Sunday, January 31, 2021

GOPALAKRISHNA BHARATHIYAR

 

கோபாலக்ரிஷ்ண  பாரதியார்  -   2        

              J K   SIVAN  

தமிழ் தாத்தா  உ.வே.சா.வின் தமிழ் ஆசான் திருச்சிரபுரம்  (திருச்சி)  மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அக்காலத்தில் தலை சிறந்த தமிழாசிரியர். அறிஞர்.  கவிஞர். அவருக்கு  கோபாலக்ரிஷ்ண  பாரதியாரின் நந்தனார் சரித்திரம் பிடிக்கவில்லை.

என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு  சிவபக்த  நாயனாரின் மூலக் கதையை சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் வரும் திருநாளைப்  போவார் நாயனார் சரிதத்தை '' நந்தனார் சரித்திரம்''  என்ற கற்பனைப் பாத்திர  சரித்ரமாக்கி  பாடி வருவது  சரியில்லை எனறு  மனதில் எண்ணம்.  

இது தெரியாமல்  ஒரு நாள் பாரதியார் பிள்ளைவாளிடம்  தனது  நந்தனார் சரித்திரத்திற்கு  வாழ்த்துப்   பாயிரம் பெறுவதற்கு   பிள்ளையின்  வீட்டைத் தேடி திருச்சி வந்தார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று பிள்ளைவாள் நினைத்தார்.

'' கோபாலக்ரிஷ்ண பாரதியாரே, நீங்கள் இதை முக்கியமாக சங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம்''  என்று சொல்லி அனுப்பிவிட்டார்.பிள்ளை அவர்கள், தமது மாணாக்கர் உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்களிடம் மேலே சொன்ன தனது மனசில் இருந்ததைச் சொன்னார்.  இதை  உ.வே.சா. தனது  என் சரிதத்தில்  எழுதியுள்ளார்.  அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்த விஷயத்தைச் சொல்ல முடிகிறது.

கோபாலகிருஷ்ண பாரதி பிள்ளையை விடுவதாக இல்லை. ஒருநாள் மறுபடியும் திருச்சிக்கு  பிள்ளைகளின் வீட்டுக்கு வந்தார்.

'' பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே பிரசித்தி அடையும். என் வாழ்த்துப் பாயிரம் அவசியமேயில்லை'' .       பிள்ளை அவர்கள்  இப்படிச்சொல்லி,  பாரதியாரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.

பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு மீண்டும் ஒரு நாள்  விடா முயற்சியோடு  கொளுத்தும் வெயிலில் நடுமத்தியான வேளையில் பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் தான் இயற்றிய நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார்.

உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில்  பாரதியின் பாடலில் உள்ள  பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டு விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷணமாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய் விட்டாற் போலத் தோன்றிற்று. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

 ''வருகலாமோ? ''என்ற பாட்டுக்கு பாரதி வந்தார். ( யூ ட்யூபில் M M தண்டபாணி தேசிகர் பாடிய இந்த நந்தனார் திரைப்பட பாடல் இணைத்திருக்கிறேன். கேட்டுவிடுங்கள்.)

ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டு மில்லாமல் இதென்ன ''வருகல்'' ?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியா யிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டதாம்.

இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ? என்று நம்மிடமே கேட்பது  போல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம்.       ''வருகலாமோ''அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது.  

 MM   தண்டபாணி தேசிகர்  என்ற சங்கீத வித்துவான்  நந்தனாராக நடித்து  ஒரு  கருப்பு வெளுப்பு படம்  1942ல் வெளிவந்தபோது எனக்கு  3  வயசு.  ஜெமினிஸ்டுடியோ தயாரிப்பு.  செருகளத்தூர் சாமா தான்  வேதியர்.  படத்தில் பேச்சை விட  பாட்டுகள் தான் அதிகம்  அந்தக்காலத்தில்.  இன்றும்  இந்த படத்தை  யூ ட்யூபில் பார்க்க முடிகிறது.
அருமையான சில பாடல்கள்  அந்த படத்தில்  தேசிகர்  பாடி இருக்கிறார்.  சில:
ஆனந்த நடமிடும் பாதன்
பிறவா வரம் தாரும் (இராகம்: லதாங்கி, ஆதி தாளம், தேசிகர்)
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் (நாதநாமக்கிரியை, ரூபகம், தேசிகர்)
பாவிப்பறையன் இந்த ஊரில் வந்துமிவன் (தோடி, ஆதி, தேசிகர்)
எனக்குமிரங்கினான் எம்பிரான்(கேதாரகௌளை, மிச்ரம், தேசிகர்)
கனகசபையைக் கண்ட பிறகோர் காட்சியுமுண்டோ (காபி, ரூபகம், தேசிகர்)
எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் (பிலகரி, ஆதி, தேசிகர்)
காக்க வேண்டும் கடவுளே (பந்துவராளி, ஆதி, தேசிகர்)
தில்லையம்பலத் தலமொன்றிருக்குதாம் (ராகமாலிகை-ரூபகம், தேசிகர்)
சிதம்பர தெரிசனமா (முகாரி-ஆதி, தேசிகர்)
காணவேண்டாமோ - இருகண் இருக்கும்போதே (ஸ்ரீரஞ்சனி-ஆதி, தேசிகர்)
ஜாதியிலும் கடையேன் மறையாகம நூல்கள் (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது (சங்கராபரணம்-ஆதி, தேசிகர்)
ஹரஹர ஜகதீசா அருள்புரி பரமேசா (சிந்துபைரவி, தேசிகர்)
என்னப்பனல்லவா எந்தாயுமல்லவா (வராளி, பஜனை, தேசிகர்)
ஐயே மெத்தக்கடினம் உமதடிமை (ராகமாலிகை-ஆதி, தேசிகர்)
வருகலாமோ ஐயா நாமங்கே (மாஞ்சி-மிச்ரம், தேசிகர்)
வீறாடுமுயலகன் முதுகில் ஒரு கால் வைத்த (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)

இதில்  வறுகலாமோ  பாட்டுக்கான  யூட்யூப் லிங்க்  தருகிறேன். தேசிகர்  ராக பாவத்துடன் பக்தி பொங்க  பாடுவதை கேளுங்கள் .  எச்சரிக்கை:   இக்கால  ஹீரோக்களை மனதில் கொண்டு படத்தை பார்க்கவேண்டாம்:

https://youtu.be/urcPeMDyxmo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...