சிறந்த ஜெகன்னாத பக்தரான ரகுதாசருக்கு இந்த உலகமே ஜகந்நாதர் மட்டும் தான். வேறெந்த நினைவும் இல்லை. ஜெகந்நாதனை ஒரு ஆத்ம நண்பனாகவே கருதுபவர்.
ஒரு சமயம் ரகுதாசர்க்கு கடும் ஜுரம். உடல் நெருப்பாக கொடுத்தது. குளிர் ஜுரத்தில் நடுங்கி பிரஞை விட்டு விட்டு வந்தது. ஒரு பழைய பாயில் படுத்துக்கொண்டிருந்தவரால் நகரமுடியாத நிலை. உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி அவரை இட்டுச் சென்றது. மலஜலம் எல்லாம் படுக்கையிலே என்று ஆகிவிட்டது. எவரும் அவரை அணுகமுடியாதபடி துர் நாற்றம்.
யார் இந்த பையன்? எங்கிருந்தோ வந்தானா? உறவு மற்றொருவர் இல்லாத ரகுதாசருக்கு உதவ வந்தவனா? ஒரு பக்கெட் ஜலம் கொண்டுவந்து ரகுதாசரை நன்றாக கழுவி செய்தான். உடல் முழுதும் வாசனை சந்தனம் பூசினான். அவர் கிடந்த அறையை நன்றாக சுத்தம் செய்தான். அவன் உதவியால் ஆச்சார்யமாக ரகுதாஸரின் ஜுரம் குறைந்தது. நினைவு சிறிது மீண்டது.கண்கள் திறந்தன.. எதிரே யார் தமக்கு உதவியது என்று பார்க்க முடிந்தது.
யார் இவன்? அட இவன் முகம் அப்படியே ஜெகந்நாதனின் முகமாக அல்லவோ தோன்றுகிறது.? என் ஆருயிர் ஜெகன்னாதா நீயா எனக்கு இந்த குடிசைக்குள் வந்து உதவினவன்? என்ன செயகிறாய் நீ? நாயினும் கடையேன் எனக்கு இப்படி பணிவிடை செய்வதன் மூலம் உன்னை தாழ்த்திக்கொண்டாயே ? என்னை குற்றவாளியாக்கி விட்டாயே பிரபு. உன்னை இப்படி எனக்கு பணிவிடை செய்ய அனுமதித்ததால் என் பாப மூட்டை இன்னும் பெரியதாக சுமக்கமுடியாத மூட்டையாகி விட்டதேயப்பா. நீ கருணா சாகரன் என்று தெரியும். இந்த ஜகத்துக்கு நாதன். உன்னால் ஆகாதது ஒன்று இல்லை. நீ மனதில் நினைத்தாலேயே, சங்கல்பித்தாலேயே எனக்கு வியாதி குணமாகியிருக்குமே. எதற்கு நேரில் வந்து இப்படியெல்லாம் சிஸ்ருஷை செய்தாய்?'' என்று கதறினார் ரகுதாஸர்.
''ரகுதாஸா , நீ சொல்வது வாஸ்தவம் தான். உன்னை உனது பிராரப்த கர்மாவிலிலிருந்து விடுவித்து என்னிடம் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டுமே. அதற்காக தான் வந்தேன். இன்னொரு காரணமும் உண்டு. என் பக்தர்கள் எனக்கு சேவை செய்வதன் மூலம் மகிழ்கிறார்களே .எனக்கும் என் பக்தர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆசை இருக்க கூடாதா? அதனால் மகிழ்ச்சி அடையக்கூடாதா? .உனக்கு சேவை செய்யவேண்டும் என்று எனக்கு எப்போதுமே விருப்பம். எனக்கும் என் பக்தனுக்கும் என்றுமே வித்யாசம் என்ற இடைவெளி கிடையாது. '' என்றான் ஜெகந்நாதன்.
ஜெகந்நாதன் குழந்தை உள்ளம் கொண்டவன் அல்லவா? .அதனால் தான் சிறு பையனாக வந்து ரகுதாசருக்கு உதவினான்.சூர் தாசருக்கும் அப்படி தானே சிறு பையனாக வந்து உதவினான்? எப்போதும் அவர் மனக்கண் முன் அப்படி சிறு கோகுலபாலகனாக காட்சி அளித்தான்.
ரகுதாசரை எல்லோருக்கும் பிடித்திருந்ததற்கு காரணம் அவர் எளிமை, இனிமையான குணம், அன்பான நோக்கம். திறந்த குழந்தை மனது. ஜெகன்னாநாதனின் தோழன் என்று எல்லோரும் அவரை மதித்தார்கள். இன்னும் ஒன்றிரண்டு சம்பவங்களையும் கூறுகிறேன்.
No comments:
Post a Comment