வெற்றி வேற்கை J K SIVAN
அதி வீர ராம பாண்டியன்
பாண்டியன் நீதி வாக்கியங்கள்
அதி வீர ராம பாண்டியனின் நறுந்தொகை என்னும் வெற்றி வேற்கை நிறைய அன்பர்களை ஈர்த்துவிட்டது என்று அறிந்து மகிழ்கிறேன். ஆம் அ.வீ.ரா பாண்டியன் ரொம்ப கெட்டிக்காரன். ஞானி. மேலும் அவன் சொல்வதில் இன்றும் சிலவற்றை கேட்போம். மூன்றாவது நான்காவது வகுப்பில் படித்திருந்தாலும், இன்றும் அதன் விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறதே.
தலையில் குட்டு வாங்கிக்கொண்டு தப்பில்லாமல் மறுபடி மறுபடி இந்த வெற்றிவேற்கை மனப்பாடம் செயது குட்டு பெறாமல் வரதராஜ நாயக்கர் தமிழ் வாத்தியாரிடம் ஒப்பித்து இருக்கிறேனே.
''பெருமையும் சிறுமையுந் தான் தர வருமே'' - ரொம்ப புத்திசாலி, அதி மேதாவி, படித்தவன், தானே தனது பெயரை, பெருமையை, கெடுத்துக்கொண்டு தவிப்பதை பார்க்கிறோம். எதற்கு இந்த நிலை? தேவையா? இல்லை. விதி மதியை கெடுப்பதால் நேருவது. தன்னை எவரும் நெருங்கமுடியாது என்ற அகம்பாவம், தானே வரவழைத்துக் கொள்ள செயகிறது.. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும் என்பது மறந்து விடுகிறது.
நல்லதை செய்து கொண்டே வருபவன் அதன் அருமை தெரியாத அறியாத பலரால் இகழப்பட்டாலும், கேலி செய்யப்பட்டாலும், தனது கடமையை எந்த சுயநலமும் இன்றி பிறர் நலனுக்காக, பொது நலத்துக்காக செய்துகொண்டு பாடுபடுவதை உலகம் அறிந்து வியக்கிறது, போற்றுகிறது. அதுவும் தானே வரவழைத்துக் கொள்ளுவது தான். இது இப்படி இருக்கிறது?
''சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே''
பாண்டியனின் அற்புதமான சொல் இது. அறிவில் குறைந்தவர் தவறுகள் தான் செய்வார்கள். அதிகப்ரசங்கியாக பேசுவார்கள். எல்லோராலும் இகழப்படுவார்கள். அமுல் பேபி என்று அவர்களை சிரித்துக்கொண்டே புறக்கணித்து பொறுமை காக்க வேண்டும். பெரியோர்கள் இந்த அரைகுறைகளுடன் தோளுக்கு தோள் சமமாக வாதம் புரிந்தோ, கோபம் கொண்டு பதில் சொல்வதோ சேற்றை வாரி மேலே பூசிக்கொள்வது போல் என்கிறான் பாண்டியன். இப்போது இப்படி எல்லாம் நடக்கும் என்று அப்போதே என்ன தீர்க்க தரிசனம்!
இதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறது என்பதை அடுத்து சொல்கிறான் வேந்தன்.
''சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே'' -
''சரி, ஏதோ அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று பொறுத்து பூமி ஆள்வாராக இருந்தால், அந்த அரைகுறைக்கு மேலும் தெம்பு கூடிவிடும். சிறுபிழை பொறுக்கப்பட்டதால் பெரிய பிழை ஒன்றைச் செய்யும். அதால் கேடு விளையும் என்று அறியும்போது பெரியோர் பொறுமை காக்க மாட்டார்கள். தக்க சமயத்தில் குறுக்கிட்டு பெரும்பிழைகள் நேராது பாதுகாப்பார்கள். அறுபது எழுபது வருஷங்கள் கூட பொறுப்பார்கள் போல இருக்கிறது.!
'' நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே'' -
சிலரை திருத்தவே முடியாது என்கிறோமே அவர்களைப் பற்றி தான் அதிவீரராம பாண்டியன் இதை சொல்கிறான். அவன் காலத்திலேயே இப்படி எல்லாம் ஆசாமிகள் உண்டு போல் இருக்கிறது. நாம் நினைப்பது போல் பழையகாலத்தில் ''எல்லோரும் நல்லவரே'' அல்ல என்று தெரிகிறது.
நூறு வருஷம் பழகினாலும், பழக்கினாலும், குறுகிய, தாழ்ந்த, கொடிய எண்ணம் கொண்டவன் நட்பு நம்மை நெருங்க விடாமல் அவனை சற்று தள்ளியே தூரவே வைத்துக் கொள்ள செய்யும். நாம் தான் நிறைய பேரை பார்க்கிறோமே.
குளத்தின் அடியில் பாசி நிறைய படர்ந்திருக்கிறதே, அது குளத்தில் வேரூன்றியா இருக்கிறது. அப்படியே படர்ந்து அங்குமிங்கும் காலை சுற்றிக்கொள்ளுமே தவிர அதற்கு நிலை கிடையாது. மேலே சொன்னவர்கள் நட்பு அப்படிப்பட்டது என்கிறான் பாண்டிய ராஜா.\
மேலே சொன்னதற்கு முற்றிலும் நேர் மாறாக ஒரு வாக்கியம் அடுத்தது.
''ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே'' - என்ன அர்த்தம்?
ஒரு சிறந்த அறிவாளி, நல்ல மனதும், எண்ணமும் கொண்டவர், ஊருக்கு உபகாரி, இப்படி ஒருவர் நட்பு நமக்கு ஒரே ஒரு நாளைக்கு கிடைத்தாலும், அது போதுமானது. மேலும் வளரும், பலப்படும், எப்படியாம் தெரியுமா? உறுதியான பூமி இரண்டாக பிளந்து நடுவே பிளவில் வேர் ஒன்றி வளரும் தாவரம் போல என்கிறான். அருமையான உதாரணம் இல்லையா இது? இப்படிப்பட்டோர் நட்பு பெரிய விருக்ஷமாக வளரும் என்கிறான்.
''கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.''
படிப்பது நல்லது, என்று மூன்று முறை சொல்கிறான் பார்த்தீர்களா பாண்டிய ராஜா. கற்கை நன்று..... ஆம் .
படிக்கவேண்டும் சார். நாம் நிறைய படிக்கவேண்டும். கற்க வேண்டும். கற்றது வெறும் ஒரு கை மண் அளவு என்று நாம் சொல்லமுடியாது. ஒளவைக் கிழவி சொல்லலாம். அவள் நிறைய கற்றவள் அவளுக்கே அவள் கற்றது வெறுமே ஒரு கை மண்ணாம்.!
நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், பிச்சை எடுத்தாலும், எப்படியாவது படித்து முன்னேறவேண்டும். படித்தால் மட்டுமே முன்னேற முடியும். இல்லையேல் அப்பா தாத்தா கொள்ளை கொள்ளையாக, கொள்ளையடித்தாவது, சேர்த்து வைத்து, நல்ல பதவியில் இருக்க வேண்டும். நமக்கு எல்லோருக்கும் அது எப்படி முடியும்.. மார்க் ஒன்று தான் வழி!.
No comments:
Post a Comment