அறுபத்து மூவர் J K SIVAN
சண்டிகேஸ்வர நாயனார்
''உஷ். கைதட்டாதே, சொடுக்காதே, சுற்றாதே ''
நாம் எத்தனையோ சிவன் கோவில்கள் செல்கிறோம் . அங்கே சண்டிகேசுவரர் சன்னதி, கற்பக கிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே பார்த்திருக்கிறோம். கோமுகிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அது வழக்கமாகி காணப்படும். இந்த சண்டிகேசுவரர் சன்னதியை ப்ரதக்ஷணமாக சுற்றி வரக்கூடாது. என்பதற்காக ஒரு சின்ன தடுப்பு சுவர் இருக்கும்.. அந்த சண்டிகேஸ்வரர் யார்? தெரியவில்லையானால் இதோ தெரிந்து கொள்ளலாமே.
அவரைத் தெரிந்துகொள்ளுமுன் இன்னொரு கேள்வி. மண்ணியாறு என்ற ஒரு நதி தெரியுமா? தெரியவேண்டுமானால் கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் சென்றால் அதன் கரையிலிருந்து பார்த்துக்கொண்டே ஒரு அற்புதமான புராதன கிராமம் சேங்கனூர் அடையலாம். (பழைய புராண பெயர் சேய்ஞலூர்) அங்கே சிவபெருமான் பெயர் சத்தியகிரீஸ்வரர். அம்பாள் சகி தேவி. கோச்செங்கட்சோழன் காலத்தியது. சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரை சிவாலயம். இங்கு வழிபட்டவர்களில் முருக பெருமானும் உண்டு. அவரைத் தவிர சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் கூட வழிபட்டிருக்கிறார்கள் .
இந்த ஸ்தலம் பற்றி புராணம் என்ன சொல்கிறது?
இங்கே தான் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என ஒருகாலத்தில் விண்ணுலகில் போட்டி. ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் சிதைத்து அது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் ''சத்தியம்'' எனும் சிகரம் இங்கே சிவன் கோயில் இருக்கும் இடத்தில் தொப்பென்று கீழே விழுந்தது. மஹா மேரு மலை இவ்வாறு துண்டாகி விழுந்ததால் புண்யம் புனிதம் இல்லையா? எங்கிருந்தெல்லாமோ, முனிவர்களும், மகரிஷிகளும் இங்கு மிருகமாக, பறவையாக மரங்களாக உருவெடுத்து தவமிருந்து சிவனை வழிபட்டார்கள்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சண்டேஸ்வரர் பிறந்த ஸ்தலம் இந்த சேய்ஞலூர் எனும் சேங்கனூர் . அப்பாவின் பெயர் எச்சதத்தன். பெற்றோர் வைத்த பெயர் விசாரசருமர்(சண்டிகேஸ்வரர்). இளம் வயதில் ஒரு மாடுமேய்ப்பவன் ஒரு பசுவை கோலால் அடித்து துன்புறுத்துவதை கண்டு அந்த பசுவை அவனிடமிருந்து மீட்டு தானே மேய்க்கிறார். நிறைய பசுக்கள் அவரை அடைகிறது. உபரியாக பாலை சொரிகின்றன. இல் ஆறாக ஓடி வீணாகிறதே. பால் வீணாகாமல் அதை சிவனுக்கு அளித்தால் என்ன என்று எண்ணம் அவருக்கு தோன்றுகிறது. அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து மலர்களை பறித்து அர்ச்சனை, பூஜை செயது, பசுக்களின் பால் நிறைய இருந்ததால் அவற்றால் அபிஷேகம் செய்துவந்தார்.
''உன் பையன் பசும்பாலை மண்ணில் கொட்டி வீணடிக்கிறானே எப்படி பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? ''என்று சிலர் கோள் சொல்லி கிளப்பிவிட, எச்சத்தன் ஒளிந்துகொண்டு தன் மகன் மணல் லிங்க பூஜை, பாலபிஷேகம் செய்வதை அல்லாம் பார்த்து வெகுண்டு, தன் கையிலுள்ள கொம்பால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து எச்ச தத்தன் கீழே கொட்டினார்.
கண் மூடி சிவபூஜையில் ஆழ்ந்திருந்த மகன், தடுத்து இடையூறு செய்தவர் சிவாபராதம் செய்தது தனது அப்பா என்று அறிந்தும், அருகிலிருந்த ஒரு கோலை எடுக்கிறார். கொம்பு சிவனின் மழு ஆயுதமாகிவிட்டது. சிவ பூஜைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களை வெட்டி னார் . எச்சத்தன் மடிந்தார். மகன் முன்போல் சிவபூஜை பாலபிஷேகம் தொடர்ந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த பார்வதி பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானோம் ” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். இனி நீ எம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவன். “நாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் இனி உனக்கே ஆகுக. இன்றுமுதல் நீ “சண்டீசன்” என்றருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். எச்ச தத்தனும் உயிர் பெற்று இறைவனை சேர்கிறார்.
இது தான் சண்டிகேஸ்வரர் கதை. அதனால் தான் அந்த சந்நிதியில் நாம் சப்தம் செய்யக்கூடாது. கை கொடுக்கவோ, தட்டவோ கூடாது. குறுக்கே சென்று சுற்றி வரக்கூடாது. அதற்கு தான் தடுப்பு சுவர்.
மேலே கூறிய சம்பவ நிகழ்ச்சியின் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் சிவாலயத்தில் உள்ளது. இதில் சண்டீசர் கீழே அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு உமையாளுடன் இருக்கும் சிவபெருமான் தன்னுடைய கொன்றை மாலையை சூடுவதாகவும் அமைந்துள்ளது.
சண்டிகேச நாயனார் சிலகாலம் இந்த ஸ்தலத்தில் தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் அங்கு குருவாக இருக்க நேர்ந்ததால் சிவத்துரோக தோஷம் பற்றியது. அது இங்கு நீங்கியதாக கூறுவர்.
முருகன் சூரனை அழிப்பதற்கு முன் இங்கு தங்கி ஈசனை வழிபட்டு சர்வசங்காரபடையை பெற்று போருக்கு சென்றார். சேய் என்றால் முருகன் எனவே இவ்வூர் திருசேய்ஞலூர் ஆயிற்று. இங்குள்ள சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பிறை, ஜடை, குண்டலம், கங்கை ஆகியவற்றை கொண்ட சண்டிகேஸ்வரர் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. வைணவப் பெரியவராகிய பெரியவாச்சான் பிள்ளையின் பிறந்த ஊராகவும் இது இருப்பது இன்னொரு ஆச்சர்யம். சைவ வைணவ ஒருமைக்கு இதைவிட என்ன காரணம் இருக்கலாம்?
No comments:
Post a Comment