1. திருவையாறு சப்தஸ்தான உத்ஸவம் J K SIVAN
சப்தஸ்தானம் என்றால் ஏழு இடங்கள், ஏழு ஊர்களைக் குறிப்பது. தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் என ஏழு இடங்கள் ஆங்காங்கே திருவிழாக்களாக Iகொண்டாடப்பட்டாலும் மிகவும் முக்கியமாக மனதில் நிற்பது எனக்கு திருவையாறு சப்தஸ்தான விழா தான். இதை எனக்கு இந்த உலகில் அறிமுகப்படுத்தி அதில் ஆர்வம் கொள்ளச் செய்தது எனது தாய் வழி தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் எழுதி வைத்த சில குறிப்புகள். அவரது முன்னோரைப் பற்றி வெகு வெகு அற்புதமாக அவர் குறிப்புகளிலிருந்து நான் எழுதிவரும் ''என் முன்னோர்கள்'' பற்றி உங்களில் பலருக்கு பிடித்திருக்கிறதே .
கோயில்களுடன் தொடர்புடைய விழா சப்தஸ்தானம். ஏழு புனித ஸ்தலங்கள் இந்த சப்தஸ்தானத் தலங்கள்.
இனி திருவையாறு சப்தஸ்தானங்கள் என்னென்ன என்று சொல்கிறேன்.
சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக ஒரு கோலாகலமான உத்சவம் நடக்கும். அது திருமழபாடியில். அது என்ன தெரியுமா? திரு நந்தி விழா.
சிலாதமுனிவர் என்ற ரிஷிக்கு பிள்ளை தான் திருநந்தி தேவர். இந்த நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் கல்யாணம். திருமழபாடி என்கிற க்ஷேத்ரத்தில் ஸ்ரீ வைத்தியநாதர் கோயிலில் இந்த கல்யாணத்தை வருஷாவருஷம் பங்குனி மாசம் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். அன்று என்ன விசேஷம் என்றால் அருகே திருவையாற்றிலிருந்து பல்லக்கில் பஞ்சநதீஸ்வரன், ஐயாறப்பன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்கு எழுந்தருளுவார். அப்புறம் திருவையாற்றில் நடக்கும் சப்தஸ்தான விழாவிற்கு திருமழபாடியிலிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்வார். இது தான் வழக்கம்
கல்யாணமாகாதவர்களுக்கு இந்த விழாவை தரிசித்தாலே விவாஹ ப்ராப்தி என்று சொல்வார்கள். "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்" என்ற சொல் வழக்கு இதனால் தான்.
சப்தஸ்தான விழா என்கிற ஏழூர்த் திருவிழாவில் பக்கத்தில் இருக்கும் ஏழு ஊர்களும் இணைந்து விமரிசையாக கொண்டாடும்.தஞ்சாவூ ர் மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழா. இதில் சிவாலயங்கள் தான் பிரதானமாக பங்கேற்கும்.
இவ்விழாவின் போது ஒரு கோயில் பிரதான ஆலயம். அதற்கு மற்ற தொடர்புடைய ஆறு கோயில் பல்லக்குகள் சென்றுவருவது கோலாகலமாக இருக்கும். ஒவ்வொரு வருஷமும் குறிப்பிட்ட நாளில் பிரதான ஆலயத்திலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கு வந்து சேருவது மரபாக உள்ளது. முதன்மைக் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அக்கோயிலைச் சார்ந்த இறைவனும், இறைவியும் உலா வருகின்றனர். அங்கிருந்து பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலிலுள்ள பிற இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் சேர்ந்துகொள்கின்றன.
இந்த சப்த ஸ்தான உத்சவத்தில் அந்த ஏழு ஊர் மட்டுமல்ல, எங்கிருந்தோ எல்லாம் பக்தர்கள் வந்து ஏழு ஊர்களும் சென்று மகிழ்ச்சியோடு தரிசனம் செய்வார்கள். எல்லா ஊர் சமூகப் பண்பாட்டுப் பிணைப்பும் இதனால் உண்டாகும். வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த சப்த ஸ்தான உத்சவத்தில் அந்த ஏழு ஊர் மட்டுமல்ல, எங்கிருந்தோ எல்லாம் பக்தர்கள் வந்து ஏழு ஊர்களும் சென்று மகிழ்ச்சியோடு தரிசனம் செய்வார்கள். எல்லா ஊர் சமூகப் பண்பாட்டுப் பிணைப்பும் இதனால் உண்டாகும். வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறு சப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் பஞ்சநதீஸ்வரனும் தர்ம சம்வர்த்தனி, அறம் வளர்த்த நாயகியும் ஊர்வலமாக மற்ற ஆறு ஸ்தலங்களுக்கு சென்று விட்டு திருவையாற்றுக்கு திரும்புவார்கள். மற்ற ஆறு ஸ்தலங்கள் எது தெரியுமா?
திருப்பழனம்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
திருக்கண்டியூர்
திருப்பூந்துருத்தி
திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
திருக்கண்டியூர்
திருப்பூந்துருத்தி
திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம்
தில்லைஸ்தானத்தில் இரவு வாண வேடிக்கையுடன் விழா சிறப்புற நடைபெறும். ஐயாறப்பனுக்கு பூச்சொறிதல் (பூ போடுவது)ல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறும். இந்த விழா முழுவதும் எங்கும் பன்னிரு திருமுறைகள் ஓதுவது கேட்கும். மெதுவாக ஆடிக்கொண்டு செல்லும் பாலக்கோடு பக்தர்களும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வார்கள்.இந்த ஏழு ஊர்களிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாக சாந்திக்கு பானகம், நீர்மோர், பழ ரசம், பாயசம் எல்லாம்வயிறு நிறைய கொடுப்பார்கள். எங்கள் தாத்தாவின் முன்னோர்கள் இதற்கென்றே சத்துமா தயார் செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்வது வழக்கம்.
யாருக்குமே இரவு பகல் சோர்வே தெரியாது. எங்கும் உற்சாகம், சங்கீதம், பக்தி, சாப்பாடு. ஒற்றுமை.
பல்லக்கு விடி காலையில் கிளம்ப ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை இந்த இறைவனோடு விடிய விடிய ஊர்வலம் தான். வெயில் மழை பார்க்கவே மாட்டார்கள். போகும் இடத்தில் எல்லாம் , நிறுத்தி நிறுத்தி பல்லக்கில் உள்ள ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனைகள், நைவேத்தியங்கள், கற்பூர தீப ஹாரத்திகள் நடந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இந்த பல்லக்குக்காக தட்டில் தேங்காய் பழங்கள், புஷ்பங்களோடு, காத்திருப்பார்கள். குடங்களில் ஜலத்தோடு பல்லக்கு தூக்கி வருபவர்கள், வேதம் திருமறை பாராயணம் பண்ணிக்கொண்டு வருபவர்கள் பாதம் அலம்பி வணங்குவார்கள்.
நம்மைத் தேடி பகவான் வரும்போது நாம் அவனுக்காக காத்திருக்க வேண்டாமா?
இருந்த இடத்திலேயே இப்படி அற்புத தரிசனம் கிடைக்குமா?
திருவையாறு ஆலய பராமரிப்பு தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இக்கோயிலில் சித்திரை விழா பதிமூன்று நாட்கள் நடைபெறும். கொடியேற்றத்துடன் துவங்கி ஆத்ம பிரதிஷ்டை, அப்புறம் மற்ற ஆறு ஸ்தலங்களிலிருந்து உத்சவர்கள் பல்லக்கில் திருவையாறு வருவார் கள். சந்நிதியில் மகேஸ்வரபூஜை நடைபெறும் .
விடி காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர், சுயசுவாம்பிகையுடன் வெட்டிவே ர் பல்லக்கிலும் புறப்பட்டு நான்கு கோபுர தரிசனம் முடித்து திருப்பழனம் செல்வார்கள். அப்புறம் திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, எல்லாம் ஊர்வலம் செல்லும். ராத்திரி காவிரி ஆற்றகரையில் ,ஆறு ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கைகள் ஒளியும் ஒலியுமாக நடைபெறும். இது வழக்கம்.
பல்லக்குகளில் ஏழு ஊர் ஸ்வாமிகள் அம்பாளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சியைக் காண திரள் திரளாக மக்கள் வெள்ளம் கூடும். கிறது. பொம்மை பூபோடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மற்ற ஆறு ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். பொம்மை பூ போட்டவுடன் அன்று இரவே மேலே சொன்ன காவிரி ஆற்று வாணவேடிக்கையும், கச்சேரி நடனம், தெருக்கூத்துகள் நடைபெறும். பொய்க்கால் குதிரை, மயில் ஒயிலாட்டங்கள், சதிர் நாட்டியங்களுடன் ஆங்காங்கே பிரவசனம், பிரசங்கங்களை நடக்கும். சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை.
இன்னும் வரும்.
No comments:
Post a Comment