Monday, January 4, 2021

SAPTHASTHANAM


 

திருவையாறு ஸப்தஸ்தானம் .   J K  SIVAN 

                                        ''சுந்தரா  என்னை  மறந்தாயோ?''

திருவையாறு  சப்தஸ்தான க்ஷேத்திரங்களில்  இன்று நாம்  அறிவது,   நான்  தரிசித்து  மகிழ்ந்த இன்னொரு  அருமையான  பழைய சிவ ஸ்தலம் திருமழபாடி.

 திருவையாறிலிருந்து வடமேற்கே 13 கி.மீ தூரத்தில்  அரியலூர் போகும் பாதையில்  பாதி  வழியில் ஒரு பாலம் இடது புறம்  நம்மை அழைக்கும்.  அதில்  எட்டு கி.மீ தூரம் போனால் திருமழபாடி என்கிற கிராமம் நமக்கு காத்திருக்கும்.  சும்மா  அல்ல,  அருள் மிகு  சுந்தராம்பிகை சமேத வைத்யநாத சுவாமி  ஆலயத்தை தன்னுள் வைத்துக்கொண்டு  என்று சொல்லலாம்.     எதிரே கொள்ளிடம் ஆறு ஜம்மென்று ஓடும்,  தண்ணீர் இருந்தால்!.   மார்கண்டேயனுக்கு மழு ஏந்தி சிவன் நடனம் ஆடி காட்சி அளித்ததால் ''மழுபாடி'' மழபாடி ஆகிவிட்டது.   இன்னொரு காரணம். சோழநாட்டின் வீரர்களில் மழவர்கள் எனும் வகையினர்  நிறைந்து வாழ்ந்த ஊர் என்பதாலும் இது மழபாடி என்ற பெயர் கொண்டது.

ப்ரம்மலோகத்திலிருந்து புருஷா மிருகம் கொண்டுவந்து நிறுவிய சிவலிங்கம்  தான்  வைத்யநாத சுவாமி. வஜ்ராஸ்தம்ப நாதர் என்றும் அவருக்கு பெயர்.   275 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அப்பர், சுந்தரர் சம்பந்தர் வந்து தரிசித்து பாடிய  சிவஸ்தலம்.

சோலை மிகுந்த  இந்த  கிராமத்தில் சுந்தரர் நடந்து வந்து கொண்டிருந்தார்.  இருபுறமும் வயல்கள் சோலைகள். வயலில்   உழவர்கள் நீர்பாய்ச்சி, நாற்று  நடுவதைக்  கண்டு நடந்தார். கிராமங்களில் எங்கும்  வழக்கமான  காட்சி. பெண்கள் மரத்தடியில் கூழு  காய்ச்சி  கொண்டு  வந்திருந்ததை சிலருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு சில குடங்களில் குடி நீர் கொண்டு வந்தார்கள்.   குழந்தைகள் மரத்தடியில் கிளையில் தூளியில்  தூங்கினார்கள்.

வயலில் வரப்பில் நடந்து  குறுக்கு வழியாக போய்க்கொண்டிருந்த  சுந்தரர் பட்சிகளின் கானத்தை ரசித்து  அவற்றின் ராகங்களில் எந்த  பதிகம் பாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சூரியன்  கிட்டத்தட்ட உச்சிக்கு வந்துவிட்டான்.  தூரத்தில் ஒரு குளம் தென்பட்டது.அங்கே சென்று கைகால்  முகம் கழுவி வயிறார நீருண்டு களைப்பைப் போக்கலாம் என்று நடநதபோது  ''சுந்தரா, சுந்தரா''.....என்று ஒரு குரல்.  கணீரென்று காந்தசக்தியோடு யார் நம்மை கூப்பிடுவது?. இந்த ஊரே நமக்கு புதியதாயிற்றே. எவரையும் தெரியாதே?'' என்று  யோசிக்கும்போது  மீண்டும்  அதே குரல்...

''என்ன சுந்தரா  எனை  மறந்தாயோ?''  வந்த வழியைத் திரும்பி பார்த்தார்,  யாரும் பின்னால் வரவில்லை, எதிரே  பக்கத்தில் எவரும்  தென்படவில்லை. குரலும்  எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே, என்னை மறந்தாயோ என்று யார் கேட்க முடியும்?  நான்  மறக்காமல் இருப்பது யாரை ? ஆஹா,  என் எஜமானன், தோழன் சிவபெருமானை ஒரு நாளும் மறந்தது இல்லையே... இவ்வளவு உரிமையோடு கேட்பவன் அவனாகத் தான்  இருக்கவேண்டும்.  மரங்கள் இடையே  கோவில் எதுவும் தெரியவில்லையே.? நின்று  சுற்று முற்றும் பார்த்தார் சுந்தரர்.  குளம் இருப்பதால்  இங்கே தான் எங்கோ  இருக்கிறான்?  எங்கும் வானளாவிய மரங்கள்,    ஒரு வயதான குடியானவன்  தலையில் முண்டாசுடன் எதிரே ஒரு கலப்பையை தோளில் சுமந்து கொண்டு வந்தவனை நிறுத்தினார்.

''ஐயா,  இங்கே  அருகில் ஏதாவது சிவன் கோயில் இருக்கிறதா?''.

''சாமி   ஊருக்கு  புதுசா?   அந்தாலே  தெரியுதே, அஞ்சு பனைமரம் அதற்கு கிழக்கிலே  ஒரு  மாந்தோப்பில்  ஒரு சின்ன  பழைய இடிஞ்சு போன  ஈஸ்பரன் கோவில் இருக்குது.   அதிகம்  யாரும்  போவதில்லை  அய்யிரு  பக்கத்து ஊரிலே இருந்து வந்து  சாமி குளிப்பாட்டி  சோறு  வைப்பாறு.   ஒண்ணு  விட்டு ஒண்ணு  நாளு வருவாரு..

சுந்தரர் ஓடினார்.  கோவிலை கண்டுபிடித்தார்.  ஆடினார். ''அப்பா சிவனே, உன்னையல்லால், உன்னை மறந்து,  வேறு யாரை அப்பா  நான்  நினைப்பேன்'' என்று  கண்களில்  ஆனந்த கண்ணீர்  மறைக்க கணீரென்று பாடுகிறார் .  

''பொன்னார் மேனியனே'' பாடலை தொடர்ந்து ''மழபாடியுள் மாணிக்கமான'' சிவனை பாடின பத்து பதிகங்களும் இதோ தருகிறேன். எல்லா சிவபக்தர்களும்  அறிந்து  பாடுகிறான்  பதிகம். .

1. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

2. கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

3. எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

4. பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

5.கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

6. நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

7. சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

8. வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

9. நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

10.  ஏரார் முப்புரமும்
  எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
  மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
  ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
  பரலோகத் திருப்பாரே.  10

அருமையான இந்த பழைய 7 நிலை ராஜ கோபுரம் கொண்ட சிவன் கோவிலுக்கு பின்னாலே ஒரு கதை இருக்கிறதே தெரியுமா? . அடுத்த பதிவில் சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...