Saturday, January 2, 2021

PURUSHAMRUGAM



 


புருஷாமிருகம்   J K   SIVAN 


''என் புருஷனா... அதை ஏன்  கேக்கறே... அவன் எல்லாம்  ஒரு  புருஷனா.... மிருகம்.  காண்டா மிருகம்...''...   இது மாதிரி நிறைய  கேட்டதுண்டு. வேறே  புருஷா மிருகம் சுத்தமா  தெரியாது.''
என்றான்  ராஜப்பா.   அவனுக்கு சொல்லும்போது உங்களுக்கும்  சொல்றேன் இதை. கேளுங்கோ, சாரி,  படியுங்கோ :

என் சிறிய வயதில்  கோடம்பாக்கம்  வடபழனி ஆண்டவர் கோவில் அருகேயும் பின்னர்  ஆற்காடு ரோடு  வெங்கீஸ்வரர் கோவில் அருகேயும்  வசித்ததால்   இந்த  கோவில்களுக்கும்  மற்றுமுள்ள சில  கோவில்களுக்கும், வாகன மண்டபங்களுக்கும்   சென்று விளையாடுவது  எங்கள் பொழுதுபோக்கு.

மூஷிகவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை,கருட வாகனங்கள் தெரியும்.  ஒரு வாகனம்   இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்ட ஒரு  புது வாகனமாக  வேடிக்கையாக இருந்தது.  ''இது தாண்டா  புருஷா  மிருகம்''   என்று  அப்பா  ஒருநாள் காட்டினார்.  அதை  சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஈடுபாடும் இல்லாமல் போய்விட்டது.  அது  என்போல இன்னும்  பலருக்கும் இன்னும் கூட  தெரியாமல் இருக்கலாம்? நிறைய  சிவன் கோவில் உற்சவங்களில்  மனித தலையுடன் ஒரு மிருகஉடல்    மண்டி போட்டு உட்கார்ந்து  உத்ஸவ  விக்ரஹத்தை தூக்கி வருவதை  நிறைய பேர்  
பார்த்திருப்பீர்கள். 
 அப்படித்தானே? 

 புருஷாமிருகமென்று  ஒன்றா?   புருஷர்களை  மிருகமாக  திட்டுவது  தானே நமக்கு பழக்கம்.  எருமை மாடு,  பன்றி,  நாய்,  குரங்கு என்று சொல்வோம்.  ஆனால்  அது எப்படி   புருஷ மிருகமா கும்?

மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. என்  ''ஐந்தாம் வேதம் '' புத்தகத்தில் கூட அதை   எழுதி இருக்கிறேன்.    யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்கிறான்.  அது வெற்றிகரமாக நிறைவேற  புருஷாமிருகத்தை அந்த யாகத்திற்கு கொண்டுவரவேண்டும்.  

''டேய்  பீமா  நீ தான்  சரியானவன். போய்  அதை  அழைத்துக் கொண்டு வா' என்று  யுதிஷ்டிரன் அனுப்ப,  பீமன் எங்கெங்கோ   காட்டில் அதை தேடுகிறான்.  ஒரு நடுக்காட்டில் அதை பிடித்து  ''என்னுடன் வா'' என்று வேண்டிக்  கேட்கிறான்.  

''ஓஹோ,    உன்  தமையன்  யுதிஷ்டிரன்  ராஜசூய யாகமா , நான் வருகிறேன்  ஆனால் ஒரு கண்டிஷன்.  நானும்  நீயும்  இங்கிருந்து   ஓடுவோம்.  என்னை விட நீ முதலில் ஹஸ்தினாபுரம் போய்  சேர்ந்தால் நான் உன் அடிமை.   நீ முதலில் ஓடு.   நாலு காத  தூரம் நீ ஓடியபிறகு  நான் உன்னை துரத்துகிறேன். ஹஸ்தினாபுரம் போய்  சேர்வதற்குள் என்னிடம் நீ பிடிபட்டால்   நீ  என்  அடிமை. உன்னை தின்றுவிடுவேன்.  நான்  தோற்றால்  நீ சொல்வதெல்லாம் செய்கிறேன். சம்மதமா?'' . நிபந்தனை  ஒப்புக்கொள்ளப்பட்டது.

''ஓடு''  என்றது  புருஷாமிருகம்.  பீமன் தலைதெறிக்க  ஹஸ்தினாபுரம் நோக்கி  ஓடினான்.  புருஷாமிருகம் வேகமாக அவனை துரத்தியது.   அவனை விட  அதன் வேகம்  அதிகம் என்று புரிந்து  கொண்டான்.  எப்படியோ  ஒரு  காலை   ஹஸ்தினாபுரம் எல்லைக்குள்  வைத்துவிட்ட சமயம்  புருஷாமிருகம் அவனது இன்னொரு காலைப் பிடித்து விட்டது. 

''நான் உன்னை ஜெயித்து விட்டேன். இனி பீமா  நீ என் அடிமை ''என்றது.  நான் நீ பிடிப்பதற்கு முன் ஹஸ்தினாபுரம் எல்லையை  நான்  தொட்டுவிட்டதால் நீ தோற்றாய் , நான் தான் ஜெயித்தவன்.  நீ தான்  என் அடிமை''   என்றான் பீமன்.   ரெண்டு  பேரும்  நீதி தவறாத  யுதிஷ்டிரனிடம் தத்தம்  வழக்கை   எடுத்துச் சொன்னார்கள்

யுதிஷ்டிரன் அளித்த தீர்ப்பு வினோதமாக இருந்தது. ''இருவர்  சொல்வதிலும் நியாயமுண்டு.  ஆகவே  பீமனை ரெண்டாக வெட்டுவோம்.  நீ ஜெயித்ததாக சொல்கிற   நீ பிடித்த  அவனது  கால் பகுதி  சேர்ந்த  பாதி உடல் உனக்கு.  மீதி உடல் பாகம்  அவன்  ஜெயித்ததாக சொல்வதால் என்னிடம் இருக்கும். 

''யுதிஷ்டிரா,இது என்ன விபரீத தீர்ப்பு.  அவனை ரெண்டாக வெட்டி கொல்வதை  விட என்னிடமே அடிமையாக விட்டு விடலாமே?

''நீ சொல்வதில் நியாயமில்லையே புருஷாமிருகமே , அவன் உடலில் பாதி  உன் அடிமையில் லையே? எப்படி  நீ உரிமை கொண்டாட முடியும்?

''உன் சகோதரன் என்று கூட பாராமல் நீ  நேர்மையாக  தீர்ப்பளித்ததால் என் பாதியை விட்டுத் தருகிறேன். நீயே  அவனை முழுதாக வைத்துக் கொள் ''என்றது புருஷாமிருகம்.  புருஷாமிருகம் வந்ததால் யாகம் வெற்றிகரமாக முடிந்து தக்க பரிசுகளுடன் யுதிஷ்டிரனை வாழ்த்திவிட்டு  காட்டுக்கு திரும்பியது.    

இந்த கதை  வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.  வியாக்கிரபாதர் ஒரு முனிவர். சிவபக்தர். வண்டுகள் தொடாத மலர்களை பறித்து சிவனுக்கு  அர்ச்சனை செய்ய  காடும்  மலைகளும், மரங்களும், செடியும் ஏறி பறித்தார்.  கல்லும் முள்ளும், இடையூறாக இருந்ததால் ''பரமேஸ்வரா எனக்கு புலியின் கால்களைக் கொடேன்''  என்று  கேட்டுப் பெற்றுக்கொண்டவர்.  அவர்  புருஷாமிருகம் இல்லை. 

புருஷ மிருகமும்  ஒரு சிறந்த சிவபக்தன்.  வேகமாக ஓடக்கூடியது.  அதன் பலஹீனம்  weakness  என்ன  என்று பீமன் தெரிந்து வைத்திருந்தான்.  வழியில் எங்காவது  சிவலிங்கத்தை பார்த்து  விட்டால்  புருஷாமிருகம் நின்றுவிடும். சிவபூஜை செய்த்துவிட்டு தான் பயணம் தொடரும். 

யுதிஷ்டிரனின் ராஜசூயயாகத்தில் யாகசாலை தூய்மை பெற புருஷாமிருகம் தேவைப்பட்டது.  நாம் கிரஹப்ரவேசம்   சுப கார்யங்கள் செய்யும்போது பசுமாட்டை கொண்டுவருவதில்லையா. அதுபோல்.    பீமன்  தொந்தியும் தொப்பையுமானவன் அல்ல.  வாயு புத்ரன்.  ஹனுமான் சகோதரன். வாயு எவ்வளவு வேகம் என்பதை  புயல்கள் நமக்கு அறிவுறுத்துகிறது அல்லவா?  ஆனால்  புருஷாமிருகம் இன்னும் வேகமாக ஓடும்.   பீமனை  புருஷ மிருகம்  நெருங்கும் போதெல்லாம்  பீமன்  அதன் பார்வையில் படும்படியாக  ஒரு  சிவலிங்கத்தை  கீழே  வைத்து விட்டு வேகமாக ஓடுவான்.  நிறைய  சிவலிங்கம் கையில்  ஸ்டாக்  வைத்திருந்தான். 
புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும்,  நின்று  தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, அப்புறம்  வேகமாக  அவனைத் துரத்தும். 

இப்படியே  ஹஸ்தினாபுரம் எல்லை வரை பல சிவலிங்கங்களை வழியில் வைத்துவிட்டு  ஓடினாலும்   ஒரு கால்  ஹஸ்தினாபுர எல்லையில் இருக்கும்போது இன்னொருகாலை பின்னால்  புருஷாமிருகம் பிடித்துவிட்டது. 

இந்த  புருஷ  மிருகம்   மனித தலை, புலி உடல்  ....உள்ட்டா   நரசிங்கம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்...சிலைகள் பல கோவில்களில் இருக்கிறது.  யாளி பார்த்திருக்கிறீர்களா?  அது மாதிரி. 

புருஷ மிருக சிற்பங்களை  ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். புருஷ மிருகத்தின்  உடல் சிங்கத்தை போலவும் தலை ஒரு தாடி வளர்த்த ரிஷி போலவும் உள்ளது. புருஷ மிருகத்தின் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் கோயிலில் உள்ள சக்கரம் போல் செதுக்கப்பட்டுள்ளது. ரிஷியின் முகம், தாடி, தலைமுடி மிருகத்தின் கால்களின் நகங்கள், வாலில் உள்ள கொத்தான முடி முதலியன சிறப்பாக ஒரே கல்லில் மிகச்சிறந்த சிற்பியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களுக்கு இணையாக உள்ளது. இந்த புருஷ மிருக சிலை என்றால் அது மிகையாகாது. எனக்கு தெரிந்து  சைதாப்பேட்டை  காரணீஸ்வரர் கோவிலில்  புருஷாமிருக வாகனம்  பார்த்தமாதிரி ஒரு கவனம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...