Friday, January 22, 2021

GOVINDHA

 



''கோவிந்தா  கோவிந்தா'  J K  SIVAN 


இன்று சனிக்கிழமை. பெருமாளை, திருப்பதி திருமலை  ஸ்ரீனிவாசனை நினைப்போம்.  ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

தெய்வ தம்பதிகளுக்குள்ளும்  மனஸ்தாபம் உண்டோ? நம்மைப் போல் அவர்களுக்கும் சாபம் உண்டோ? அல்லது எல்லாமே  நமக்கு ஏதேனும் நல்லது நடக்க,  அப்படி  அவர்கள் ஆடும்  நாடகமோ?  அப்படித்தான் இருக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி வைகுண்டத்தில் இல்லை.  மஹா விஷ்ணு அவளைத் தேடி  புறப்பட்டு விட்டார். எங்கே?  நேரே  பூலோகத்திற்கு தான்.  தெய்வங்கள் விரும்பி உலவும் இடம்  நாம் இருக்கும் பூலோகம் தான். நாகலோகம், பாதாள லோகம் சென்று  அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்லவில்லையே.  பூலோகத்தில்  பரமாத்மா மனிதனாக உருவெடுத்து வந்து மஹாலக்ஷ்மியைத்  தேடுகிறார்.

மனிதன் என்றால் பசி தாகம்  களைப்பு, தூக்கம் எல்லாம் வேண்டுமே. தெலுங்கு பேசி வாழும்  மக்கள்  வசிக்கும்  பிரதேசத்தில்  அகஸ்திய ரிஷியைச்  சந்திக்கிறார்  மஹா விஷ்ணு.  அகஸ்தியருக்கு  தெரியுமே  தன் எதிரில் இருப்பது மஹா விஷ்ணு என்று. 

''மகரிஷி,  நான்  இங்கே   பூலோகத்தில் கலியுகம் முடியும் வரையில்  தங்கி இருக்க முடிவெடுத்துவிட்டேன். எனக்கு  தினமும்  பசும் பால்  வேண்டும். ஆகவே  ஒரு நல்ல பசுவாக  தாருங்கள்.   உங்களிடத்தில் சிறந்த பசுக்கள் கொண்ட  கோ  சாலை இருப்பது எனக்கு தெரியும். 

''ப்ரபோ,  நீங்கள்  மஹா விஷ்ணு,  இங்கே  ஸ்ரீனிவாசன்  என்று  மனித உருவில்  வந்திருக்கிறீர்கள் என்றும்  அறிவேன்.  பிரபஞ்ச காரணன் , ரக்ஷகன் தாங்களே  என்னிடம் வந்து ஒரு பசு தானம் கேட்கிறீர்கள் என்று உணரும்போது பெரு  மகிழ்ச்சியாக  இருக்கிறது.   அதே  சமயம் உங்கள் மாயையும் எனக்கு தெரியும்
என்பதால் என்னை சோதிக்க வந்திருக்கிறீர்களோ?.

இருந்தும்  ஒரு கண்டிஷன் அவசியம் உங்களுக்கு நினைவூட்டுவதற்கு மன்னிக்க வேண்டும்.    பசு தானம்  தம்பதியோடு வந்து யாசிப்பவர்களுக்கு  தான் கொடுப்பது வழக்கம்.  ஆகவே  மஹாலக்ஷ்மியோடு  இங்கே  வந்து என்னை ஆசிர்வதித்து  பசு தானம் பெறுங்கள் '' என்கிறார் அகஸ்தியர்.

''ஆஹா  அப்படியே செய்கிறேன் மகரிஷி'' என்று ஸ்ரீனிவாசன் புறப்பட்டார்.  அப்புறம்  ஸ்ரீனிவாச கல்யாணம் நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும் என்பதால் நான் விவரிக்கவில்லை.

ஒரு நாள்  பத்மாவதி தாயாரோடு ஸ்ரீனிவாசன் அகஸ்தியர்  ஆஸ்ரமம் வருகிறார். அப்போது அங்கு  அகஸ்தியர் இல்லை. சிஷ்யர்களுக்கு  ஸ்ரீனிவாசனை யார் என்று தெரியவில்லை. 

“யார்  நீங்கள்,  என்ன வேண்டும் உங்களுக்கு?''
''என் பெயர்  ஸ்ரீனிவாசன், இது என் மனைவி பத்மாவதி.. உங்களிடமிருந்து ஒரு பசு வாங்கிக்கொண்டு போக வந்திருக்கிறேன். உங்கள்  ஆச்சர்யனிடம் போய் சொல்லுங்கள். அவர்  சொன்னபடியே  நான் என் மனைவியுடன் வந்திருக்கிறேன் பசு தானம்  பெறுவதற்கு  என்று'' 

''குரு நாதர் இல்லையே.  அவர் இருக்கும்போது அப்பறமாக  வாருங்கள்''

''ஆஹா  நீங்கள் சொல்வது புரிகிறது.  நான் தான் இந்த  பிரதேசத்திற்கே  தலைவன்.  என்னை நம்பி ஒரு பசு நீங்கள் கொடுக்கலாமே. என்னால் மறுபடி இப்படி வரமுடியாதே ''

“ஐயா,    நீங்கள் இந்த பூலோக  அதிபதியாக,   ராஜாவாக கூட இருக்கலாம். எங்கள் குருநாதர் தான் எங்களுக்கு தெய்வம்.  அவருடைய கட்டளை, அறிவுரை, அனுமதி,  இன்றி எங்களுக்கு எதுவும் செய்ய  அதிகாரம் இல்லையே''

''உங்கள் குருபக்தியை,  நேர்மையை மெச்சுகிறேன்.   அவர் வந்தவுடன்  ஸ்ரீனிவாசன் மனைவியுடன் ஞானாத்ரி மலையிலிருந்து நீங்கள் சொல்லியபடியே  பசு கேட்க வந்தார்'' என்று சொல்லுங்கள்.

ஸ்ரீநிவாஸன் பத்மாவதியுடன் ஏழுமலையை நோக்கி நடந்தார்.

சில  கணங்களில் அகஸ்தியர்  திரும்பிவிட்டார்.  சிஷ்யர்கள் கூறியதை கேட்டு  பதறினார்.  ஓடினார்  தூரத்தில் பத்மாவதியுடன்  ஸ்ரீனிவாசன் தூரத்தில்  நடந்து செல்வது தெரிந்தது.  

''எவ்வளவு  துர்பாக்கியசாலி  நான்.  ஸ்ரீ மஹா விஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் என்னைத் தேடி தரிசனம் தர வந்தும்  அவர்களை வரவேற்று உபசரித்து பசுவை கொடுக்கும்   பாக்யத்தை இழந்தேன்'' 

கோசாலைக்கு ஓடி  ஒரு பசுவை (கோவு  என்றால் தெலுங்கில் பசு) வை   அழைத்துக் கொண்டு ஸ்ரீனிவாசன் செல்லும் திசையில்   ஓடினார். வேகமாக ஓடி  ஸ்ரீனிவாசனையும்  பத்மாவதியையும்  நெருங்கிவிட்டார்.  தெலுங்கு பாஷை பேசும் இடம் அது என்பதால்   அகஸ்தியருக்கு உரக்க    ''சுவாமி   கோவு  இந்தா''    ''கோவு  இந்தா''.....பசு இந்தாருங்கள்... என்று   கத்துகிறார். ஸ்ரீனிவாசன் திரும்பிப்பார்க்கவில்லை. 

'கோவு இந்தா,   கோவு இந்தா.... கோவிந்தா,     கோவிந்தா... கோவிந்தா.. கோவிந்தா ''  பலமுறை  சப்தம் .... எதிரொலிக்கிறது. ஸ்ரீனிவாசன் திரும்பிப்  பார்க்கவில்லை.

ஒரு நிலையில்  ஸ்ரீனிவாசனும் பத்மாவதியும்  திரும்பி பார்க்கிறார்கள்.  அகஸ்தியரிடமிருந்து பசுவைப் பெறுகிறார்கள். 


''மகரிஷி,   அறிந்தோ  அறியாமலோ, 108 தடவை எனக்கு பிடித்த  நாமத்தை நீங்கள்   சொல்லி விட்டீர்கள். இந்த ஞானாத்ரி மலையில்  ஏக மூர்த்தியாக  கலியுகம்   முடியும் வரை இருக்கப் போகிறேன்.  நீங்கள் சொன்ன  பெயரிலேயே என்னை பக்தர்கள் ''கோவிந்தா''என்று அழைப்பதை செவி மடுப்பேன்.   இந்த  ஏழுமலை யில் எனக்கு என்று ஒரு கோவில் அமையும்.  திருமலை என்பார்கள் அதை.    எண்ணற்ற பக்தர்கள் என்னைத்  தேடி வருவார்கள். இந்த மலைகளை ஏறும்போது, இறங்கும்போது என்னைக் காண நிற்கும்போது ஏன்  அப்புறமும் கூட  கோவிந்தா  என்று நீங்கள் சொன்னதைப்போல  கோவிந்தா   என்பார்கள்,.  என்னை நினைப்பார்கள். அவர்கள் ஒவ்வொருமுறை கோவிந்தா என்று சொல்லும்போது எனக்கு உங்கள்  நினைவு வரும் அகஸ்தியரே,   அவர்கள்  வேண்டும் வரம் அளிப்பேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...