Wednesday, January 13, 2021

GOLDEN TINGE

 தங்கமான   ராஜா    J  K   SIVAN 


திருப்பித்  திருப்பி  விஷ்  யூ  ஹேப்பி  பொங்கல்..... பொங்கி தளும்பும்  பானை, அதன் பக்கத்தில்  கரும்பு, ரெண்டு  ஜோடி மாடு  கலப்பையோடு  ஒரு மூலையில்    .... இப்படி நிறைய  வாழ்த்துகள்.அழித்து அழித்து  கைவிரல் குட்டையாக குறைந்து போவதால் வேறு ஒரு உத்தி  யோசித்தேன்.

பொங்கலுக்கு  உங்களுக்கு  ஒரு தங்கக்  கதை சொன்னால் என்ன?

ஒரு நல்ல  ராஜா   எல்லோருக்கும்  உணவு, பொருள் என்று வாரி வழங்கி  குடிமக்கள் ''ஆஹா நம் ராஜாவைப் போல் எவருமில்லை. பசி என்று வந்தால் உணவு, பணம் இல்லை என்றால் இந்தா பணமூட்டை, படித்தவனுக்கு பட்டம்  பரிசு, ஏழைக்கு நிலம், பசு  இப்படி எல்லாம் தருகிறான்.  நாம் பாக்கியசாலிகள் இந்த ராஜாவைப்பெற '' என்று  பேசுவார்கள்.

ராஜா ஒருநாள் யோசித்தான். ''என்ன இது கொடுத்து கொடுத்து என் கஜானா தான் காலியாகிறது. இவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்களே. முகத்தில் சந்தோஷமே இல்லையே. எவ்வளவு கொடுத்தாலும்  நன்றியோ  திருப்தியோ காணோமே. ஏன்?''
 
இனிமேல் யாருக்கு  எது அத்யாவசியமோ அதை மட்டும் கொடுப்போம். பரம ஏழை எவனோ அவனுக்கு தான் உதவ வேண்டும்'' என்று முடிவெடுத்த ராஜா  ''மந்திரி,   உடனே போ. நமது நாட்டில் எவன் பரம ஏழையோ அவனை மட்டும் கொண்டுவா'' என்றான்.

ஒருவாரம் கழித்து மந்திரி வந்தான்.  

''ராஜா  நமது ஊர் கோடியில் காட்டில் ஒரு பரம ஏழை, மரப் பட்டையை உடுத்து, சடைமுடியாய்,  வீடு வாசல் குடும்பம் எதுவுமின்றி,  மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான். யாராவது வழிப்போக்கர் எதிரே வைக்கும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான்.அவன் தான் பரம ஏழை என்று அறிகிறேன்''

குதிரை மேல் சென்ற ராஜா அந்த முனிவர் முன் நின்றான். தியானம் செய்து முடித்த அந்த முனிவர் கண்ணை திறந்து அவனை பார்த்தார்.

அவரை வணங்கிய ராஜா ''நான் இந்த தேச ராஜா. உங்களை பார்க்க பரிதாபமாக  இருக்கிறது. உங்களுக்கு நல்ல ஆடைகள் தரட்டுமா?''
''................''.
''நல்ல வீடு கட்டி தரட்டுமா?
''................................''
''நல்ல உணவு வகைகள் வேளா வேளைக்கு  அனுப்பட்டுமா?
''..............................''
''என்ன வேண்டும் என்று சொல்லுங்களேன் .பேசாமல் இருக்கிறீர்களே?''  என்றான் ராஜா.

முனிவர் சிரித்துக்கொண்டே பேசினார் :  
''ஹே ராஜன்,     நான் ஏழை அல்ல.  நான் பணக்கா
ரன். இந்த உலகையே கண நேரத்தில் பொன்னாக மாற்றுபவன்.    நீ தேடும் பரம ஏழை இன்னொருவன் இருக்கிறானே.

''ஓ அப்படியா. யார் அந்த ஏழை?  காட்டுங்கள்.   சுவாமி  அப்படியே  இந்த உலகை பொன்னாக மாற்றும் வித்தையை  எனக்கும் சொல்லித்தருவீர்களா?''
''நான் சொன்னபடி செய்வாயா?''
''கட்டாயம்''
"ஒருவருஷம்  தினமும்  நீ  என்னிடம்   சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும்  முன்னால் இங்கே வந்து என்னோடு இருப்பாயா?
"நிச்சயமாக''  என்றான் ராஜா.

தினமும் அப்படியே வந்தான் ராஜா. எதிரில் அமர்ந்தும் முனிவர் பேசுவதில்லை.  முதலில் ஏமாற்றமாக இருந்தது.   பிறகு வழக்கமான ராஜ சபை, மக்கள் கூட்டம், பிரச்னைகள், இதிலிருந்தெல்லாம் விடுதலை போல்  திருப்தி ஏற்பட ஆரம்பித்தது. மலையின் அமைதி, வண்ண இயற்கை காட்சிகள், குளிர் தென்றல், பறவை மிருகங்களின் சப்தம் இதெல்லாம் பிடித்தது.

வருஷம் மூன்று ஓடிவிட்டது. ஒருநாள் முனிவர் பேசினார்.
''அடேடே மறந்தே போனேனே.  நீ ரெண்டு விஷயம் கேட்டாயே. பரம ஏழை ஒருவன் பற்றியும், எப்படி இந்த உலகையே தங்கமாக்குவது பற்றியும், இப்போது சொல்லட்டுமா அது பற்றி?

''குருவே  எனக்கு தான் தெரிந்து விட்டதே இப்போது. நான் தான் அந்த பரம ஏழை ஏன் என்றால்  இன்னும் நிறைய தங்கம் வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்ததால் தானே இந்த உலகை எப்படி தங்கமாக்குவது என்று உங்களிடம்  யாசித்தேன்.  உலகை பொன்மயமாகும் வித்தையும் தெரிந்தது. தினமும் காலை மாலை இருவேளையும் இந்த பிரபஞ்சமே பொன்மயமாக ஜொலிப்பதை பார்க்கிறேனே. நிஜ தங்கமுலாம் கூட அப்படி பளபளக்காதே.
 
'ஆம்  அந்த வித்தை  நீ  தெரிந்து கொண்டுவிட்டாய்.  உள்ளே நீ தங்கமயமாகிவிட்டதால் வெளியே எதுவும் தங்கமாகவே காணமுடிகிறது''

பகவானை உள்ளே  தரிசித்தவன் வெளியே எங்கும் எதிலும் அவனைக் காண்கிறான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...