Saturday, January 9, 2021

ABIVADHANAM


   ''அபிவாதயே.... தெரியுமா?''   J K   SIVAN 


எனக்கு தெரிந்து  இப்போதெல்லாம்  அபிவாதனம் சொல்லும்  பழக்கம்  ரொம்பவே குறைந்து விட்டது. எத்தனையோ  யுகங்களாக   தலைமுறைகளாக புழக்கத்தில் இருந்த பழக்கம் இது. உபநயனம் ஆனவுடன் பிரம்மச்சாரியாக  அபிவாதயே  சொல்ல ஆரம்பித்தவன்  சாகும் வரை பெரியவர்களுக்கு மரியாதையோடு தன்னை அறிமுகப்படுத்தி  ஆசி பெறுகிற வழக்கம் நம்மிடையே உண்டு.

எனக்கு  மேல்  துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டுஅபிவாதயே  சொல்ல  முன்பு போல்சந்தர்ப்பங்கள் குறைந்து விட்டது.    மூத்தவர்களை சந்தித்தால்  ஒன்று அவர்கள் இதை எதிர்பார்க்காத  ''வேறு வகை''  யினராக இருக்கிறார்கள்.  அல்லது  வயதில் மூத்தவர்களுக்கு அபிவாதயே சொல்லலாம் என்றால் அதிகம் பேர் இப்போது இல்லை.  எனக்கே  82.

இன்னொரு விஷயம்.  அப்படி  யாராவது இருந்து  அபிவாதயே சொல்லலாம் என்றால்  இப்படி சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள்  பத்தாம் பசாலிகள் என்று ஒரு அபிப்ராயம் பரவி விட்டது.  காலத்தின் கோலத்தில்  இது  ஒருவேளை அநாகரீகமான காரியமோ ?  விசிட்டிங் கார்டு கொடுப்பதோடு  அறிமுகம் நின்றுவிட்ட காலம் இது .

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  நம்  வீட்டில்,  நண்பர்களின்,  உறவினர்களின்  நிச்சயதார்த்த, கல்யாண நிகழ்ச்சிகளில் ஓலை வாசிக்கும்போது இன்னாரின் பேரனும், இன்னாரின் மகனுமான  மாப்பிள்ளையும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மகளுமான பெண்ணும் என்று சபையில் எல்லோருக்கும்  கேட்கும்படியாக  வாத்தியார்  வாசிப்பார்.   பெண்வீட்டார்  பிள்ளை வீட்டார் இருவரும்  நிச்சயதார்த்த பத்திரிகை இப்படி வாசித்து எல்லோர்  முன்பாக  சாட்சியத்துடன் கையெழுத்திட்டு பெண் வீட்டார் பிள்ளை வீட்டார்  நிச்சயதார்த்த பத்திரிக்கை மாற்றிக் கொள்வார்கள்.

 வட மாநிலங்களிலும், குறிப்பாக ஜாட் பிரிவினரிடம் ராம் சிங் வல்து தசரத் சிங் வல்து திலீப் சிங் (திலீப் சிங்கின் மகன் தசரத் சிங்கின் மகன் ராம் சிங் என்று அர்த்தம்) மாதிரி சொல்லிக் கொள்வதை கேட்கலாம். பத்திரங்களிலும் இப்படி எழுதுவது சகஜம்.

இங்கே இரண்டு மாற்றங்கள் – ஒன்று உடனடி மூதாதையரை விட, புராண கால மூதாதையரை அறிவிப்பது. அப்புறம் சாகை, சூத்ரம் (சூத்ரம் என்றால் என்ன என்று விளக்கத்தை படித்த பிறகும் சரியாக புரியவில்லை.) என்று இன்னும் விவரங்கள்.

அபிவாதனம் என்று முதலில் சொன்னேனே, அதன் வாசகத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்.

அபிவாதனம் சொல்வதில் முதலில் ஒருத்தருக்கு என்ன கோத்திரமோ, அதை ஆரம்பித்து வைத்தவர்களான மூல ரிஷிகளின் பெயர்கள் வரும். இதற்கு  ''ப்ரவரம்''  என்று பெயர். ரிஷி என்றால், வேதங்களில் அது வரை லோகத்துக்கு வந்திருக்காத ஒரு புது மந்திரத்தை அகண்ட ஆகாசத்திலிருந்து கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தவர்.  அவர்களை மந்த்ர  த்ரஷ்டா
என்கிறோம்.

ஒவ்வொரு கோத்ரத்திலும் மூல காரணமாக    ஐந்து  ரிஷிகளாவது   இருந்திருக்கிறார்கள். அந்த ரிஷிகளிலும் யார் ரொம்ப முக்கியமானவரோ, அவர் பெயரிலேயே கோத்ரம் இருக்கும். ஆங்கீரச கோத்ரம் என்றால்  வம்ச ஆரம்பத்தில் வந்த முதல் ரிஷியான ஆங்கீரசர் பெயரால்  உண்டானது

இப்படித்தான்  கௌன்டின்ய கோத்ரம்,  அந்த  வம்ச ஆரம்ப மூன்று ரிஷிகளில், மூன்றாமவரான கௌண்டின்யரின் பெயரால்  ஆரம்பித்தது.  

நாம்  சொல்கிற ப்ரவரத்தில்  பெரும்பாலான கோத்ரங்களில் மூன்று ரிஷிகளின் பெயர் வரும். அப்படிப்பட்ட ரிஷிகளில் – எவர் பெயரில் கோத்ரமிருந்தாலும், அந்த ரிஷிகளின் பரம்பரை க்ரமம், lineage, ஆதி முதலில் இருந்த ரிஷி, அப்புறம் அவருடைய பிள்ளை ரிஷி, அதற்கப்புறம் அந்தப் பிள்ளையின் பிள்ளை(பேரன் ரிஷி )  என்பதாகவே வரும்.

அம்மா அப்பாவுக்கு  பண்ணும்  தர்ப்பணத்திலும்  (பித்ரு தர்ப்பணம்)  இதே போல் மூன்று வம்சாவழி பேரை சொல்லலை எள்ளும் தண்ணீரும் விடுவது வழக்கம்.

அப்பா இல்லாமல்  அவருக்கு தர்ப்பணம் பண்ணும்போது முதலில்  அப்பாவின்  பெயரில் (சர்மா என்று பூணல் போடும்போது இட்ட பெயரில்   (ஸ்டைலாக    XYZ   ஐயர்  என்று சொல்லாமல்)  ஆரம்பித்து, அப்புறம் அவருடைய அப்பா,(நமது தாத்தா)   அதற்கப்புறம் அவருக்கும் அப்பா(நம்முடைய கொள்ளு தாத்தா)  வரை  மூன்று தலைமுறை பெயர்களை   வரிசைப்படுத்திக் கொள்கிறோம்.  

 கல்யாணங்களில் கன கோஷமாக ப்ரவ்ரம் சொல்கிறது வழக்கம். வதூ-வரர் என்ற கல்யாணப் பெண்ணும் பிள்ளையும் சகோத்ரமாக இல்லாமல் வெவ்வேறு கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது முக்கியமான விதியாதலால், அந்த விதியை அனுசரித்தே ஒரு விவாஹம் நடக்கிறது என்று சபைக்கு ப்ரகடனம் செய்யும் உத்தேசத்துடன் இப்படி கன கோஷமாக ப்ரவரம் சொல்லுவது. அதன்போது, அபிவாதனத்தில் சொல்லுவது, தர்ப்பணத்தில் சொல்லுவது ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவார்கள். முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.  ராதா கல்யாணம்,  சீதா கல்யாண உற்சவங்களில் கூட  அப்பா,தாத்தா கொள்ளுத்தா, அதே   போல் பெண்ணின் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா பேரை சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள்.

ஆகவே  அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள், அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறோம்.


 இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் இரு கைகளை காதுகளை மூடி தலை குனிந்து  எதிரே நிற்கும் பெரியவரிடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.  அபிவாதனம்  நமஸ்காரம் பண்ணியபிறகு சொல்வது தான் கிரமம் . அதாவது இப்போது உங்களை நமஸ்கரித்த  நான் இன்னான்  என்று காட்டிக் கொள்வது.

இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – என்றால்  ''அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன்''  என்று அர்த்தம்.  தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டுகிறேன்  நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.

ஸன்யாசிகளுக்கு  நாம்  அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்ற பெண்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்  செய்வது வழக்கம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...