அறுபத்து மூவர் J K SIVAN
திருநாவுக்கரசர்
விடங்கன், வேயுறு தோளி பங்கன்...
என்ன ஒரு அற்புதமான இரு சிவ பக்த ஜோடிகள். ஒருவர் மிகவும் முதியவர் இறைவன் பரமேஸ்வரனால், திருவதிகையில் தேவார பதிகங்கள் பாடக் கேட்டு ''நீ நாவுக்கரசன்'' என்ற விருது பெற்றவர். மற்றவர் சின்னஞ்சிறிய பாலகன். குழந்தை சிவனடியார். இறைவியிடம் ஞானப்பால் பெற்று சிவனிடம் பொற்தாளம் பெற்ற திருஞான சம்பந்தர். இவர்கள் இருவரும் எண்ணற்ற சிவனடியார்கள் பின் தொடர, வேதாரண்யம் என்று நாம் இப்போது அறியும் திருமறைக்காட்டில் ஒரு இரவு தங்கினார்கள்.
வேதாரண்யர் கோவில் பிரதான பெருங் கதவு பல காலமாக திறக்கப்படாமல் தாழிடபட்டிருந்தது. அதைத் தன் உளங்கனிந்த தேவாரம் பாடி தானாக திறக்கச் செய்தார் திருநாவுக்கரசர். இருவரும் உள்ளே சென்று ஆளுடைய பிள்ளை என்ற பெயர் பெற்ற சம்பந்தர் கதவு முன்போல் மீண்டும் அடைபட பாடுகிறார். ஏன் கதவு திறக்க நான் நிறைய பாடல்கள் பாட வேண்டியிருந்தது. கதவை மூட ஒரு பாடல் பாடியே ஞான சம்பந்தன் மூட வைத்தான் என்று நாவுக்கரசர் யோசித்தார்.
திருஞான சம்பந்தன் பாடிய ஒரு பாடலுக்கு மூடிய கதவு தான் பல பாடல்கள் பாடியபிறகே திறந்தது என்றால் சம்பந்தனின் பக்தி எனக்கு ஒருவேளை இல்லையோ என்று வருந்தினார் அப்பர் எனும் திருநாவுக்கரசர். பின்னர் தான் புரிகிறது சிவனுக்கு நிறைய நாவரசரின் தூய தமிழ் பாடல்கள் கேட்க விருப்பமிருந்ததால் நிறைய பாடவைத்து அப்புறமாகதான் கதவை திறக்க வைத்தான் என்று.
இறைவன் அன்றிரவே அவர்கள் இருவரும் வேதாரண்யத்தில் ஒரு மடத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது தான் நாவரசர் கனவில் சிவன் தோன்றினான். ‘நாவுக்கரசா, எழுந்திரு என் பின்னே வா திருவாய்மூரில் வந்து பார்'' என்று பரமேஸ்வரன் அறிவித்ததை கேட்டதும் புளகாங்கிதம் அடைகிறார். விடியலில் எழுந்து இறைவன் வழிகாட்ட திருவாய்மூர் செல்கிறார்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? திருவையாற்றை ஒட்டி உள்ள சப்த விடங்க க்ஷேத்ரங்களைப்பற்றி எழுதி இருக்கிறேனே. அவற்றில் திருவாய்மூர் ஒன்று. மற்ற ஆறு ஸ்தலங்கள் திருநள்ளார், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருக்குவளை, திருக்காரவாசல் திருவையாறு. இங்கெல்லாம் அருள் பாலிக்கும் விடங்க (ஸ்வயம்பு லிங்கங்கள். விடங்க என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம்.) விடங்கரை தியாகராஜர் என்று கொண்டாடுகிறோம். அழகிய வயல் சூழ்ந்த சாலைகளில் திருக்குவளையிலிருந்து ஐந்து கி.மீ. தூரம், எட்டுக்குடியிலிருந்து 3 கி.மீ. பயணித்தால் திருவாய்மூர் செல்லலாம். காவிரி தென்கரை 276 தேவார பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இது 124வது. முக்கியமானது.
ரெண்டு ஏக்கர் நிலத்தில் மூன்று நிலை ராஜ கோபுர வாசல். சிவனுக்கு இங்கே வாய்மூர்நாதர் என்று நாமம். லிங்கம் ஸ்வயம்பு. கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பாள் க்ஷீரோபவசனி. ''பாலினும் மென் மொழியாள்'' என்று அர்த்தம். . ஸ்தல விருக்ஷம் பலா மரம். சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம். சம்பந்தர் திருநாவுக்கரசரால் தரிசிக்கப்பட்ட தேவார ஸ்தலம். பங்குனி 12 - 13 தேதிகளில் சூரிய கிரணம் நீராக சிவன் பாதத்தில் விழுந்து தரிசிப்பதை பார்க்கலாம். சூரியன் தரிசித்ததால் இங்கு சூரிய தீர்த்த புஷ்கரணி. அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது. திருவாய்மூர் முற்காலத்தில் லீலாஹாஸ்யபுரம் என பெயர் கொண்டிருந்தது. "வாய்மூரில் இருப்போம் தொடர்ந்து வா" என்று அப்பர் பெருமானை சிவ பெருமான் அழைத்துச் சென்ற ஸ்தலம். இந்த ஊர் சிவாலயத்தின் கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபாரூடனாக திகழ்கிறார். எங்கும் காணாத ஒரு அதிசயம் இது. மற்றொரு விசேஷம் இங்கும் நவகிரஹங்கள் ஒரே வரிசையில்.
இந்த விடங்க க்ஷேத்ரத்தில் தியாகராஜரின் பெயர் நீல விடங்கர். நடராஜரின் நடனம் கமலநடனம். ஆசனம் ரத்ன ஸிம்ஹாஸனம்.
சம்பந்தரின் கொஞ்சும் தமிழ், அப்பரின் எளிய வசீகர தேவாரம் ஒவ்வொன்று வாய்மூர் நாதரை அவர்கள் எப்படி ஆண்டு ஆனந்தித்தவர்கள் என்று புரிந்து கொள்ள, மாதிரிக்கு, கீழே தருகிறேன்.
"வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண உடை மேலோர்
பந்தஞ் செய்து அரவசைத்து ஒலிபாடி
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந் தெனக்கு அருள் நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே". (சம்பந்தர்)
''எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனர தென்கொலோ. (திருநாவுக்கரசர்)
"பாடி அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழுவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவறே". ( திருநாவுக்கரசர் )
.திருவாய்மூருக்கு நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் இறைவனைப் பின் தொடர்ந்து செல்லும்போது தான் மேலே கண்ட ‘எங்கே யென்னை’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடுகிறார் திருநாவுக்கரசர். வழிகாட்டிக்கொண்டு .முன்னே சென்ற சிவபெருமான் எதிரே ஒரு பொற்கோயிலை காட்டுகிறான்.
கதவைத் திறக்கப் பாடிய என்னைவிட அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார் திருவாய்மூருக்கு.. இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோ" என்று மனமுருகி நாவுக்கரசர் பாடுகிறார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று “பாட அடியார்" என்று தொடங்கும் தேவாரம் பாடிப் பணிந்தார். திருவாய்மூரில் இருவரும் சிலநாள் தங்கி மீண்டும் திருமறைக் காட்டிற்கு செல்கிறார்கள்
அப்போது பாண்டியநாட்டுக்கு அரசன் சமண மதம் சார்ந்திருந்தான். மகாராணி மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் சிறந்த சிவபக்தை. பாண்டியனின் மந்திரி குலச்சிறையார் மற்றொரு உயர்ந்த சிவபக்தர். . பாண்டி நாட்டில் மற்றும் எங்கும் பரவலாக சமணர்கள் மதம் வியாபித்து இருந்தது. அரசியாருக்கு ஞானசம்பந்தரையும் அப்பரையும் தரிசித்து அழைத்து உபச்சாரம் செய்யவேண்டும் என்று ஆவல். அவர்களால் சமணர்களை வாதிட்டு தோற்க வைக்கவேண்டும் என்று ஆவல். தூதுவர்களை அனுப்புகிறார். அவர்கள் ஞானசம்பந்தரைக் கண்டு பாண்டி நாடும் பாண்டியனும் சமணம் சார்ந்து வருந்துவதைக் கூறினர். திருவெண்ணீற்றின் துணையை நினைந்து ஞானசம்பந்தரும் பாண்டி நாட்டுக்குப் புறப்படத் துணிவு கொண்டார். திருநாவுக்கரசர் பிள்ளையாரை நோக்கி, “தீயோராகிய அமணர் வஞ்சனையில் மிக வல்லர். தேவரீர் அங்குச் செல்லல் ஆகாது. மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை” என்றனர். ஞானசம்பந்தர், ‘வேயுறுதோளிபங்கன்’ என்று தொடங்கிக் கோளறு திருப்பதிகம் பாடிக்கொண்டு மதுரை நோக்கி நடக்கிறார்..
வேயுறு தோளி பங்கன் என்ற சம்பந்தர் பாடலை ஒரு காலத்தில் பல வருஷங்களுக்கு முன்பு நமது நாட்டில் அஷ்டகிரஹங்கள் ஒன்று சேர்ந்த போது எல்லோரும் கவலை கொண்டு இதன் விளைவு கேடாக மாறக்கூடாதே என்று கோளறு பதிகம் பாடினார்கள். நாட்டில் எங்கும் ''வேயுறு தோளி பங்கன் '' என்ற நவகிரஹங்களை வேண்டி, கோளறு பதிகம் பாடல் பாடப்பட்டது. பெரிய சங்கீத வித்துவான் அமரர் கான கலாதர மதுரை மணி அய்யர் பாடிய இந்த பாட்டு எங்கும் பிரபலமாக ஒலித்தது. எந்த கச்சேரியிலும் இதைக் கட்டாயம் பாடினார். சிறுவயதில் நான் தி.நகரில் கேட்டிருக்கிறேன். யாராவது இதை கேட்காமலிருந்தால் இப்போதும் கூட நீங்கள் என்னோடு சேர்ந்து கேட்கலாமே . https://youtu.be/gnJuLwuATwQ
No comments:
Post a Comment