Sunday, August 25, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN

அஸ்திரங்களின் சக்தி

மஹா பாரதம் என்பது ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எழும் எண்ணங்களிடையே நல்லவைக்கும் தீயவைக்குமிடையே நடக்கும், அவன் வைராக்கியத்திற்கும் புலன்களின் ஈர்ப்புகளுக்கும் மிடையே  நடக்கும் யுத்தம் என்றெல்லாம் சொல்வதுண்டு. இதில் ,யார்  அர்ஜுனன்,யார் கிருஷ்ணன், குதிரைகள் என்ன, கொடி  என்ன  என்றெல்லாம் பல விளக்கங்கள் சொல்வார்கள்.
நான் வியாசர் எழுதிய மஹா பாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த  ரத்தம் சிந்திய யுத்தத்தை மட்டுமே சொல்லி வருகிறேன். இனி இதுவரை நடந்ததின்  கோர்வையை சற்று பார்ப்போம்:.
''ஜனமேஜயா,  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?   கிருஷ்ணன்  அர்ஜுனனுக்காக  மகா பாரத யுத்தத்தில் அவனுக்கு உதவ அவனுடைய  தேர்ப்பாகனாக இந்த  பதினெட்டு நாட்களும் பணியாற்றினார் அல்லவா?  இனி யுத்தம் முடிந்ததால் அவர் இனி அவனுக்கு  பார்த்தசாரதி அல்ல.  யுத்தத்தில் பங்கேற்க  அவர்  பாண்டவர்களுக்கு கொடுத்த  வாய்ப்பு:   ''நான் வேண்டுமா  என் சேனை வேண்டுமா. நான் வேண்டும் என்றால்  நான் நிராயுதபாணியாக உன் தேர்ப்பாகனாக மட்டுமே உதவுவேன்,  சீக்கிரம் உன் முடிவை சொல் ''
இந்த இரண்டில்  எது  உனக்கு வேண்டும் என்று அர்ஜுனனிடம்  கேட்கும்போது   கிருஷ்ணன் மனதில் திக் திக்  என்று ஒரு அதிர்ச்சி.    ஒருவேளை  அர்ஜுனனன்  ''உன்னுடைய பெரிய  நாராயணி சேனையை எங்களுக்குக் கொடு''  என்று கேட்டுவிடுவானோ  என்று ?  ஆனால் அர்ஜுனன் துளியும் யோஜனை செய்யவில்லை.  ''கிருஷ்ணா நீ ஒருவன் மட்டுமே எங்களோடு  இரு. அதுவே போதும். எங்கள் சேனையை வைத்துக்கொண்டே  கௌரவர்களை நான் வெல்வேன் என்று சொல்லியதில் கிருஷ்ணனை விட  துரியோதனனுக்கு கொள்ளை ஆனந்தம். இப்படியும் ஒரு முட்டாளா, என்று அப்படியானால் கிருஷ்ணா உன்னுடைய  நாராயணி,  யாதவ, வ்ருஷ்ணி சேனை கௌரவர் பக்கம்  போர் செய்யட்டும் ''என்றான்.
கிருஷ்ணன் கொடுத்த வாக்கு இப்போது நிறைவேறி கிருஷ்ணன் இனி அர்ஜுனனுக்கு தேர் ஓட்ட அவசியமில்லை. போர் முடிந்துவிட்டது. கிருஷ்ணன் அர்ஜுனனோடு ஓட்டிவந்த தேறி பாண்டவர் பாசறை பக்கம் வந்து  சற்று தூரத்திலேயே  நின்றது.  ஏன் கிருஷ்ணன்  பாசறை அருகே தேரை வழக்கம்போல் கொண்டு நிறுத்தவில்லை?
''அர்ஜுனா  தேரை விட்டு  இறங்கி  விலகிச் செல் ''    என்று கிருஷ்ணன் சொல்ல அர்ஜுனனுக்கு  ஏன் இன்று வித்யாசமாக நடந்து கொள்கிரான் கிருஷ்ணன் என்று ஆச்சர்யம். ஒன்றும் பேசாமல், கேள்வி கேட்காமல் சொன்னபடி  இறங்கினான்.  தூர சென்று நின்றான்.   கிருஷ்ணனும்  தேரை விட்டு கீழே இறங்கி தேரின் மேல் பார்த்தார்.  இது வரை  தேரின் மேல் கொடியில்  இருந்த ஆஞ்சநேயர் கிருஷ்ணனை வணங்கி அடுத்த கணமே விண்ணில் மறைந்தார். அப்போது அங்கே  நடந்ததது விபரீதமா? விநோதமா?
பீஷ்மர், த்ரோணர், கர்ணன், ஆகியோர்  செலுத்திய  ப்ரம்மாஸ்திரங்கள், சக்தி மிகுந்த அக்னி ஐந்த்ரேய, சூரிய அஸ்த்ரங்கள் நாக அஸ்திரம், மற்றும் வருணன் போன்ற பல்வேறு தேவதைகளின் முழு சக்தி கொண்டு அர்ஜுனனின் தேரின் மீது  எய்யப்பட்ட  எண்ணற்ற  அஸ்திரங்களின் சக்திகள் எல்லாம்  காத்திருந்தது போல் இப்போது  ஒன்று சேர்ந்து  அவன் தேரை குபீரென்று  பெரும் தீ  ஜ்வாலையோடு கண நேரத்தில் எரித்து சாம்பலாக்கியது.
''ஏன் இப்படி, என்ன காரணம், மாயம் இது  கிருஷ்ணா?'' என்று பதறினான் அர்ஜுனன்.
''அர்ஜுனா,  உன் தேர்  இதுவரை  என் வசம்,  என் பாதுகாப்பில்,  ஆஞ்சநேயன் கொடியில் இருந்து  எனக்கு சேவை செய்ய   நான் அமர்ந்து  செலுத்தியவரை   எந்த சக்தியாலும் என்னையோ இந்த தேரையோ நெருங்கமுடியவில்லை.  நான் இப்போது ஆஞ்சனேயனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டேன்.  நானும் இனி   உனக்காக இந்த தேரை செலுத்த வேண்டியதில்லை. ஆகவே,  காத்திருந்த அத்தனை  வீரியம் கொண்ட  அஸ்திரங்களின் சக்தியும் ஒன்று சேர்ந்து, பாதுகாப்பு இல்லாத  உன் தேரை குதிரைகளோடு சேர்த்து  கபளீகரம் செய்து  அழித்து விட்டன. நான் இல்லாவிட்டால் நீயும் சாம்பலாகி இருப்பாய். அதற்கு தான் உன்னை முதலில் இறங்கி செல் என்றேன்.:
''உனக்கு நான் வாக்களித்த உதவி முடிந்து  விட்டது  என்று சொன்ன கிருஷ்ணன்  யுதிஷ்டிரனை அணைத்து ''உனக்கு  நல்ல அதிர்ஷ்டம் இருந்தது. நீ  வெல்ல முடியாத எதிரிகளை  ஜெயித்துவிட்டாய். பதினெட்டு அக்ஷ்வுணி  சைன்யத்தில்  நீங்கள் ஐவரும் உயிரோடு தப்பினீர்கள், மற்றவர்கள் அனைவருமே  மாண்டார்கள்.  உனக்கு கவனம் இருக்கிறதா?   உபப்லாவிய வனத்தில் நான் உங்களை பார்த்தபோது எனக்கு  தேன்  கனிகள், தினை மாவு  எல்லாம் அளித்தாய். ''கிருஷ்ணா, இந்த அர்ஜுனன் உன் சகோதரன் நண்பன். இவனை காப்பது உன் கடமை ''என்கிறாய்.  ''நானும் அப்படியே ஆகட்டும்'' என்றேன். அவனைக்  காப்பாற்றி உன்னிடம் ஒப்படைத்தாகி விட்டது. நீங்களும் இந்த மஹா பாரத  யுத்தத்தில் வெற்றி பெற்றீர்கள்''  என்று புன்னகைத்தான் கிருஷ்ணன். .  ''கிருஷ்ணா, கிருஷ்ணா,  உன்னை அன்றி வேறு யார் உதவியால்,  அர்ஜுனன்  பீஷ்ம த்ரோண கர்ணன், சம்சப்தகர்கள் சேனையை வென்றிருக்க இயலும் அவன் மீது ஏவப்பட்ட  அத்தனை  ப்ரம்மாஸ்திரங்கள், நாகாஸ்திரங்கள், அக்னி அஸ்திரங்கள் அனைத்தையும் நீ அல்லவோ தடுத்து நிறுத்தியவன்.  உபப்லாவ்ய வனத்தில்  வியாசர் சொன்னது காதில் இன்னும் ஒலிக்கிறது. ''யுதிஷ்டிரா, எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே நேர்மை நியாயம், வெற்றி அனைத்தும் உண்டு கவலைப் படாதே'' பாண்டவர்களின் ஆச்சர்யம் அடங்க இரவு காத்திருக்கவில்லை.  சூரியன் எப்போதோ மறைந்துவிட்டான். இருள் சூழ ஆரம்பித்தது.  இனியும் ஆபத்து தொடருமா  தொடராதா?
வைசம்பாயனரே  எனக்கு  நீங்கள் நிறுத்தி நிறுத்தி சொல்லும்வரை காத்திருப்பது  ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்ற ஜனமேஜயன் போல் நாமும் அடுத்து என்ன  என்று காத்திருப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...