கோபாலகிருஷ்ண பாரதியார் (1810-1896) - 1. J K SIVAN
தமிழில் அற்புதமாக, பக்தி தோய்ந்த, எளிய, இனிய சந்தம் மிகுந்த, கேட்டாலே தலை, கை உடல் ஆடவைக்கும், மனம் கவரும் பாடல்களை பலர் தந்திருக்கிறார்கள். இதற்கு சிறந்த இலக்கண ஞானம், கல்வி அறிவு வேண்டாம். பக்தி நெஞ்சில் ஆழப்பதிந்திருந்தால் அது தானே வேர் விட்டு வளர்ந்து வெளிவரும், மலரும். மயக்கும். அப்படி ஒருவர் தான் சிதம்பரம் கோபாலகிருஷ்ண பாரதியார்.
நாகபட்டினத்துக்கு பக்கத்தில் நரிமணம் எனும் கிராமம் உள்ளது. இப்போது அங்கே பூமியை தோண்டி பாதாளத்திலிருந்து எரிவாயு எடுப்பதாக எல்லாம் படிக்கிறோம். அங்கே ஒரு விலை மதிப்பிடமுடியாத ஒரு புதையல் கிடைத்ததே அது தெரியுமா?
சிவராம பாரதியார் எனும் சங்கீத உபன்யா சகர்,ப்ரவசன கர்த்தா பிழைப்புக்காக நரிமணம் , முடிகொண்டான், ஆனை தாண்டவபுரம், மாயூரம் என்று பல இடங்களில் குடும்பத்தை இடம் மாற்றி வாழ்ந்தவர். சிவராம பாரதிக்கு ஒரு மகன். கோபாலக்ரிஷ்ணன். பிள்ளைக்கு ஐந்து வயது முதல் சங்கீதம் கற்றுக்கொடுத்தார் அப்பா. அப்போது பிரபலமான சங்கீத வித்வான்களில் ஒருவர் கனம் கிருஷ்ணய்யர். (கனம் என்றால் குண்டான, இல்லை. அடிவயிற்றிலிருந்து ஸ்வரம் எழுப்பி உதடு அசையாமல் பாடுவது. அசுர சாதகம் செய்தால் தான் இது முடியும். இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன். உ.வே.சா. உறவினர். கனம் பாடுவதில் கிருஷ்ணய்யர் கெட்டி என்பதால் ''கனம் கிருஷ்ணய்யர்''என்ற விருது. கனம் கிருஷ்ணய்யர், மற்றும் ஹிந்துஸ்தானி உஸ்தாத் ராமதாஸ் ஆகியோரிடம் கோபால க்ரிஷ்ணன் சிஷ்யனாக சேர்ந்து கர்நாடக சங்கீதம் ஹிந்துஸ்தானி எல்லாம் கற்றுக் கொண்டான் . இது தவிர மாயூரத்தில் கோவிந்த யதி என்பவரிடம் வேதங்கள் கற்றான்.
இங்கிலிஷ் வந்து நம்மை குட்டிச் சுவராக்காத காலம். வளர்ந்து கோபாலகிருஷ்ண பாரதி ஆனார். பிரம்மச்சாரி. யோக பயிற்சி உண்டு. அறுபத்திமூவரில் ஒருவரான திருநாளைப் போவார் என்ற நாயனாரின் சரித்திரத்தை நந்தனார் சரித்திரம் என்று எழுதியது உலகப்புகழ் பெட்ற பாடல் திரட்டு.
நாயனார் தாழ்குல, தீண்டத்தகாத ஒரு சிவ பக்தர். கோபாலகிருஷ்ண பாரதி, கதா காலக்ஷேப பிரியரா தலால் தான் எழுதிய சரித்திர சங்கீத நாடகத்தை தானே பாடி பிரசங்கம் பண்ணினார். நந்தனார் சரித்ர கீர்த்தனை'' எங்கும் பிரபலமாயிற்று. இன்றும் பாடப் பட்டு வருகிறது.
நந்தனார் கதை தெரியாதவர்களுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம்:
நந்தனார் ஒரு தாழ்ந்த, தீண்டத்தகாத குலத்தவர் என சமூகம் ஒதுக்கி வைத்த காலம். ஏழை விவசாயி. சிதம்பர நடராஜன் மேல் உயிர். ஆனால் ஆலயப்பிரவேசம் பண்ண வாய்ப்பில்லை. தூர நின்றே வெளியே இருந்து தரிசனம் பண்ணவேண்டும் என்ற வாழ்க்கை லக்ஷியம். நிறைவேறுமா? விவசாயியின் எஜமானன் பண்ணையார் ஒரு ஈவிரக்கமில்லாத வேதியர் பிராம்மணர். இது கதையில் தான். அறுபத்து மூன்று நாயனார்கள் சரித்திரங் களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற திருநாளைப்போவார் சரித்திரத்தில் பண்ணை யார் ப்ராமண வேதியர் பாத்திரம் இல்லை. நாயனார் எந்த பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியதில்லை. தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் ''துடவை'' என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை திருநாளைப்போவாரும் பெற்றுத் தம் சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணம் சொல்கிறது. பிறந்தது முதல் சிவ சிந்தனை தவிர வேறே கிடையாது என சேக்கிழார் பாடுகிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் பிராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் கிடந்தாரென்று இல்லை.
கோபாலக்ரிஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தில் இப்படி ஒரு வேதியர் கொடுங்கோல் பிராம்மணரை சிருஷ்டி பண்ணியதும் ஒரு பிராம்மணரான கோபாலகிருஷ்ண பாரதி தான். அவர் சிவ பக்தியில் ஊறி கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் பக்தியில் கரைக்கும்படியான உயர்ந்த பாட்டுகள் கவனம் செய்தவர். ஒரு மஹா சிவராத்திரி புண்யகாலத்தில் சிவனோடு கலந்து விட்டவர். ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின சுபாவத்துடன் இருந்தவர் . நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் சாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்தவர் பாரதியார்.
கோ.கி. பாரதியார் காலத்தில் தமிழகத்தில் மிராஸ் வண்ணம் பிராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப்படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், ''இப்படித்தான் நம் ஜன்மா'' என்று சகித்துக்கொண்டு வாழ்ந்ததையும் அறிந்தவர். எந்த ஜாதியரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனு டனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டவே அவர் நேரில் கண்ட நிலவரத்தை நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை சிருஷ்டித்திருக்கலாம். பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே சீன்களைக் கற்பனைப் பண்ணி அருமையான சிவ பக்தி பாடல்களை புகுத்தி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப் பாடி இருக்கிறார்.
இன்னும் சில ருசிகர தகவல்கள் அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment