Tuesday, January 12, 2021

HANUMAN

 

HANUMATH JAYANTHI 12.1.2021


          ''ராமா   நீயா அழைத்தாய் ''  J .K. SIVAN  


எங்கள் நங்கநல்லூர்  உலகப்புகழ் பெற காரணமானவர்  ஹனுமான்.  32 அடி  உயரம் . அவ்வளவு பலசாலி, ஆஜானுபாஹுவாக நிற்பவர்.    இருந்தாலும்    இரு கரம் கூப்பி  பவ்யமாக  ஆதி வ்யாதிஹர  பக்த  ஆஞ்சநேயனாக   உதாரண புருஷனாக நிற்பதிலிருந்து  நாம்  அறிவது, 

நாமும்  ஆணவம், செருக்கு, கர்வம் அனைத்தையும் களைந்து எல்லோரிடமும்  நட்பாக, அன்பாக, பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்று  அறிவிக்கிறார்.  இன்று ஹனுமான் ஜெயந்தி.  என்பதால்  அவரைப் பற்றிய  ஒரு  சின்ன  கதை சொல்ல ஆசை.

''கருடா,  எங்கே  உன்னை வெகுநாளாக  காணோம்,  எங்கே  போனாய் ? என்றான் துவாரகையில் கிருஷ்ணன். 

''ப்ரபோ,  திடீரென்று  பூலோக யாத்திரை சென்றேன்.  வரும் வழியில்  ராமேஸ்வரமும் சென்றேன் அங்கே  ஒரு அற்புத அனுபவம் ப்ரபோ. அதை உடனே  உங்களிடம்  சொல்லத்தான் வந்தேன்'' 

'சொல்லேன் கேட்கிறேன்''

''  ராமேஸ்வரத்தில் ஒரு இடத்தில்  ராமர் விக்ரஹம்  எதிரே  வயதான ஒருவரை  பார்த்தேன். கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.  ''ராமா ராமா''  என்று மூச்சு விடாமல் தியானம்.  ஓரிரு நாள்  பார்த்துவிட்டு  அருகே சென்ற பிறகு தான் தெரிந்தது  அது  நமது 
ஹனுமான்  என்று. பேசாமல் அருகே சென்று அமர்ந்தேன்.

''ஆஞ்சநேயரே , எதற்கு அழுகிறீர். வைகுண்டத்துக்கு  வா என்று ராமர் கூப்பிட்டபோது கூடவே போய்  இருக்கலாமே. சாதுக்களோடு இங்கேயே  ராம தியானத்தில் ஜெபத்தில், சங்கீர்த்தனத்தில்  ஈடுபடுகிறேன் என்று சொல்லி விட்டு இப்போது அழுகிறீரே.''

''கருடா,  இது அழுகையல்ல. உனக்கு அனுபவமில்லை.  என் ராமனை நினைத்தால் என்னை அறியாமலேயே  கண்கள் குளமாகிவிடும்''

''நினைப்பானேன், நேரிலேயே காணலாமே,  என்னோடு  துவாரகை வாரும். ஸ்ரீ கிருஷ்ணனை தரிசியும்''

''என் ராமனைத்தவிர  வேறு யாரையும் நினைக்க முடியாதே''.   நீ போய் வா'  என்று என்னை  அனுப்பினார் ஆஞ்சநேயர்.   இந்த   சந்திப்பை பற்றி தான் உங்களிடம் சொல்ல வந்தேன்.

''கருடா,  ராமன் அழைக்கிறார்  என்று ஹனுமனை  நீ  இங்கே  அழைத்து வந்திருக்கலாமே.'' என்கிறார் கிருஷ்ணன்.

''அழைப்பதெதற்கு.  லோகமே அறிந்த விஷயம் தானே?.  ஸ்ரீமன் நாராயணனே, ராமனாக இருந்து இப்போது ஸ்ரீ கிருஷ்ணன் என துவாரகையில் இருப்பதை அறிந்தும் ஆஞ்சநேயர்  தானே ஓடி வரவேண்டியது தானே''  என்றாள்  சத்யபாமா.

 ''பாமா',  ' ஆஞ்சநேயன் ராமனைத் தவிர  வேறு யாராகவும் என்னை அங்கீகரிக்கமாட்டான் என எனக்கு தெரியும். அவனுக்கு நான் தான்  ராமன் என்று காட்டினால் தான் நம்புவான்.

சத்யபாமா  சிரித்தாள்.  ''ராமன் ஏகபத்னி விரதன். நீங்களோ  ஏகப்பட்ட  பட்டமகிஷிகள் உடையவர்.   எத்தனையோ பேருடன் ராஸக்ரீடை.  ஆஞ்சநேயன் ராமனாக  நிச்சயம் உங்களை ஏற்க மாட்டான்'' ,   நான் மட்டும் உங்களோடு சீதையாக நிற்கிறேன். நீங்கள் ராமனாக காட்சி அளியுங்கள் ஆஞ்சநேயனுக்கு''

''கருடா, மீண்டும்  போ. ஆஞ்சநேயனை இங்கே அழைத்து வா''

ராமேஸ்வரத்தில்  எவர் கண்ணிலும்  படாமல் ஹனுமான்  ராமன் முன் நின்று த்யானம் பண்ணிக் கொண்டிருந்தான்.
''ஹனுமா...
''யார்?
''கருடன்''  .வாருங்கள் என்னோடு துவாரகையில்  கிருஷ்ணனாக   ராமரைக் காணலாம்.
''கிருஷ்ணனா?  யார்  அது.?
தேவகி நந்தன், யசோதை மைந்தன்,  நந்தகுமாரன், வசுதேவ புத்ரன். ''
''எத்தனை அம்மா, எத்தனை அப்பா.... என்ன இது?''
ஹனுமான், தேவகி வசுதேவர்  பிள்ளையாக பிறந்து  யசோதா  நந்த கோபன்  மைந்தனாக  வளர்ந்தவன். எட்டு பட்டமகிஷிகளோடு  துவாரகை மஹாராஜா  கிருஷ்ணனாக இருக்கிறான்.வாருங்கள் போகலாம்''

''காதைப் பொத்திக்கொண்டே... இதெல்லாம் வேண்டாம்... என் ராமனே போதும் எனக்கு...நான் வரவில்லை.

கருடன் சொன்ன விஷயங்கள் கேட்ட கிருஷ்ணன். ''கருடா. நான் தான் சொன்னேனே. ராமர் அழைக்கிறார் வா''   என்று கூட்டிவா என்றேன . நீ ஏன் கிருஷ்ணனை பார்க்க வா என்று  ஹநுமானிடம் சொன்னாய்?   திரும்பப்   போய் ராமன் கூப்பிடுகிறான் என்று  சொல்லி அழைத்து வா ''

 தியானத்திலிருந்து கண்விழித்த ஆஞ்சநேயன்  எதிரே  கருடன் மீண்டும் நிற்பதை பார்த்து

 ''எதற்கு கருடா,  வந்திருக்கிறாய் மறுபடியும்'' என்றான்.

''ஸ்ரீ ராமபிரான்  உங்களை வரச்சொன்னார்?'' என்னுடன் வாருங்கள்.

''என் ராமன் எதற்கு உன்னை அனுப்பினான்?  எனக்கு வயது அதிகமாகிவிட்டது உம்மோடு வருவதற்கில்லை''

கருடனுக்கு  புரிந்துவிட்டது.  தனது கர்வம், பெரியவன்  என்கிற அகந்தை  ஹநுமானிடம் இல்லை.  எனது அலட்சியத்தை பெருமாள் சோதனை செய்கிறார்.   ஹனுமான் பக்கத்தில் அமர்ந்து அவரோடு சேர்ந்து பத்து பதினைந்து ராம நாமம் சொன்னதிலேயே  கருடனுக்கு புத்தி வந்து விட்டது.

''ராமர்  காத்திருக்கிறார்  போகலாமா?''  
''கருடா  என்னை கொஞ்சம் தூக்கி விடப்பா '' ரொம்ப கஷ்டப்பட்டுமுடியாமல் கருடன் கீழே விழுந்தான்.   மூக்கு உடைந்து ரத்தம் சொட்ட  கருடன் ஹநுமானை தூக்கி நிறுத்தினான்.

''நன்றி  கருடா.  வா  நாம்   நடந்தே ராமனைப் பார்க்கப்   போவோம். ''

''ராமேஸ்வரத்திலிருந்து  துவாரகைக்கு  நடந்தா.....?    என் மீது ஏறிக்கொள்ளுங்கள் ஆஞ்சனேயேரே . நான் தூக்கிக் கொண்டு செல்கிறேன்.  ஆபத்துக்கு தோஷமில்லை. ''

''இல்லை  கருடா,  என்னப்பன்  உட்காரும் இடத்தில் நானா?.  என்னய்யன்   ராமனைக்காண  செல்லும்போது என்ன ஆபத்து.  தொப் என்று  கீழே உட்கார்ந்தான் ஹனுமான். 

''என்னைக் கொஞ்சம் கை தூக்கி நிற்கவை கருடா. அப்புறம் நீ என்னை தூக்கிக் கொண்டு போகலாம்''

கருடன் ஹனுமான் கையைப் பிடித்து தூக்க முயற்சித்து  எலும்பு முறிந்தது தான் மிச்சம்.  மேலும் நசுங்கினானே தவிர  ஹநுமானை அசைக்க முடியவில்லை. கருடனுக்கு தலை சுற்றியது. 

இதைக் கவனித்த  ஹனுமான் வீறு கொண்டு  எழுந்தான். கருடனைத் தோளில்  தூக்கிக்கொண்டு பாய்ந்தான்.  கண் விழித்த கருடன் ஹநுமானோடு துவாரகையில்  கோமதி நதிக்கரையில் நிற்பதை கண்டான்.  
 
''கருடா, ராமனிடம்  போய்ச்  சொல் .  ஸ்னானம் செய்துவிட்டு வருகிறேன்''.
வேகமாக வந்த கருடன் கிருஷ்ணன் காலில் விழுந்தான்.

''என்ன  கருடா வந்ததும் வராததுமாக  என் காலில் விழுகிறாய்.  ''

''பிரபு என் கண்ணை திறந்தீர்கள். எதற்கு ஹநுமானிடம் அனுப்பினீர்கள் என புரிந்தது. என் கர்வம் ஒடுங்கியது. இதோ ஹனுமான் வருகிறார்.

சத்யபாமா உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன்  அலங்கரித்து   மஹா லட்சுமி போல், சீதையாக  நிற்க,  ராமனாக  பஞ்சகச்சம் அணிந்து, வில்லுடன்  கிருஷ்ணன் அருகில் நின்றார்.  எதிரே  மாடத்தில்  ருக்மணி துளசி பூஜை  பண்ணிவிட்டு எளிமையாக  தியானத்தில் நின்றது தான்  ஹனுமான் கண்ணில் பட்டது.

' அம்மா என் ஜானகி தேவி'' என்று  ருக்மணி காலடியில் விழுந்து வணங்கினார் ஹனுமான். ராமனாக கிருஷ்ணன் அவள் அருகில் நின்றார்.

''ஹனுமான் சத்யபாமாவை பார்  மஹாலக்ஷ்மியைப் போல் நிற்கிறாள்''என்று  ருக்மணி ஆஞ்சநேயரிடம் சொன்னாள் .

''அம்மா  என் தாயே, எனக்கு உன்னை தான் தெரியும். மஹா லக்ஷ்மியோடு நான் பழகியதில்லை.''

ராமனாக  நின்ற கிருஷ்ணனை சுற்றி வந்து நமஸ்கரித்தார்  ஹனுமான்.  

''இனி நீ எங்கும் போகவேண்டாம்  இங்கேயே  இரு  ஹனுமான். '' என்கிறார் கிருஷ்ணன்.

''என் ராமன்,  அவனுடைய பக்தர்கள் புரியும் ராம நாம  சங்கீர்த்தன, பஜனத்தில்  திளைத்து   நிறைந்திருக்கிறான். அதனால்   என்  மனம்  அங்கேயே  செல்கிறது'' என்று தாவிச்  சென்றார்  ஹனுமான்.  

சத்யபாமாவும்  கர்வம் விட்டகல  புதுமை பெற்றாள் .  கிருஷ்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டு ஹனுமான்  சென்ற திசையை பாசத்தோடு நோக்கினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...