குதம்பை சித்தர் J K SIVAN
குதம்பாய், இதெல்லாம் தெரியுமா?
நாம் தமிழர்கள், என்றவுடன் ஏதோ நாம் தமிழர் என்ற ஓரு கட்சி பற்றி பேசுவதாக எழுதுவதாக நினைத்தால் எனக்கு இன்னும் பல ஜென்மங்கள் இருப்பதாக அர்த்தம். தப்பு. நாம் எல்லோரும் தமிழ் பேசும், தாய்மொழியாக தமிழை அறிந்தவர்கள் என்று சொல்ல வந்தேன். அப்படி இருந்தும். தமிழ் பாடல்களை அறிந்துகொள்ள அர்த்தம் தேடவேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ் கடல் போன்றது. அதில் சில வார்த்தைக ளையே மட்டும் வாழ்நாள் முழுதும் அறிந்து கடற்கரையில் சில கிளிஞ்சல்களை மட்டும் மடிநிறைய சேர்த்தது போதும் என்று திருப்திப் படுபவர்கள்.
இதை அறிந்து தான் போல இருக்கிறது தீர்க்க தரிசிகளாக சில மஹான்கள் தமிழை நாம் புரிந்து கொள்ளும்படியாக எழுதி வைத்து விட்டு போயிருக் கிறார்கள். சித்தர்களில் சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், மற்றும் பல சித்தர்கள் எழுதிய தமிழ் கொஞ்சம் புரிகிறது. இன்று குதம்பை சித்தர் பாடல்களில் சிலவற்றை ரசிப்போம் ருசிப்போம்.
''எல்லா உயிர்களுக்கும், அவற்றிற்கு எது தேவையோ அந்த உணவை, கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் வளரும் சிசுவுக்கும் எது எவ்வளவு, எப்படி தேவையோ அப்படி இலவசமாக அளிக்கும் சர்வேஸ்வரன் பரமேஸ் வரனை விடாமல் வாழ்நாள் பூரா நன்றியோடு நினைக்கவேண்டாமா பெண்ணே நீ'' என்கிறார் குதம்பை சித்தர் இந்த ரெண்டு வரி பாடலில்
'
'எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச் சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ''
நமக்கு கிடைத்த பரமேஸ்வரன், கல்ப கல்பகாலமாக தேடினாலும் கிடைக்காதவன் கிடைத்திருக்கிறானே. அவனை மனதார சந்தோஷமாக போற்றி பாடடி குதம்பாய், பெண்ணே என்கிறார் இந்த ரெண்டு அடியில்.
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
அந்த பரமேஸ்வரனை அறிவாயா பெண்ணே? அவன் சின்னதில் எல்லாம் ரொம்ப ரொம்ப சின்னவன். அணுவுக்குள் அணு. அதே நேரம் அவன் எது ரொம்ப ரொம்ப பிரம்மாண்டமான பெரியதோ, அதிலும் அதிகமான பெரிய உருவம் கொண்டவன். கண்ணால் அவனை அளக்க முடியாது. அடிமுடி காணாமல் பிரம்மாவும் விஷ்ணுவும் அதிசயித்த ஜோதிஸ்வரூபம்.
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத் துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.
ஆமாம் இப்படியெல்லாம் பெருமை வாய்ந்த பரமேஸ்வரன் நம்மை லக்ஷியம் செயது நம்மையும் காக்கிறானே , அருள் பாலிக்கிறானே, அந்த நாள் மாணிக்கத்துக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறாய்? அவனிடம் இல்லாததா நம்மிடம் இருக்கிறது? இருந்தும் நம்மில் அவன் கொடுத்த அதி அற்புதமான நல்ல மனசை, மனதை, அவனுக்கு ''பரமேஸ்வரா, என்னிடம் இருப்பதில் இது ஒன்று தான் உனக்கு ஏற்றது என்று நமது மனதை பரிபூர்ணமாக அவனுக்கு அளித்துவிடு பெண்ணே!
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக் காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
தேவர்கள் முனிவர்கள், ரிஷிகள், தேவதைகள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், விண்ணவர் மண்ணவர் யாவருமே தேடும் முழு முதற் கடவுள் அந்த ப்ரம்மாவா, சிவனா , விஷ்ணுவா என்று யோசிக்கும்போது அந்த மூவரும் பரமேஸ்வரனே தான் என்று அறிந்து மகிழ்வார்கள். உனக்கு தெரியுமா குதம்பாய்? என்கிறார் குதம்பை சித்தர்.
தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.
ஒன்றாக பலவாக தோற்றம் அளிக்கும் அவன் மூன்றாக பிரிந்து படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில் புரிந்து நம்மை அருள்பவன். அவனை மறக்கலாமா? நினைவில் அவனன்றி வேறொன்றும் வேண்டாமே.
நம்முடைய ஒட்டு மொத்த எண்ணங்கள்,சித்தம், செயல்பாடுகள், வாக்கு, பொருள், காணும் ஸ்தாவர சங்கம அனைத்து ஜீவராசிகளுக்கும் , சகலத்திற்கும், அவன் தானடி பெண்ணே சாரம், ஆதார வஸ்து பரமேஸ்வரன் தான். குதைபாய் விடாதே அவனை சிக்கென பிடித்துக்கொண்டு போற்றி பலனை அடை என்று அந்த குதம்பைக்கு சொல்வது போல் நமக்கு உணர்த்துகிறார் குதம்பை சித்தர்.
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய் வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.
அருவாய் உருவாய், உளதாய் இலதாய் என்று மனம் கனிந்து வாரியார் ஸ்வாமிகள் பாடுவார். அப்படி குதம்பை சித்தரும் அனுபவித்து பாடி இருக்கிறார். இந்த ரெண்டடிக்கு அர்த்தமே சொல்லவேண்டாம். சட்டென்று புரியும். சிந்திக்கவேண்டும்:.
''உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்''.
இந்த பஞ்ச பூதங்கள் எங்கிருந்து வந்தன? உற்பத்தி செய்தது யார்? என்றால் ஒரே விடை குதம்பாய், அது பரமேஸ்வரன் சிவனே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதே தான், ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் எங்கும் நிறைந்தவன் சிவனே சர்வ காரணன் என்கிறார் குதம்பை சித்தர்.
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.
எது சாஸ்வதம் என்று நினைக்கிறோமோ அது அநித்தியம். எது அழிக்கமுடியாத நிரந்தரம் என்று நம்புகிறோமோ அது மாறிவிடும். இந்த ஈரேழு புவனங்களையும், ஒரு கணத்தில் சுனாமி போல் பல கோடி மடங்கு அதி வேகமாக அழிக்க வல்லவன் சம்ஹார மூர்த்தி பரமேஸ்வரன் என்று அறிந்து கொள் குதம்பாய்'' என்கிறார் குதம்பை சித்தர்
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி ''
No comments:
Post a Comment