Saturday, January 23, 2021

PESUM DEIVAM

 



பேசும் தெய்வம்        J K  SIVAN 

மஹா பெரியவா  பக்தர்களே,  
உங்களுக்கு  ஒரு  அதிசய  அபூர்வ பிரசாதம்  அளிக்கிறேன்.   வாயால் சாப்பிட எதுவுமில்லை. விழுங்க,  ஆனந்தமாக  கண்ணால் விழுங்க, மனதை நிரப்ப: இத்துடன் ஒரு போட்டோ   (டிசம்பர் 1929ல் எடுத்தது) . இணைத்திருக்கும் போட்டோவுக்கு 92 வயது நீங்கள் பார்க்கும்போது. 

உற்று பாருங்கள்.  அதில் ரெண்டு பேர் நிற்கிறார்கள். ஒரு  முதியவர் கையில் தண்டமுடன், இன்னொருவர் 35 வயது வாலிபர்.  ஏதோ ஒரு மாடியில்.   பின்னால் திருவண்ணாமலை கோவில் கோபுரம் தெரிகிறதா? முதியவரை  மராத்தி  ஸ்வாமிகள் என்போம்.  தமிழ் தெரியாது.  சாதுர்மாஸ்யம் சமயம் திருவண்ணாமலை கார்த்திகை  தீப தரிசனம் பார்க்க வந்தவர்.

முதியவர்   பிரயாணத்தில் எங்கேயோ தன்னுடைய  தண்டத்தை மறந்து வைத்துவிட்டு  தவிக்கிறார். சந்நியாசி தண்டம் இல்லாமல்  ஒரு கணமும்  இருக்கக்கூடாதே .  தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். யாரிடம் உபதேசத்தோடு தண்டம் பெறுவது.  எங்கே இன்னொரு சந்நியாசியை தேடுவது?  யாரோ  சொன்னார்கள் தென்னார்க்காடு ஜில்லாவில்  மணலூர்பேட்டை கிராமத்தில்  காஞ்சி காமகோடி மட சங்கராச்சார்ய ஸ்வாமிகள் முகாம் இட்டிருக்கிறார் என்று. அங்கே போனார் முதியவர்.

என்ன  தெய்வானுகூல  சந்தர்ப்பம்  பாருங்கள்!.    அந்த  சமயத்தில்  மஹாபெரியவாளுக்கு உடல்நலம் சரியில்லை. எழுந்திருக்க , உட்கார, நிற்க,  முடியாமல் சிரமம். அவரை யாரும் தொடவும் கூடாது.  அப்படியும் விடாமல் தினமும் சந்த்ரமௌளீஸ்வரர் பூஜை விடாமல் தினமும்  அற்புதமாக  நடத்துவார். பார்த்த பக்தர்கள் மறுபிறவி இல்லாதவர்கள்.  

இந்த நேரத்தில்  மராத்தி ஸ்வாமிகள் பெரியவாளை சந்தித்து அவரை வணங்கி அவரிடம்  தண்டம் பெறுகிறார். வயதில் சிறியவராக இருந்தாலும் தண்டம் அளித்த சந்நியாசி குரு அல்லவா?  மராத்தி ஸ்வாமிகள்  பெரியவாளை தொட்டு தூக்கி நடத்தி  ஒத்தாசை செயகிறார். சிறிது நாளில் பெரியவா பூரண குணம் அடைந்தார்.   இன்னொரு விஷயம்  மஹா பெரியவாளுக்கு மராத்தி பாஷையும் தெரியும். எனவே  இருவரும் பேசுவதற்கும்  சௌகரியமாக போயிற்று.

மராத்தி ஸ்வாமிகளுக்கு  பெரியவாளை விட  ரெண்டு மடங்கு வயசு ஜாஸ்தி. இருந்தாலும்  குருவான  பெரிய வாளுக்கு தினமும்  பசு  கோமயத்தால் தாம்பாளத்தில்   மஹா பெரியவாளுக்கு  பாத பூஜை  அபிஷேகம் செயது அந்த அபிஷேக நீரைத்  தான்  பருகுவார்.  அது தான் மராத்தி ஸ்வாமிகளின் நித்ய ஆகாரம்.

இன்னொரு விஷயம்  சொல்கிறேன். இது  சிலருக்கு அல்லது பலருக்கு தெரிந்திருக்கலாம்.  மஹா பெரியவா திருப்பதி செல்கிறார். நிழல்  மாதிரி எங்கும்  இந்த மராத்தி ஸ்வாமியாரும் செல்வார்.  பெரியவா ஏழு மலைகளையும் கடகடவென்று நடந்து திருமலை மேல்  வேகமாக ஏறிவிட்டார். அப்போது படிகள் வசதி, பஸ், வாகனம் எதுவும்  இக்காலத்தில் போல்  இல்லை.   பக்தர்கள்  மலைப்பாதையில் தான் நடந்து ஏறி மேலே செல்வார்கள் இறங்குவார்கள்.

மராத்தி ஸ்வாமிகள் மெதுவாக  ஏறி பின் தொடர்ந்தார்.  அதற்குள்  பெரியவா ஸ்ரீனிவாசன் ஆலய வாசலுக்கு சென்றுவிட்டார். அவரை  ஆலய  நிர்வாகி அதிகாரி  உள்ளே அழைத்து சென்று   வேங்கடவன் தரிசனம் செய்வித்தார்.  பெரியவா ஸ்ரீனிவாசன் தரிசனம் முடித்து வெளியே வாசலில் வந்து நின்ற  போது தான் மராத்தி ஸ்வாமிகள்  அங்கே  வந்து சேர்ந்தார்.

அந்த ஆலய  அதிகாரியை அழைத்து  மகா பெரியவா  மராத்தி ஸ்வாமிகளுக்கும்  பாலாஜி  தரிசனம் செயது வைக்க சொன்னார்.  அவர்கள்  தமிழில் பேசுவது மராத்தி ஸ்வாமிகளுக்கு புரியவில்லை.

''சுவாமி என்னைக் காட்டி ஏதோ சொல்கிறீர்களே, என்ன  விஷயம் ?''

''எனக்கு  இவர் பெருமாள்  தரிசனம் செய்வித்தார். அதே போல் உங்களையும்  பெருமாள் சந்நிதிக்குள்ளே அழைத்து சென்று  தரிசனம் செய்விக்க கேட்டுக்கொண்டேன்  ''

''இல்லை குருநாதா,  நான் உள்ளே சென்று  பாலாஜி தரிசனம் செய்ய விரும்பவில்லை''

''ஏன்  ஏதாவது காரணமா?''என்கிறார்  பெரியவா.

''என் குருநாதர் தான் எனக்கு பாலாஜி, அவரை தரிசனம் செய்தால்  அந்த திருப்தியே போதும்''

''பின் எதற்காக  இவ்வளவு கஷ்டப்பட்டு  பாலாஜி சந்நிதிவரை மலை ஏறி வந்தீர்கள்?''

''என் குருநாதர்  எங்கு சென்றாலும் நிழலாக பின் தொடர்வது தான் எனக்கு கடமை, விருப்பமும் கூட''

உலகத்திலேயே   ரொம்ப ரொம்ப  கஷ்டப்பட்டு  ஏழுமலை ஏறி வந்து  சந்நிதி வாசலில் நின்று உள்ளே சென்று பாலாஜி எனும் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்காத ஒரே  மனிதர்  அந்த  மராத்தி ஸ்வாமிகளாகத்தான் இருக்க முடியும். இந்த விஷயத்தை  ஸ்ரீ கணேச சர்மா சொல்லி யூட்யூபில்  கேட்டிருக்கிறேன்.

எனக்கு இது ஆச்சர்யம் இல்லை. இதே போல் ஒரு சம்பவம் நான் எழுதிய  ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்திழும்  திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யத்திலும்  இருக்கிறது .  சுருக்கமாக சொல்கிறேன்:  

ஆந்திர பூர்ணர்  என்ற பெயர் கொண்ட  வடுகநம்பிக்கு  தனது குருநாதர்  ஸ்ரீ ராமானுஜரின் பாதுகைகள் தான் ஆராதனை செய்யும்  ப்ரத்யக்ஷ  பெருமாள். குருவின் ஸ்ரீ பாததீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும்  உட்கொள்ளாதவர். குருநாதர்  ராமாநுஜரைத் தவிர  வேறு எந்த தெய்வமும் வேண்டாதவர். நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் போல  ராமானுஜருக்கு  வடுக நம்பி.  அவ்வளவு  அதீத குருபக்தி.  ராமானுஜரோடு எல்லா பெருமாள் ஆலயங்களும் செல்வார். ராமானுஜர்  பெருமாளை  சேவிக்கும்போது வடுகநம்பி ராமானுஜரை  வணங்கிக் கொண்டு  நிற்பார். 

ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் ரங்கநாத பெருமாள் முன்பு ராமானுஜர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடிவிட்டு   ''வடுகா, நீயும் ரங்கநாதனின் கண்ணழகைப் பாரடா'' என்று சொன்னார்.

''என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே..." எனும்   திருப்பாணாழ்வார் பாசுரத்தை பதிலாக  அளித்து  குருநாதரையே பார்த்து ரசித்து வணங்கி கொண்டிருந்தார் வடுகநம்பி.  குருபக்தி சிகாமணி. தினமும்  ராமாநுஜருக்கு பால் காய்ச்சி அளிப்பது வடுக நம்பிக்கு பிடித்த  ஒரு  முக்கிய வேலை.

ஒரு நாள், இராமானுஜருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது  வாசலில் மேள தாளம் சப்தம்.. நம் பெரு
மாள் திருவீதி ஊர்வலம் வருகிறார்.

“வடுகா, நம்பெருமாளை சேவிக்க  ஓடிவாடா''  என்று ராமானுஜர் கூப்பி டுகிறார். உள்ளிருந்தே  வடுக நம்பியின்குரல் ஒலிக்கிறது. 

''சுவாமி,  உம்முடைய பெருமாளை நான் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்காக நான் காய்ச்சும் பால் பொங்கி விடுமே. என் குருநாதருக்குப்  புரியும் பணிவிடை தான்  எனக்கு முக்கியம்''.  பட்டென்று பதில். ரா
மானுஜரு டைய பாதங்களில் தனது இறுதி மூச்சை விட்டவர்  வடுக நம்பி.

மராத்தி ஸ்வாமிகள்  வடுகநம்பியின் அவதாரமோ,  மதுரகவி ஆழ்வார் அம்சமோ??  பெரியவாளுக்கு தான் தெரியும்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...