THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Tuesday, January 5, 2021
MARGAZHI VIRUNDHU
மார்கழி விருந்து J K SIVAN
22 ''செங்கண் மாலே'
இந்த வருஷம் மார்கழியில் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பலபகுதிகளில் நல்ல மழை. பயிர்கள் பாழாகாமல், நீர் தேக்கங்களில் நீர் சேமித்து வரும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கட்டுப்பாடோடு ஏற்பாடுகள் செய்வது அரசாங்கத்தின் கடமை.
இறைவன் எங்கும் உள்ளான். அவனை எப்பெயரிலும் எவர் வேண்டுமானாலும் அறியலாம் என்பதால் தான் ' ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற பரந்த நோக்கம் நம்மிடம் உண்டு. எனினும் ஒரு தாயைப் பொறுத்த வரை எல்லாக் குழந்தைகளும் பிடிக்கும் என்றாலும் ''என் குழந்தை'' என்று நோக்கும்போது அவளுக்கு தன் குழந்தை மீது அலாதி பிரியமும் பாசமும் ப்ரத்யேகமானது அல்லவா?.
கிருஷ்ணன் அவ்வாறே நம் இதயத்தில் குடிகொண்டவன். இந்த மார்கழி மாதம் முழுதும் அவன் விடியற் காலை ஒவ்வொருநாளும் ஆயர்குடிப் பெண் ஆண்டாளால் துயிலெழுப்பப்பட்டு நம் அனைவரையும் வந்தடை கிறான் என்று உணரும்போது நம் எல்லோருக்கும் மனம் மகிழ்கிறது.
ஆண்டாளின் திருப்பாவை 21 பாசுரங்களை இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில், என் மனத்தையும், ஆர்வத்தையும் சேர்த்துக் கலந்து மிக்க மகிழ்வோடு உங்களுக்கு என் விருந்தாக பரிமாறினேன். தொடர்ந்து செயகிறேன். என் தமிழ் எழுத்தும், வார்த்தைகளும் சரியாக இல்லாவிட்டால் என்ன? இவை எல்லாமே மனதின் வெளிப்பாடு தானே. என் மனத்தில் அவன் நிறைந்திருக்கும் போது என் கவனம் எழுத்திலோ, என்ன வார்த்தை போடுவோம் என்பதிலா லயிக்கும்? என்ன தோன்றுகிறதோ அது தான் எழுத்து. மனம் சொல்வதை கை எழுத்தாக சமைக்கிறது. தப்பு என் சமையலில் (நான் சேர்க்கும் ,புளி, உப்பு, காரத்தில்) தானே தவிர உலையில் கொதிக்கும் அரிசியில் இல்லை.
இதுவரையிலான என்னுடைய இந்த சிற்றறிவிற்கெட்டிய முயற்சி, வாசகர்களாகிய உங்களை திருப்தி கொள்ளச்செய்து, ஒரு கணம் அந்த இளம் இடைச் சிறுமியை நினைக்கச் செய்தால் என் உழைப்பிற்கு அதுவே அன்பர்களே, நீங்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு, சன்மானம்.
இன்னும் என்னை திருப்திப்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டுக் குழந்தைகளை அடிக்கடி கோயிலுக்கு அழைத்து செல்லுங்கள். பெருமாள் கோவிலில் ஆண்டாளை அறிமுகம் செய்து வையுங்கள். இந்த மார்கழி மாதம் கோவிலுக்குக் கூட்டிச் செல்ல வழியில்லை.
ஆண்டாள் சந்நிதியைக் காட்டி ''இதோ உள்ளே இருக்கும் உம்மாச்சி அம்மா பத்தித் தான் உனக்கு தினமும் சொன்னேன்'' என்று ஞாபகப் படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறு சொல்ல நேரிட்டால் நீங்கள் நினைவில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.!
இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலையிலேயே கூட்டிக் கொண்டு யமுனை நதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாம னாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள்.
இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.
கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட் பெண்ணல்லவோ ஆண்டாள். அவள் என்ன சொல்லிப் பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, எனக் கோதையின் ஓலைச்சுவடியில் எழுத்து வடிவில் பார்ப்போம்:
''அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்''
“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி, தோற்று, உன் அருமை பெருமை அறிந்து, தம் தவறை உணர்ந்து, கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, பணிவோடு, உன் அடிமையாக நின்றிருப்பதை பற்றி நாங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறோம்,பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே. பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக் கண்களை சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே".
இதோ இங்கே வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி ஆலயத்தின் வாசலில் நிற்கும் இருவரும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள் தான். கோவில் பட்டாசார்யர் சுவாமி விஷ்ணுசித்தரை நோக்கி தலையாட்டி உள்ளன்போடு என்ன சொல்கிறார்:
"சுவாமின், என்ன ஆழ்ந்த பக்தி உங்கள் அருமைப் பெண்ணுக்குப் பார்த்தீர்களா?. தனது தூய பக்தியை அந்த ஆயர்பாடிச் சிறுமி மேல் புகுத்தி அவள் கிருஷ்ணனை நேரில் கண்டு வணங்கியது போல் வார்த்தைச் சித்திரம் தீட்டியிருக்கிறாளே . உண்மையிலே இன்று உங்கள் பெண்ணுக்கு ரங்கன் காட்சி தந்தானோ என்னவோ.? அதனால் தான் இப்படியெல்லாம் எழுத வருகிறதோ?''
அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் வழக்கமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி நடைபெறும். அங்கிருக்கும் பக்தர்களுக்கும், எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதை யெல்லாம் நினைத்து பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி இன்றைய பாசுர பகுதி விடை பெறுகிறது
ReplyForward
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment