வெள்ளிங்கிரி விநோதன்...J K SIVAN
மஹாதேவா,
ஒரு முறை கோயம்பத்தூர் போனபோது என் நண்பர் ஒருவர் உன்னைப்பார்க்க என்னை அழைத்துப் போய் உன்னைக் காட்ட, பிரமித்தேன். 112 ஆதி உயரம். ஆழ்ந்த அமைதியான முகத்தில் ஞான ஒளியா ? தலையில் சூடிய சந்திரஒளியா. கங்கை அலையலையாக அளகபாரத்தில் பெருகி மடிந்து வடிந்து கீழே உருள்கிறாளா? பின்னால் நீல, கருநீல, வெள்ளிங்கிரி மலைகள். வடக்கே நீ இருக்கும் கைலாஸத்தின் நிழலா அடையாளமா இது?
நான் உன்னை சந்தித்த நேரம் உச்சி வேளை பன்னிரண்டு மணி ஆனாலும் வெயில் தெரியவேயில்லை நிறைய பேர் என்னைப் போலுன்னைக் காண வந்தவர்களைப் பார்த்தேன். பன்னீர் தெளிப்பது போல் பிசு பிசுவென்று குளிர் காற்றில் உடல் நனைக்கும் மழைத் துளிகள் என்னை மகிழ்வித்தது.
அது எப்படி உன்னை பக்தியோடு பார்க்காமல் கண்காட்சியாக பார்க்கிறார்கள் பலர். கண்ணுக்கே விருந்தானவன் நீ என்பதாலா?
உன்னை சுற்றி வலம் வந்தேன். பக்க வாட்டில் உன் சிரம் அற்புதமாக தெரிந்தது. பின்னால் சென்றால் தெரியும் சதுரம் சதுரமாக இரும்பு தகடுகள் சூட்டில் பற்றவைத்து ஓட்டபட்டு (welding ) கரும் சாயம் தீட்டப்பட்டவை. மோட்டார் கார்களை நிறுத்தி வைக்க ஒரு இடம். அதை கடந்து சற்று முன்னே நகர்ந்தால் உன்னை நெருங்க முடிகிறது.
கரிய உருவில் மார்பளவு உயரத்தில் மலை அடிவாரத்திலே, சற்றே தலை நிமிர்த்தி வானத்தை நோக்கி யோகத்தில் கண்மூடி, கருநாகம் உன் சிரத்தருகே படம் எடுத்து ''நீயும் என்னைப் படம் எடு'' என்றது. கூட வந்தவர் உயர்ந்த பதவியில் ஒய்வு பெற்ற ஒரு அதிகாரி. அவர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். என்னையும் உன்னையும் அவர் தான் படம் எடுத்தார்.
இரு கரம் கூப்பி உன் எதிரே கண்மூடி நின்றேன். திருநாவுக்கரசர் உள்ளே தோன்றினார். மனமுருகி அவர் வேண்டிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.
"திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்க
உருவேயென் னுறவேயென் னூனே ஊனி
னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடுபாவாய் காவாய்
அருவாய வல்வினை நோயடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையு மமரரேறே."
என்ன சொல்கிறார் திருநாவுக்கரசர்?
இந்த உலகத்தில் நான் சேர்த்த ஒரே செல்வம் நீயே, நினைத்தாலே தேனை விட இனிப்பவன். மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் கதி அளிக்கும் ஒளி. இந்த மானிட ஜென்மத்தில் மட்டுமல்ல இனி வருவதிலும் நீ ஏ என் உறவு. தாய். நீ தாயுமானவன். என் உடல் பொருள் ஆவி நீ. கேட்டதையும் கேட்காததையும் வாரி வழங்கும் கற்பக விருக்ஷம் நீ. இந்த கண்ணும் கண்ணின் கருமணியும் நீ. நீ ஒருவனே என்னை ரக்ஷித்து அருள்பவன் என் கர்ம வினைகளை அகற்றுபவன் என்று திருவாவடு துறை ஆலய மாசிலாமணீஸ்வரரை வேண்டுகிறார்.
எனக்கு அவரைப் போல் வேண்டத்தெரியாது. என் மனதில் தோன்றுவதெல்லாம் இது தான்:
மகாதேவா உன் முன்னே நிற்கிறேன். நீ ஒருவனே ஆதி யோகி. பெயரற்றவன். பெற்றோரற்றவன். யோகத்தின் உரு. மௌனத்தில் எல்லாமே பேசினவன். ஆதிமனிதன் அறிந்த முதல் ஆதி யோகி. ஒன்றா இரண்டா எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகள் முன்பே ஞானத்தின் கரை கண்டவன். பனி மலையில் அக்னியாக ஒளிர்பவன். கைலாசமலையை நேரில் பார்க்க கொடுத்துவைக்காமல் படத்தில் பார்க்கிறேன். எங்கும் பனி வெண்ணிறமாக போர்த்தியிருக்க பொன்னார் மேனியாக, அதன் கண்ணைப் பறிக்கும் பொன்னிற கலசம். யார் கொடுத்த, அடித்த நிறமோ வர்ணமோ? வேறு யார் நீயே தான் . அசைவற்ற நீயே அகில அண்ட பகிரண்டத்தின் அசைவுக்கு காரணம்.
ஞானம் வேண்டிய முனிவர்களுக்கு அசையாமல் மௌனமாக கல்லால மரத்தின் கீழே மௌனமாகவே உபதேசம் செய்ய உன்னால் மட்டுமே முடியும்!
உன்னோடு நானும் படமானேன். பெயரளவில் தான் நீயும் நானும் சிவன். நீ எங்கேயும் உள்ளவன். நான் எங்கே என்று எனக்கே தெரியாதவன்!.
No comments:
Post a Comment