மணி வாசகர் J K SIVAN
திருச்சாழல் பாடல்கள் 15-17
மணி வாசகரின் திருச்சாழல் பாடல்கள் மொத்தம் 20. அதில் 14 பாடல்களை இதுவரை அறிந்தோம். இன்று மூன்று பாடல்களை ரசிப்போம்.
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 15.
''எனக்கு புரியவில்லை நீ இதை விளக்கு பெண்ணே. ஒரு ராஜா போன்றவர், யானை, குதிரை, ரதம் இது போன்றவைகளில் பவனி வருவது நமக்கு தெரியும். ஏன் உன் சிவ பெருமான் அவை எல்லாவற்றையும் விட்டு இந்த காளை மாட்டை பிடித்து அதன் மேல் ஏறி பவனி வருகிறார். என்ன ரகசியமோ?
ஒரு பார்வையாலே முப்புரங்களை எரித்தவன் எங்கள் பரமேஸ்வரன். பெரிய மதில்கள் பொடியான விவரம் உனக்கு தெரியாது. நீ சாதாரணமாக பார்க்கிற ரிஷபத்தை பற்றி நீ ஒன்றும் அறியாதவள். ஆகையால் சுலபமாக ஏதோ சொல்லி விட்டாய். நான் சொன்னேனே அந்த முப்புரம் எரித்த சமயத்தில் பரமேஸ்வர னின் தேர் சக்ரம் அச்சு முறிந்தவேளையில் ரிஷபமாக உடனே சுமந்தது மஹா விஷ்ணு. அச்சு முறிந்தது சிவன் விக்னேஸ்வரரை முதலில் வணங்காமல் புறப்பட்டதனால். செங்கல்பட்டு போகும் வழியில் அச்சரப்பாக்கம் (அச்சு இறு பாக்கம்) இருக்கிறதே அந்த கதை முன்பே சொல்லி இருக்கிறேனே. மறுபடியும் ஒரு முறை சொல்கிறேன். காத்திரு.
நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.16
உங்கள் சிவன் ரொம்ப சாதுவோ? முற்கா லத்தில் ஒரு கல்லாலான ஆல மரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்களை எதிரில் வைத்துக்கொண்டு அதெப்படி துளிக்கூட சப்தமே இல்லாமல் மௌனமாகவே அவன் வேதத்தின் உட்பொருளை விளக்க முடிந் தது என்கிறாய் ?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி உனக்குத் தெரியாதோ? சாதுவுக்கு சாது தான். மெளனமாக தெற்கு திசை நோக்கி ஞானம் கற்பித்தவன் தான் எங்கள் தக்ஷிணா மூர்த்தி. அவனே தான் நெற்றிக் கண்ணில் கோபாக்னி பெருந்தீயாக சூழ மூன்று புரங்களை ஒரே கணத்தில் எரித்து திரிபுராந்தகன் கூட்டத்தை வேரோடு அழித்தவன். துஷ்ட நிக்ர ஹம் ஸிஷ்ட பரிபாலனம் என்பது இது தான். சாதுக்களுக்கு முனிவர்களுக்கு ரிஷிகளுக்கு வேதத்தை மெளனமாக சின்முத்ரை மூலம் அறிவுறுத்தி, உபதேசித்தவனே அசுரர்களை ஸம்ஹரிக்கும் ஸம்ஹார மூர்த்தியாக எரித்தவன்.
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.17.
உங்கள் கடவுள் யார் என்று தேடியபோது அதோ செல்கிறான் பார் கையில் கபாலம் எனும் மண்டையோட்டை ஏந்தியவாறு . நாலு இடத்தில் பிச்சை வாங்கி தின்று கந்தல் துணி கூட இல்லா மல் யானை புலி போன்ற மிருக தோல்களை ஆடையாக அணிந்து செல்பவன்..என்று காட்டினார்கள்.... என்று கேலி செய்யும் பௌத்தனிடம் ஊமைப் பெண் பதில் சொல்வது போல் பாடலின் கடைசி ரெண்டடி அமைந்தி ருக்கிறது.
எங்கள் பரமேஸ்வரன் பொதுவில் ஆடுபவன். அம்பலவாணன். அவன் ஆட்டத்தினால் தான் அகிலமெல்லாம் அசைகிறது, உழல்கிறது என்பதை நீ அறியமாட்டாய். அவன் சாதாரண கூத்தாடி அல்ல. கூத்தபிரான்.
நான்கு ரிஷிகள் மட்டுமல்ல நான்கு மறைகளுமே அறியாதவர்கள் ஒரு புறம் இருக்கட்டும். அந்த நான்கு வேதங்களும் தமது உட்பொருள் அவன் என்று அறியாதபடி பரம ரஹஸ்யமாக இருப்ப வன் எம்பிரான். அதை உணர்ந்து ஈஸா என்று அனைத்தும் அவனைப் பணிந்தன.
உருவத்தை வைத்து எவரையும் எடைபோடாதே. வாலறிவன் நூலறிவுக்கு அப்பாற்பட்டவன்.
No comments:
Post a Comment