை பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசத்தில் வாழ்வு முடிவதால் உங்களுக்கு மனமொடிந்து விட்டதா??” என கூரேசர் வினவ “கூரேசா!!! நீ அறியாததா?? ஒரு வைஷ்ணவனின் அந்திம நேரத்தில் நாராயணனே அருகில் இருப்பான். ஜடாயுக்கு ஸ்ரீ ராமன் அருகில் வந்து அருளவில்லையா ? இதில் காடென்ன நாடென்ன?? மேலும் கேள் , ஒரு சுத்த ஸ்ரீ வைஷ்ணவன் மடியிலோ வீட்டிலோ மரணம் சம்பவித்தால் அதற்கு மேல் எது சிலாக்கியம்?? நான் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தால் அனைவரும் ஸ்ரீ ரங்கத்தில் மரணம் தான் வைஷ்ணவனுக்கு சிறந்தது என நினைப்பரே!!!. நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன சொல்கிறது? பெருமாளிடம் பிரபத்தி சரணாகதி பண்ணினவனுக்கு எங்கு மரணம் சம்பவித்தாலும் நாராயணன் அருகில் இருப்பது சத்ய வாக்காயிற்றே!!!. இதென்ன அனாமதேய இடமா இங்கல்லவோ என் குருநாதர்கள் நாதமுனிகளும் குருகை காவலப்பனும் வைகுண்ட ப்ராப்தி பெற்ற இடம். விசனப்படாதே. நான் மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்”””. மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார். “””
நிகழ்ந்ததை பூரா கேட்ட ராமனுஜரின் கண்களில் பிரவாகம். தனது குரு பெரிய நம்பிகளுக்கு தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தார். தனக்காக அவர் உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டவில்லையே என நொந்தார். பெருமாளே என்ன பாக்கியம் கூரேசனுக்கு என்னால் முடியாததை அவன் நிறைவேற்றினானே அவனல்லவோ குருவை மிஞ்சிய சீடன் கூரேசன் ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான் , திருவரங்க பெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறையலானார்கள் திருப்பதியில் ராமானுஜரின் நெருங்கிய உறவினர் ஸ்ரீ சில பூரணரும் திரு கச்சி நம்பிகளும் விண் எய்தினர். கூறேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ? கண்ணற்ற கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது காவலர்கள் தடுத்தனர். அரசனின் ஆணை யார் ராமானுஜரை தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கிறார்களோ அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கபடுவர். “அய்யா!! உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித்துவிட்டு கூரேசனுக்கு ரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டு மல்ல வரும் ஜென்மத்திலும் தேவையில்லை”” என்றார் வீடு திரும்பினார். “” ஆண்டாள், பசங்களை கூப்பிடு இனி ஸ்ரீரங்கம் நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்”” . அவர்கள் அவ்வாறே திருமாலிருன்சோலை (மதுரை அருகே) குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம் மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான். கொடிய ஆட்சி விலகியது. பல வருஷங்கள் சென்றது. நூறு வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.
திருமாளிருன்சோலையிலிருந்து கூரேசர் குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் விரைந்தார். கண்ணிழந்த கன்று தாய் பசுவை ஆர்வமாக நாடியது. தன் வீடு தேடி ஆசார்யன் வந்தார் என கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசன், ஆச்சர்யனும் பிரதம சீடனும் பல வருஷங்கள் கழித்து சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின, காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில் ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனையோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை எத்தனை இடையூறுகள், இன்னல்கள்,எதிப்புகள், விவாதங்கள் ஒன்றாக அல்லவா எல்லாம் கடந்தோம். ராமானுஜர் கண்களில் காவேரி கூறேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழி யற்று பேச்சற்று தடுமாறி தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தார் கூரேசன். குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசனை தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர். “என் குழந்தாய்!!! என்ன செய்தாய் நீ எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ணவதுக்காகவும் உன் கண்களையே தியாகம் செய்தாயே””!!!
பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனின் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.
“சுவாமி நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனின் நெற்றியை பார்த்து இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாத்திகொண்டிருக்கிறான் பார்”” என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவ பிராயச்சித்தமாக எனக்கு விழிகள் இழக்கும் தண்டனை கிடைத்ததாக கருதுகிறேன்”’
“” நீயாவது பாவம் செய்வதாவது!!!. குழந்தாய்!, நான் செய்த பாபத்திற்காக தான் உனக்கு இந்த தண்டனை.. நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வா. நீயும் நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும் உள்ளது”” . கை பிடித்து கூரேசனை ஆசார்யன் கூட்டி சென்றார், நிஜமும் நிழலும் ரங்கநாதர் ஆலயம் அடைந்தது. ஸ்ரீ வைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் ஆலயத்தையும், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள் நூலகம் எல்லாம் நாசமாக்கியிருந்தான். இருவரும் தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர். ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம். லக்ஷ்மண பெருமாளாக ராமருக்கு அவர் ஆற்றிய தொண்டு ராமரை நெகிழ வைத்து எப்படி கைம்மாறு செய்வது என தோன்றி கூறேசனாக அவதரித்து ராமானுஜருக்கு சேவை செய்வதன் மூலம் கடனை தீர்த்து கொண்டார் என சொல்வதுண்டு. ராமானுஜருக்கு 115 வயதாகிவிட்டது. கூரேசரும் இப்போ கிழவர், கண்ணற்றவர் ஒரு நாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு அங்கேயே நின்றார் கூரேசர்.
“”என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே???”” என்றான் ரங்கன்
“எனக்கு குறை யொன்று மில்லை கோவிந்தா!! . எதோ உன் முன்னால் நின்று ஆத்ம திருப்திக்கு மனசுக்குள்ளேயே பாடவேண்டும் என தோன்றியது.””
“"எனக்கு இன்று உன்னை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எதாவது என்னிடம் கேளேன் ??”
“ரங்கா ! என்ன விளையாடுகிறாயா எனக்கு தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லையே. நான் என்ன கேட்பது உன்னிடம்??”
“அப்படியொன்றுமில்லை, நீ எதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!!”
“சரி ரங்கா, என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்து கொள்ளேன் !!!!”
“”ஹும்” “ ஹும்”” வேறே எதாவது கேள் கூரேசா !!”
“வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்.??!””
“சரி உன் விருப்ப படியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, உன்னை சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம் அளிக்கிறேன் !!”
பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார். ராமானுஜருக்கு மேற்கண்ட சம்பாஷனை தெரியவந்தது. ஆனந்தத்தில் கூத்தாடினார்.
ஒரு சிஷ்யன் கேட்டான் ஆச்சர்யரே என்ன ஆயிற்று ?? “ ச்ரேஷ்டன் கூறேசனால் எனக்கும் நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனை சார்ந்தவனல்லவா”” . தொண்டு கிழவர் கூரேசர் வீடு சென்றார்.
“கூரேசா”, நீ என்ன கார்யம் செய்துவிட்டாய் உன் குருவாகிய என்னை கேட்காமலேயே ??”
கூறேசருக்கு புரியவில்லை, பதில் சொல்லவில்லை விழியின்றி விழித்தார்
“ஏன்
பேசமுடியவில்லை உன்னால்?? எதற்காக ரங்கனிடம் உடலிலிருந்து விடுபட கேட்டாய்?. நான் உன்னைவிட முதியவன் இருக்கும்போது எனக்கு முன்பு நீ இடம் பிடிக்கவா?? சொல் கூரேசா ஏன் அவ்வாறு கேட்டாய்??”
“சுவாமி!! நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்”
“புரியும்படியாக சொல் கூரேசா. மழுப்பாதே””
“”நீங்கள் சொல்லிகொடுப்பீர்களே "முடியுடை" என்கிற பாசுரம். அதில் வருமே "பரம பதம் சென்ற மூத்தவர்கள், இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது வாசலில் நின்று வரவேற்பர் என்று " எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று மூத்தவர்கள் வரும்போது முறையாக மரியாதையுடன் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகவே நான் முன்பாக செல்ல வரம் கேட்டேன்””. என்றார் கூரேசர். ஆடிப்போனார் ஆசார்யன்
சிரித்துகொண்டே " என்னருமை கூரேசா வைகுண்டத்தில் வயது ஏது? இளையவர் யார்? முதியவர் யார்? பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்? தெரிந்தும் கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உன் மனம் விழைந்தது புரிகிறது. என் குழந்தாய் !! உனக்கு ஈடேது??” ஆசார்யன் கண்களில் நீர்மல்க கூரேசனை தழுவிக்கொண்டார் .””நீ தான் என் ஆத்மா உன்னை நான் எப்படி பிரிய முடியும்?? இந்த தள்ளாத 115 வயது கிழவனை விட்டு போக பார்க்கிறாயா? என்னையும் உன்னோடு கூட்டி செல்””. கூரேசன் . சிலையாக நின்றார். இறைவன் முன்பு நின்றிருந்தபோதும் இந்த எண்ணம் தோன்றாமல் போனதே என சிந்தித்தார் . “”என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!!” என்று ராமனுஜரின் கால்களை பிடித்தார்.
“கூரேசா உனக்கு வரமளித்த ரங்கநாதன் எனக்கும் வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன் எனக்கு முன் போகாமல் உன்னை தடுக்க வரம் தேடுகிறேன்---- இல்லை. தவறு.
தவறு, ரங்கனின் ஆக்னையை மாற்ற நான் யார்???. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை””
ஒரு கணம் யோசித்த ஆசார்யன் தொடர்ந்தார் “”கூரேசா!! நீ போய்விட்ட பிறகு நான் எப்படி இங்கு வாழ முடியும்? பரமபத நாராயணன் உன்னை கவர்ந்தான். நீ அங்கே செல். நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் இருக்கிறேன்.”” சில மணி துகள்கள் உருண்டன கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந்தனர். அவர்களில் ஒருவராவது கூறேசனாக முடியுமா..........?
J.K. SIVAN
No comments:
Post a Comment