ரமே ராமே மனோரமே J K SIVAN
''இதோ அசலும் வட்டியும்''
நமது சனாதன தர்மத்தை பின்பற்றும்போது மற்ற மதத்தினரை நாம் இழிவு படுத்தவோ, புண்படுத்தவோ நினைப்பதில்லை. ஏனோ பிற மதத்தினர் நம்மை அலட்சியப்படுத்துகிறார்கள், அவமதிக்கிறார்கள், நமது வழிபாட்டு கோயில்களை இடித்தோ, விக்ரஹங்களை நொறுக்கி,உடைத்து, நம்மில் சிலரை மதம் மாற்றம் செய்வதில் கவனமாக இருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களை துன்பங்களை சோதனைகளைத் நமது ஹிந்து சனாதன தர்மம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமக்கு பொறுப்புணர்ச்சி பொறுப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் என்றும் பிற மதத்தினரை அவமதித்ததில்லை.
நாம் வணங்கும் ஸ்ரீ ராமர் ஒரு முஸ்லீம் ராஜாவுக்கு தரிசனம் கொடுத்ததை நமது சரித்திரமும் புராணமும் சொல்கிறதே. அதைப் பற்றி தான் சில வார்த்தைகள் சொல்லபோகிறேன்.
கோபன்னா ஒரு சிறந்த ராம பக்தர். அவருடைய மாமா மத்தன்னா. அப்துல் ஹசன் தானா ஷா என்ற கோல்கொண்டா முஸ்லீம் சுல்தானுக்கு மந்திரி. கோபன்னா, மாமாவின் செல்வாக்கால் சுல்தானின் கஜானாவிலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராசலம் ராமர் கோவிலை புதுப்பித்தார். விஷயமறிந்த தானா ஷா, ''கோவில் கட்ட என் பணம் கிடையாது எனவே பணத்தை உடனே கட்டு இல்லாவிட்டால் பன்னிரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை'' என்று ஆணையிட்டான். நல்லவேளை தலை தப்பியது. கோபன்னாவிடம் பணம் இல்லை. கோல்கொண்டா சிறையில் கோபன்னா ஜெயிலில் அடைக்கப்பட்டு வாடினார். ராமனையே நினைந்து உருகி பாடினார்.
கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?
ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில் இருவர் நின்றனர். ஒருவர் கையில் பெரிய மூட்டை . வாசல் காவலர்கள் ராஜாவிடம் அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.
''யார் நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?''
''நாங்கள் கோபன்னாவின் சேவகர்கள். அவர் ஏற்பாடு செய்து தங்களுக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்துகொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள்.
ராஜாவின் ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச் சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே பொற்காசுகள் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.
''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள். நாங்கள் வருகிறோம்'' - வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
ராஜாவின் ஆட்கள் சிறைக் கதவின் பூட்டை திறந்து கோபன்னாவை ''வாருங்கள் வெளியே'' என்று கூப்பிட்டதும் கோபன்னா எதற்கு என்று புரியாமல் விழித்தார். ஒருவேளை தலையைச் சீவப்போகி றார்களோ?
''எதற்காக என்னை கூப்பிடுடுகிறீர்கள்?''
''ராஜா உங்களை கூட்டிவரச் சொன்னார்''
ராஜா முன் நின்றார். ''கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை விட அதிகமாகவே திருபித் தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகி விட்டது'' என்று உபசரித்து அனுப்பினான் ராஜா.
கோபன்னாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
''ராஜா, நான் செல்வந்தனா? என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள், என்னிடம் எந்த செல்வமும் கிடையாது. எனக்கு உதவ யாரும் பணியாட்களும் கிடையாதே. ஏதோ தவறுதலாக என்னை விடுதலை செயகிறீர்களோ? என்று பயமாக இருக்கிறது. நான் பரம ஏழை'' . தட்டு தடுமாறி பதிலளித்தார் கோபன்னா.
''என்ன சொல்கிறீர்கள் கோபன்னா. இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, ஒருவர் நீலமான நிறத்தில் இருந்தார். மற்றவர் பொன்னிறம். இளையவராக இருந்தவர் கையில் தான் தங்க மோஹராக்கள் கொண்ட பை இருந்தது.
''ஓ அப்படியா. யார் என்று தெரியவில்லை மஹாராஜா? யார் என்று கேட்டீர்களா?''
''ஆமாம் நீங்கள் யார், உங்கள் பெயர் என்ன என்று கேட்டேனே?''
''என்ன சொன்னார்கள்?'' . வியர்க்க விறுவிறுக்க வாய் குழற அதிர்ச்சியோடு கேட்டார் கோபன்னா
''ராமோஜி, லக்ஷ்மோஜி'' என்று சொன்னதாக ஞாபகம்.
+++
கோபன்னாவை சிலையாக நிற்கவைத்து விட்டு இனி கதையின் சில பகுதிக்குள் செல்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. பத்ராசலம், கம்மம் ஜில்லாவில் ஆந்திராவில், கோதாவரி கரை தண்டகாரண்ய பிரதேசத்தில் உள்ளது. வனவாசத்தின் போது இங்கேதான் ராமர் லக்ஷ்மணர் சீதை, லக்ஷ்மணன் கட்டிய ஒரு பர்ண சாலையில் வசித்தார்கள். இங்கே தான் ராவணன் வந்து சீதையை கடத்திச் சென்றான்.
பக்த பத்ரர் என்று ஒரு ரிஷி. ராமனின் தர்சனம் பெற த்ரேதா யுகத்தில் தவம் இருந்த மலை .. அதனால் அதற்கு பத்ராசலம் என்று பெயர்.
கிட்டத்தட்ட நானூறு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு ராமர் கோவில் கட்டப் பட்டது. ராமர் சீதா சிலைகள் ஸ்வயம்பு. பொக்கல தம்மக்கா என்ற ராம பக்தை ஒருவள் ஒரு இரவு கனவில் ''பத்ரகிரி மலையில் சில விக்ரஹங்கள் புதையுண்டு உள்ளன. அவற்றை வெளியே எடுத்து வேண்டியதை செய் '' என்று உத்தரவு பெற்றாள் .
மறுநாள் விடிந்ததும் தம்மக்கா ஓடித் தேடி தோண்டி சிலைகளைக் கண்டுபிடித்து ஒரு கூரை வேய்ந்து சிறிய கோவில் ஒன்றை ஸ்தாபித்தாள். காட்டைத் திருத்தி ஒரு நடைபாதை வழி செய்து தினம் அங்கு சென்று பூஜை செய்து வந்தாள் .
எங்கே ராமரைச் சிலையாக அவள் வழிபட்டாளோ , அங்கேதான் ராமர் சீதா, லக்ஷ்மணனோடு த்ரேதா யுகத்தில் வாசம் செய்தனர். அங்கே தான் பர்ணசாலை கட்டப்பட்டது. பத்ராசலத்திலிருந்து 35 கிமீ தூரத்தில் இந்த பர்ணசாலை இருக்கும் இடத்தை த்ரேதா யுகத்தில் தேர்ந்தெடுத்தவர் அகஸ்தியர்.
இந்த பர்ணசாலையிலிருந்து ரெண்டு கி.மீ தூரத்தில் ஜடாயு பாகா என்கிற இடத்தில் தான் ஜடாயு ராவணனோடு சண்டையிட்டு சிறகு வெட்டப் பட்டு குற்றுயிரோடு ராமனுக்கு காத்திருந்த இடம். ஜடாயு சொல்லி தான் ராமனுக்கு ராவண சந்நியாசி சீதையை கடத்தியது தெரியவருகிறது.
தும்முகூடம் என்று ஒரு இடம் இங்கே இருக்கிறது. இங்கே தான் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கர தூஷணர்களோடு சேர்த்து ராம லக்ஷ்மணர்கள் கொன்றார்கள். அந்த ராக்ஷஸர்களின் மலை போன்ற சாம்பலில் உருவானது இந்த தும்முகூடம். இங்கே ராமனை ஆத்ம ராமன் என்று பெயரில் வழிபடுகிறார்கள்.
ஐந்து கி.மீ தூரத்தில் சில வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கிறது குண்டாலா என்ற ஒரு கிராமம். குளிர் காலத்தில் ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள் சூடாக ஸ்நானம் செய்த வெந்நீர் ஊற்றுகள் இங்கே இருந்தது.
++
சுல்தான் அவர்கள் பெயர் ''ராமோஜி, லக்ஷ்மோஜி'' என்று சொன்னதும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கியவாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.
தானா ஷாவுக்கும் ஆச்சார்யம். கோபன்னா கோவில் கட்டி வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டான். கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்பினான். அவர் அங்கேயே தங்கி ராமதாசனாக சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் படத்தில் பார்த்தேன்.
பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும். பாலமுரளி கிருஷ்ணா குரலில் நிறைய கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரு சில பாடல்களை கற்றுக்கொண்டும் காமா சோமா என்று பாடுவேன். கிளிக் பண்ணி கேளுங்கள்:
https://youtu.be/MKXTj0qH42g
No comments:
Post a Comment