Wednesday, January 27, 2021

ADHI SANKARA

 


ஆதி சங்கரர் -     J K  SIVAN


            ஜாக்ரதை   ஜாக்ரதை                                                


அந்த  ராஜாவின் காலத்தில் தினத்தந்தி  ஹிந்து பத்திரிகைகளோ டிவியோ  ரேடியோவோ இல்லை.   ஊர்க் காவல்  இரவெல்லாம் ரோந்து சுற்றும்.  ராஜாவே  மாறுவேஷத்தில்  ஊரெல்லாம் சுற்றுவான். யார்  என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு மறுநாள் தப்பாவனவர்களுக்கு தண்டனை நிறைவேறும்.   அதனால் தான்  ஜனங்கள் '' பகலில் பக்கம் பார்த்து பேசு,. இரவில் அதுவும் பேசாதே''  என்ற கொள்கையை கடைப்பிடித்தார்கள்.  ராஜா  எந்த ரூபத்தில் மாறு வேடத்தில்  வருவானோ, எப்படி  எதை கேட்பானோ யாருக்கு தெரியும்?

ராஜா  நியமித்த  ஆள்  இரவில் ரோந்து சுற்றும்போது  பறை அறைந்து கொண்டு  ''ஜாக்ரதை  ஜாக்ரதை '' என்று கத்தி  மக்களை  விழிப்புணர்ச்சியோடு   இருக்க வைத்து  களவு,  தவறுகள் நடக்காமல்  காப்பாற்றுவான்.

இப்போதெல்லாம்    நங்கநல்லூரில்  இன்னும்  கூர்க்கா இரவு சிறிது நேரம்  விசில் ஊதி விட்டு மாதாந்திர  காசு வாங்காமல் போவதில்லை.   தெருக்களில்  முன்பெல்லாம்  ராத்திரி சில தூக்கம் வராத  முதியோர்  கையில் குச்சிகளோடு  விசில் டார்ச்  எல்லாம் எடுத்துக் கொண்டு   மெதுவாக  நடந்து வருவோம்.  நைட் பட்ரோல் என்போம்.   நடுராத்திரியோ விடியற் காலையோ   விசில் ஊதிக்கொண்டு வருவோர்க்கு   பால்  டீ    சப்ளை செய்வோம்.  நானும் அந்த கும்பலில் ஒருவனாக வந்து என் வீட்டிலேயே  டீ   கை நீட்டி   வாங்கி குடித்திருக் கிறேன்.

 போலிஸ்காரர்கள்  எங்கள் வீட்டு  வாசலில் கட்டி வைத்திருக்கும் நோட்டு புத்தகத்தில்  கையெழுத்து போட வேண்டும் என்று  ஒரு காலத்தில்  ஏற்பாடு இருந்தது.

ஆதிசங்கரருக்கு   இந்த  ரோந்து விஷயம் எப்படியோ  ஆயிரம்  வருஷங்களுக்கு முன்பு கூட  தெரிந்து இருக்கிறது. அவருக்கு தெரியாதது தான் ஒன்றுமே  இல்லையே!. உடனே கற்பனைக் குதிரையைத்   தட்டி  எழுப்பினார். வைராக்கியம் உண்டாக்கும் அருமையான ஸ்லோகங்கள் உருவாயிற்று. அன்றாட த்யானத்துக்கு மிகவும் உகந்த  அர்த்தமுள்ள வாக்யங்கள். அதன் ஸாராம்சம்:

 ஒரு காவல்காரன். வழக்கம்போல்  தப்பட்டை அடித்துக்கொண்டு  நடுநிசியில் ''ஜாக்ரதை'' என்று கத்திக்கொண்டே போவான்.  ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று. அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு  ''ஜாக்ரதை'' சொல்லிக்கொண்டு அப்பன் வேலையைச்  செய்தான்.

அடுத்த நாள்  ராஜாவே  அந்த  காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.

''ஐயோ,   ராஜாவே  வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன  பெரிய தவறு ஏதாவது   செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?'' காவல் காரன் நடுங்கினான்.

ஆனால்  ராஜா அந்த பையனுக்கு  பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்?  எதற்காக?  முதல் நாள் இரவு  பையன் '' ஜாக்ரதை.  ஜாக்ரதை''    என்று அப்பாவை போல்   சும்மா கத்திக்கொண்டு போகவில்லை.  ஸ்லோகமாக  சில வார்த்தைகள்  சொன்னதுதான் ராஜாவை  மயக்கியது.  அந்த நீதி வாக்யங்களை
அறிவோம்.   நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா?

1.  माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः। अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥
“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா,   அர்த்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

''அடே.   தூங்குமூஞ்சி!  விழித்துக் கொள்ளடா.  அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா  தம்பியென்னடா,காசும் பொய்,  வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,.   காயமும் பொய்  காற்றடைத்த பை,  இதையெல்லாம் நம்பி ஏமாறாதே,  இதிலிருந்து உடனே விழித்துக் கொள்  ஜாக்ரதை ஜாக்ரதை,''

2.   जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः। सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥
“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:  சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ  ஆட்டிவைக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,  இதிலிருந்து விழித்துக்கொள் ஜாக்ரதை.  ஜாக்ரதை.

3.कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः। ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥
“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா; ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும்  உன்னிடமே இருக்கும்  திருடர்களடா.  .உன் உள்ளே  இருக்கும்  ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை  திருடுபவர்கள்.   விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே  திருடர்களைத்  தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே  ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.

 4. आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया। आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥
“ஆசாயா  பத்யதே  ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

 ஆசையெல்லாம் தோசை தான்,  மனித மிருகமே,   எதிர்பார்த்து ஏமாறுவதே உன் வழக்கமா?  நாம், மனக் கோட்டை மன்னார்சாமிகள், அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ள வேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.

5.  सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्। विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥
ஸம்பத , ஸ்வப்னா ஸ்ங்காஸா  ; யௌவனம்  குசுமோபம் ; விதுச் சஞ்சலம்  ஆயுஷம்  தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா  

“நம்முடைய சொத்து பத்து, சுகம் எல்லாமே கனவில் கட்டிய  மாளிகைகள், இளமை,  வாலிபம் எல்லாம்  நிரந்தரமல்ல தம்பி,  நேற்று மொட்டு,  காலை மலர், மாலையில் வாடிப்  போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன,  நான் என்ன,  விழித்துக் கொள், ஜாக்ரதை,  ஜாக்ரதை,.

6. क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः। यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥
க்ஷணம் பித்தம், க்ஷணம் சித்தம் க்ஷணம் ஜீவிதமாவயோ: யமஸ்ய கருணா  நாஸ்தி தஸ்மாத்  ஜாக்ரத  ஜாக்ரத

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிதான்  நம் வாழ்வு,  அதை சாஸ்வதம் என்று நம்பி மயங்காதே.  சொத்து சுதந்திரம், டாம்பிகம்,  பேர்,  புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட  நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் .  சரியான நேரத்தில் வந்துவிடுவான் .ஜாக்ரதை,  ஜாக்ரதை. 

7 यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः। तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥
யாவத்  காலம் பவேத் கர்மா தாவத் திஷ்டதி ஜந்தவ ; நஸ்மின் க்ஷீணே  வின்ஸ்யந்தி தத்ர கா பரிதேவனா
 
சாவி கொடுத்தால் , அது வேலை செய்யும் வரை தான்  இந்த குரங்கு பொம்மை  டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும்.  கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.  அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான். இதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை  வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...