மணி வாசகர் J K SIVAN
திருச்சாழல் பாடல்கள் 12-14
கானார் புலித்தோல் உடைத்தலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.12
ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.12
''தடுத்து ஆட்கொள்பவன் '' ''அடிமையாக்கி அருள்பவன்'' என்று என்னமோ வார்த்தைகள் சொல்கிறாயே பெண்ணே. அவனைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே. இதோ பார் அவனுக்கு ஆடை, வீடு, சாப்பாடு, ஏதாவது எங்காவது உண்டா? துணியே கிடைக்காமல் யானையின், புலியின் தோலை எல்லாம் எடுத்து உடுத்துகிறான். வீடு இல்லாமல் பொது இடமான சுடுகாட்டில் உறைகிறான். சாப்பிட தட்டு கூட இல்லை. மண்டை ஓடு எங்கோ எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். சாப்பாடு கிடைக்காமல் விஷத்தை விழுங்குகிறான். இவனுக்கு, இந்த சிவனுக்கு, இந்த உலகில் யார் அம்மா ஆட்படுவார்கள்? அடிமையாவார்கள்?
''அவ்வளவு தான் நீ புரிந்து கொண்டது. கேள் சொல்கிறேன். நம் போன்ற மண்ணவர்களை விட்டு விடு. விண்ணவர்கள், அதுவும் தேவாதி தேவர்களான, பிரம்மனும் விஷ்ணுவுமே தேவர்கள் தலைவன் இந்திரன், சகல சம்பத்தும் கொண்ட குபேரன் போன்றவர்களும் பரமேஸ்வரன் சிவபெருமானுக்கு பரம்பரையாக அடியவர்கள். மண்ணுலகத்தில் அடேயப்பா எண்ணற்ற அடியார்கள் அவனுக்கு உண்டு. தெரியாமல் பேசிவிட்டாய் பாவம்.
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ.13
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ.13
''ஓஹோ, அப்படிபோகிறாயா நீ, சரி, உங்கள் சிவன், நெருப்பாக சுடுபவன். அக்னிஸ்வரூபன். அவன் எதற்கு ஒரு அழகிய பெண்ணை ''அக்னி சாட்சியாக மனம் புரிந்தான்? ஒரு மாறுதலுக்கு குளிர்ந்த நிலவு சாட்சியாக மணம் புரிந்து கொண்டிருக்கலாமே என்று கேலியாக சிரிக்கிறான் பௌத்தன் பெண் வாயிலாக. அதற்கு மணி வாசகர் ஊமைப்பெண் வாயிலாக கொடுக்கும் பதில்: வாஸ்தவம் பெண்ணே, அவனுக்கு அக்னி சாக்ஷி தேவையில்லை. ஆனால் அவனது ஒவ்வொரு செயலும் உலகோருக்கு, எடுத்துக் காட்டாக இருக்கவேண்டுமே. அதற்காக உலகில் யாவராலும் மதிக்கப்பட வேண்டும் என்று அக்னி சாக்ஷியை அறிவுறுத்துகிறார். வேதம் யாகம் அக்னி மூன்றும் பிரிக்கமுடியாதவை அல்லவா? போகியாக இருந்து போகத்தையும் யோகியாக இருந்து யோகத்தை கொடுப்பதும் அவனன்றோ?
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 14
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 14
சிவன் ஏன் இப்படி செய்தான் என்று சொல்லமுடியுமா உன்னால்? அதாவது அவன் இருக்கும் இடமாக சிதம்பரத்தை தேர்ந்தெடுத்தான். ஆஹா என்ன எழில் பொங்கும் ஊர். குளிர்ந்த சோலைகள், தேனாக ஓடும் நீர். செழிப்பான பச்சை பசேல் என்ற நெல் வயல்கள். பசுக்கள், கன்றுகள், பக்தி கொண்ட சிவனடியார் கூட்டம்... இதை விட்டு எங்கோ ஆலமரங்கள் காடாக இருக்கும் திருவாலங்காட்டுக்கு சென்று ஏன் ஆடினான்?
உனக்குத் தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியவில்லை சொல் என்று பதவிசாக கேளேன் இப்படி எதற்கு ஒரு கேள்வி? எனினும் உனக்கு தெரியவேண்டிய விஷயத்தை சொல்கிறேன் கேள் பெண்ணே.
திருவாலங்காட்டுக்கு சும்மா போகவில்லை சிவன். அங்கு என்ன நடந்தது தெரியுமா? ரக்தபீஜன் என்ற ராக்ஷஸனை கொன்று அவனது ரத்தத்தை உறிந்து (அவன் ரத்தம் ஒரு சொட்டு
பூமியில் விழுந்தாலும் அவனைப்போல பல ராக்ஷஸர்கள் உருவாகி விடுவார்கள் என்று அறிந்து) கோபாவேசமாக சூலாயுதத்தை கையில் கொண்டு உக்ரமாக உலகையே அழிக்கும் அளவுக்கு பல்லுயிர்களுக்கு சேதம் விளைவித்து எல்லோருக்கும் அச்சமூட்டியவாறு ஆடிய பத்ரகாளியின் செருக்கை வெல்ல, அடக்க, வேறு யாரால் முடியும்?
இன்றும் திருவாலங்காட்டு ஆலயம் செல்பவர்கள் முதலில் அங்குள்ள பத்ர காளியை தரிசனம் செய்துவிட்டு தானே தாண்டவனை தரிசிக்கிறார்கள். உலகமுய்யும் பொருட்டு அவன் செய்த காரியமே திருவாலங்காட்டில் அவன் ஆடிய ஊர்த்வ தாண்டவம். சபேசன் ஆடிய அந்த ஊர் ஐந்து சபைகளில் ஒன்றான ரத்னசபை. முடிந்தபோது திருவாலங்காட்டு புராணம் படிக்கலாம்.
No comments:
Post a Comment