இப்படியும் ஒருவரா? J K SIVAN
ஒரு ஆச்சர்யமான மனிதர் அவர். மன்னிக்கவும் .அவரை ''மனிதர்'' என்று எழுத கை கூசுகிறது. இப்படி ஒருவரா??? தெய்வம் மானிடனாக வந்த உரு என்று சொன்னால் பொருந்தும். அவர் எவரிடமும் தீட்சை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலே யே வித்யாசமின்றி அனைவராலும் குருவாக ஏற்கப்பட்டவர். அவரது ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை XRAY எக்ஸ்ரே தன்மை கொண்டதோ என்னவோ. பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார். ஒரே சமயத்தில் பல இடத்தில் பார்த்தவர்களும் உண்டு. காசு தேடுகிற சாமியார் இல்லை.
பார்ப்பதற்கு, மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் எந்நேரமும் ஏதோ கவலைப் பட்டுக்கொண்டே யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்) உடம்பை மூட ஒரு வெள்ளைத் துணி. வேட்டியோடு சேர்ந்து உடலின் மேலும் தலையை மூடியபடி போர்த்தப் பட்டிருக்கும். ஆகார விஷயம் ரொம்ப சொல்பம். ஒன்றிரண்டு கவளம் அதுவும் ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம் தான்.
உபவாசம் என்று இருந்தால் அது நம்மைப் போல் ஒருவேளை ரெண்டுவேளை இல்லை. ரெண்டு மூன்று மாசம் வரை கூட தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து
குடிப்பது தான் ஆகாரம்.
சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின் தோளில் இருந்தபோதே சிதம்பர ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) புரிந்துவிட்டது. பல பாடல்களில் அது வெளிப்பட்டது.
சந்நியாசியாய் இருந்தும் உலக இயல் அதன் கஷ்டங்கள் புரிந்தவர், தெரிந்தவர். அவை
பிடிக்கவில்லை, படமுடியவில்லையே இந்த துயரம் என்று கதறல். போதும் போதும் பட்ட தெல்லாம் என்ற ஒரு அருமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். என்ன அற்புதமாக எழுதி இருக்கிறார்.
''படமுடியாதினித் துயரம் பட முடியாதரசே
பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்
உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே, குரு மணியே, மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
இந்தப்பாட்டில் கண்டபடி தானே இறைவனின் உடல் உயிர் ஆவியானவர் அந்த மா மனிதர். சித்தர். ஞானி.
ஒரு ஆடு மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்து போவார். என் அப்பா, இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய். இது கொடிய விஷ நாகத்திற்கும் கூட. அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.
'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''
செடி கொடி தண்ணீரின்றி எங்காவது வாடி வதங்கி தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். '' ஐயோ என்ன துன்பம், அதன் பசியை போக்க யாருமில்லையா என்று உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவ காருண்யர் அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம்'' அவருக்கு. நமக்கும் கொஞ்சமாவது அவர் வழியில் போக கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஜீவ காருணியத்தைப்பற்றி அவர் கையாலேயே எழுதிய ஒரு சில வரிகள் நம் மனதைத் தொட வில்லையானால் நமது நெஞ்சம் வாடும் எந்த உயிரைப் பற்றியும் கவலையே கொள்ளாது.
(என் வீட்டில் வெற்றிலைக் கொடி தொட்டியில் வளர்க்கிறேன். கயிறு கட்டி காம்பௌண்ட் சுவர் மீது செங்கலில் ஒரு கொடி . தினமும் காலையில் அதன் வளர்ச்சியை கண்டு மகிழ்ந்து தண்ணீர் ஊற்றுவேன். ஒருசமயம் மூன்று நாள் என்னால்
வீட்டில் இல்லை. தண்ணீர் ஊற்றமுடியவில்லை. நான்காவது ஐந்தாவது நாள் திரும்பி வந்து பார்த்தபோது கண்ணீரில் ரத்தம். வாடிய இலைகள், துவண்ட கொடி . தொட்டியில் பாளம் பாளமாக பிளந்த காய்ந்த மண். கொலை செய்த குற்ற உணர்ச்சி. மெளனமாக அதனிடம் . மனதில் அமைதியில்லை. மீண்டும் துளிர்த்ததைப் பார்த்த பின் தான் மகிழ்ச்சி.)
அவரது தமிழ் வார்த்தை இது:
'உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மை யாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத் தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினி டமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத் தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத் தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக் கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணி யர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின் பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷித் தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமு மென்று உண்மையாக அறியவேண்டும்.''
நூறு வருஷங்களுக்கு முன்பு அவர் எழுதிய எழுத்துக்களை பார்த்திருக்கிறேன்.
எத்தனையோ பக்கங்கள் வரிசை வரிசையாக நீண்ட எழுத்துக்கள், அடித்தல் திருத்தல் இன்றி எளிதில் படிக்கும்படியாக இருக்கிறது.
அந்த மா மனிதர் ஒரு ம்ருது பாஷி . உரக்கவே பேச மாட்டார். நம்மை மாதிரி எதையாவது சாப்பிட்டுவிட்டு இடுப்பு வேஷ்டியில் துடைத் துக்கொள்ளும் ரகமல்ல. ஒரு கைக் குட்டை எப்போதும் இடுப்பில் தொங்கும். நம்மைப் போல கை களை வீசி நடக்கவே மாட்டார். கைகளை எப்போதும் கட்டியவாறே காணப் படுவார். காலும் தலையும் எப்போதும் மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை. ஒரே துணி உடம்பைச் சுற்றி தலையையும் சுற்றி மூடி இருக்கும். அதுவும் வெள்ளைத்துணி. கைகளை தொங்கவிட்டுக் கொண்டு நடக்க மாட்டார். எதிரே வரும் யார் முகத்தையோ, அவர்கள் நிறமோ, உருவமோ எதையுமே பார்க்க மாட்டார். அப்படி அவர்கள் உருவம் கண்ணில் பட்டுவிட்டால் என்னால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என்ற பயமும் கவலையும் அவரைத் தின்று விடும். இதை பயந்த ஸ்வபாவம் என்றோ, அகம்பாவம் என்றோ தப்பாக எடை போடக் கூடாது. பரிவு, பணிவு. மரியாதை. நான் மேலே சொன்னது அவரைப் பற்றி அவரே சொல்வது அருமையான பாடல் ரூபத்தில் :
''கையற வீசி நடப்பதை நாணிக்
கைகளை கட்டியே நடந்தேன்
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால்
மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன்.
வையமேல் பிறர் தம் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப்பார்த்ததே இல்லை.
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்
இப்படிப்பட்டவர் மேல் ஒருவர் கோர்ட்டில் ஒரு கேஸ் போட்டார்
''இந்த ஆள் ஏமாற்று வித்தைக்காரர், மக்களை தனது பக்கம் வசப்படுத்தி துன்பப் படுத்தக் கூடியவர். இவர் பாடல்களை வெளியே வராமல் தடை போடவேண்டும்'' என்று கேஸ் வெள்ளை க் கார கோர்ட்டில் வந்து இந்த மனிதர் நேரில் ஆஜராக சம்மன். உத்தரவு.
அந்த கோர்ட் பண்ணின பாக்கியம் அவர் கோர்ட்டில் தனது வெள்ளை மேலாடையைப் போர்த்தியவாறு வந்து நீதிபதி முன் நின்றார். என்ன தோன்றியதோ அந்த ஆங்கிலேய நீதி பதிக்கு. அவர் வந்து நின்ற உடனேயே கோர்ட்டில் அத்தனை பேரும் எழுந்து நின்றதைப் பார்த்துவிட்டு தானே தனது இருக்கையில் இருந்து தன்னிச்சையாக எழுந்து நின்று அவரை வணங்கினார். ஒரே வரி தீர்ப்பு.
''இந்த கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது''
நான் சொன்ன மனிதர் வேறு யாருமில்லை. நம்மோடு அண்மையில் வாழ்ந்த சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்கிற வள்ளலார்
சுவாமிகள். இந்த மாசம் தைப்பூசம் வெகு விமரிசையாக வடலூரில் கொண்டாடப்படும். ஜீவன் முக்தராக ஒளியோடு கலந்தவர்.
No comments:
Post a Comment