Tuesday, January 5, 2021

sapthasthanam thiruvaiyaru


 

திருவையாறு சப்தஸ்தானம்    J K   SIVAN 

      ஐயாரப்பனும்  அகண்ட காவேரியும்                              
திருவையாறு  மிகப்பெருமை வாய்ந்த  சிவ ஸ்தலம்.  சப்தஸ்தானத்தில் முதன்மையானது.  தக்ஷிண கைலாசம் என்று புகழ் பெற்றது.  பிரம்மாண்டமான  ஆலயம். ஐந்து பிரஹாரங்கள் கொண்ட  பஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பன்  ஆலயம்.  நிறைய மண்டபங்கள். சிற்பக்கலை எழில் கொஞ்சும்  புராதன சோழன் கோவில்.   சங்கீத உயிர்நாடி  ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த  ஊர்.   இதை ஒட்டி தான்   மற்ற  சப்தஸ்தான க்ஷேத்ரங்கள் அமைந்துள்ளன.  திருப்பழனம், திருச்சோற்றுத்துறை,  திருவேதிக்குடி,  திருக் கண்டியூர்,  திருப்பூந்துருத்தி,  தில்லை ஸ்தானம்   தேவார பாடல்பெற்ற  சோழநாட்டு  ஸ்தலங் களில் 51வது.  காவேரி வடகரை  ஆலயம்.

ஒரு வரிக்கதை.   மார்கண்டேயனைப்போல்   சுசரிதன்  என்பவனை   அற்பஆயுஸுலிருந்து   ஒளி  ஸ்தம்பமாக  வந்து சிவன் காப்பாற்றிய ஊர்.   இங்கே தான் அகஸ்திய முனிவர்  குள்ள மாக உருவம் பெற்றார் .  ரெண்டு படி  நெல் தானியங்களுடன் பார்வதி சிவனை வழிபட்ட ஊர்.
சோழர், பாண்டியர், ராயர்கள் மராத்தியர்கள்  ஆண்ட ஊர்.  இதுபற்றி கல்வெட்டு சிலாசாசன ங்கள்  உண்டு.  இந்த ஊரோடு சம்பந்தப்பட்ட பிரபல பெயர்கள்,  கரிகாலன், ராஜராஜன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்.  சரித்திர பக்கங்களை புரட்டி படியுங்கள். ராஜேந்திர சோழன் மனைவியால்  தக்ஷிணகைலாசம் சீர் பெற்றது. 

அப்பர்  எனும் திருநாவுக்கரசர் என்ன பண்ணினார் தெரியுமா. கைலாச யாத்திரை புறப்பட்டார் வடக்கே  ஆடி அ்மாவாசை  அங்கே  அருவியில்  ஸ்னானம் செய்ய முழுக்கு போட்டார். எழுந்திருக்கும்போது எங்கே இருந்தார்?  தெற்கே  திருவையாற்றில்  பஞ்சநதீஸ்வரன் ஆலயத்தில்....  வெள்ளமாக ஓடிய  காவேரி  சுந்தரருக்காக  இரண்டாக பிளந்து வழிவிட்டு  அவரை  ஐயாறப் பன்  கோவி்லுக்கு செல்ல வைத்த அதிசயம் நடந்த ஊர். 

ஏழு நிலை  ராஜகோபுரம். 15 ஏக்கரா பரப்பு கொண்ட விஸ்தாரமான ஆலயம்.   ரெண்டாவது பிரகாரத்தில் ஜெப்பேசர் மண்டபம் அருகே  தனி சந்நிதியில்  உலகமாவீதிவிடங்கர் எனும் சோமாஸ்கந்தர்  விக்ரஹத்தை நாள் முழுதும் பார்த்து ரசிக்கலாம். இங்கே   சிவயோக
தக்ஷிணாமூர்த்தி  ப்ரஸித்தமானவர்.  அம்பாள் பெயர் தர்மசம்வர்த்தனி, ஆறாம் வளர்த்த நாயகி. அவள் சந்நிதிக்கு ரெண்டு பிரஹாரங்கள். 
நாதபிரம்மம் இருக்கும் இடம் என்பதை நிரூபிக்க   இங்கே  இரண்டு இடத்தில்  நாம் ஐயாறப்பா  என்று ஒரு துளையில் கூறினால்  பல முறை எதிரொலிக்கும்.  நான்  கூவிப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு மாசம் அம்மாவாசை அன்று  ஐயப்பன்  காவேரிக்கு  எடுத்துச் செல்லப்படுவார் . 

அருகே  திருமழபாடி ஸ்தலத்தில்  ஒவ்வொரு பங்குனி மாசமும்  வெகு சிறப்பாக  நந்திகேஸ் வரன் திருமணம் உற்சவம் நடைபெறும். சித்திரையில்  பிரம்மோத்சவம். ஐந்தாவது சப்தஸ்தான நாள்  அன்று  ஐயாறப்பன்  கண்ணாடி பல்லக்கில்  ஏழு சப்தஸ்தான க்ஷேத்ரங்களுக்கும்  பவனி வரும் கண்கொள்
ளாக் காட்சியைக் காண  திரள் திரளாக  பக்தர்கள் வெள்ளம் வரும்.  ஆவணி மூலம் அன்று தெப்பம்.

திருவையாறில் தனிமையாக  காவேரியை,  மண்டபங்களை  ரசித்து எவ்வளவு நேரம் நின்றேன்?  இரவு மெல்லிதாக இருளை போர்த்திக் கொண்டிருந்தது.  நிசப்தம்.  காவேரி சலசல வென்று ஓடிக் கொண்டிருந்த ஒலி  நெஞ்சைக் கிள்ளியது. 

 மேலே  முழு நிலவு. அவளது ரசிகன் சந்திரன். அவளைப்பார்த்துக்கொண்டே இருப்பான். காற்றில் அவன் அவளை ரசிப்பதை எத்தனை யோ பேர்  கவனித்து  மனதை  கோட்டை விட்டிரு க்கிறார்கள். வெகு காலமாக  அவளருகே  இருந்த

 ஒரு  மண்டபம் பேசியது.
''காவேரியம்மா,  உனக்கு  சங்கீதம்  பிடிக்குமா?'' 
''என்னிலிருந்து  உண்டானது தான்  சங்கீதம்,  நான் வளர்த்த  என் பிள்ளைகள் பாடினார்கள், பாடுகிறார்கள்.  இப்படியா ஒரு கேள்வி என்னிடம்?''
''இல்லை நான்  ஒரு சங்கீத நாத பிரம்மத்தோடு  சம்பந்தப்பட்டவன் என்பதால்  கேட்டேன்''.
''ஓஹோ  அந்த தெலுங்கு பிராமணனா?  எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தேடிய  ராமன்  என்னிடம் கிடைத்து  ஒரு நாள்  ஜாக்கிரதையாக மீட்டு கொடுத்தவள்.என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். தினமும்  அவர் எனக்கு பாடிக்  காட்டுவாரே ,  அவர் குரலை நான்   நிறைய  கேட்டு  மகிழ்ந்தவள். இன்னமும் நிறையவே அவர் பாட்டுகளை இங்கே கேட்டுக் கொண்டிருக் கிறேனே.
'அம்மா  நீ  என்னைவிட பெரும் பாக்கியசாலி'' என்றது மண்டபம்.
''உனக்கு என்ன வயது, என்றும் இளைமையாக இருக்கிறாயே?''.
''என் வயதை  நான் நினைத்ததே இல்லை''.
''எப்படி  இங்கே வந்தாய், எப்போது வந்தாய் அம்மா?''
''நான் இந்த ஊர்  இல்லை.  மேற்கு பக்கம்.   மலை களில் திரிந்து ஓடுவேன். சுதந்திரமாக இருந்த வளை ஒரு குள்ள ரிஷி பிடித்து வைத்துக் கொண் டார்.  என்னை தவிக்க விட்டார்.  நல்லவேளை  எனக்கு பிள்ளையாரை ரொம்ப பிடிக்கும்.  எப்போதும் என் பக்கம் நிறைய இருப்பார்.  அவரை  வேண்டினேன். மெதுவாக  அந்த  ரிஷியிடம் இருந்து தப்பிக்க வைத்தார்.  ஒரே ஓட்டம்.  வந்த வேகத்தில் மலைமேல் இருந்து  ஒரு சில பள்ளங்களில் ஓ வென்று விழுந்தேன்.''
''அப்புறம் என்ன ஆயிற்று?''
''நான் சாமர்த்தியக்காரி.  நெளிந்து நெளிந்து  ஓடி தப்பி அங்கங்கு இருப்பது போல் பாவலா காட்டி என் காதலன்  சமுத்ரராஜனை தேடி ஓடினேன். கண்டுபிடித்தேன்''
''ஹும்''   என்று பெருமூச்சு விட்டு   நிறுத்தினாள்  அந்த அழகு கிழவி.
''ஏன் பெருமூச்சு?  என்ன ஆயிற்று?''
''என்னை தடுக்க எத்தனையோ பேரின்  முயற்சி. என் காதலனை,   லட்சிய புருஷனை, கடலர சனை,  நான்   அடைவதில் இவர்களுக்கு என்ன கஷ்டமோ?. நான் தான் நிறைய அவர்களுக்கும் உதவினேன்.  சாப்பாடு  போட்டுக்கொண்டு தானே இன்றும்  சேவை செய்கிறேன். ஒருநாளா ரெண்டுநாளா.  நான்  அவர்களுக்கு மட்டும் '' என்ற  நினைப்பு  எல்லோரிடமும் இருக்கிறது.  
''நான்  எல்லாருக்கும் சொந்தமடா  உனக்கு மட்டும் இல்லை '' என்று பலமுறை எதிர்ப்பு காட்டினேன்.  என்னை தடுத்த போதும்  கோபம் கொண்டு சீறினேன்,   தடையை மீறி ஓடினேன்.  அடங்குகிறார்கள் அப்போது தான்''.
''எல்லாமே தனக்கே  வேண்டும்  என்று  ஏன் இப்படி  ஒரு எண்ணம்  சே சே.    நான்  என் மக்கள் எல்லோருக்கும்  தாய். அவர்களை விடாமல் சந்திப்பேன் உதவுவேன். காப்பாற்றுவேன்.''

ஒரு காலத்தில் ஒரு சோழ ராஜா  புத்திசாலி என் பலத்தை தெரிந்து கொண்டு  என் எண்ணத்தை புரிந்து கொண்டு என் காதலன் சமுத்ரராஜனை நான் அடையாமல் பெரிதாக ஒரு சுவர் எடுத்து  சிறையெடுத்தான். என் பலம் அவனுக்கு தெரியும்  அவன்  நல்ல குழந்தை. எனக்கு அவனை பிடிக் கும். என்னை தாயே  என்று வணங்குவான். அவனை,  அவன் ராஜ்யத்தில் எல்லோர்க ளையும் நான் சுபிக்ஷமாக இருக்க வசதி செய்தவள்.''

''உனக்கு என்ன பிடிக்கும் தாயே?''
''நான் மண் பைத்தியம். மண் பிடிக்கும்.  ஆனால்  ''. கிழவி கண்ணில்  நீர்.
''என் குழந்தைகள்  எனக்கே  துரோகம் செய்யும் போது எனக்கு  நெஞ்சு வெடிக்கிறது.  என் ஒரே செயல் ஓடுவது. அதை நிற்க வைப்பது என்ன நியாயம்?. என் செல்வத்தை என்னிடமிருந்து பிரிக்க   ஏன் தான் புத்தி போகிறதோ?
''தாயே  இன்னுமா உனக்கு வருத்தம்?''
''ஆமாம்  இரவிலும் பகலிலும்  இந்த துரோகம் எனக்கு  நடந்தால் எனக்கு பிடிக்குமா?''.
...
காவிரி அன்னை  திருவையாறு  தியாகராஜ சுவாமி ஆராதனை மண்டப படித்துறையில்  அதோடு தன் எண்ணத்தை பரிமாறிக் கொண்டது   ஆற்று மணல் திருடுவதை வெறுத்து வாடியது  எல்லோர் காதிலும் விழட்டும்.   

ஏன் எப்படி என் காதில் விழுந்தது? ஒருவேளை இதை எல்லோருக்கும் சொல்லுடா என்பதற்காக அவள் என்னை கேட்கவைத்தாளோ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...