Thursday, August 8, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
16ம் நாள்  யுத்தம்         ''  கர்ணன் சேனாதிபதியானான்''

மஹாபாரதத்தை  நைமிசாரண்யத்தில்  ரிஷிகள் கூடி  பேசுவதிலிருந்து 18 பருவங்களை முழுதுமாக  விஷ்ணு சஹஸ்ரநாமம்,  ,யக்ஷ ப்ரஸ்னம்  எல்லாம் ஒன்றுவிடாமல்  கூட்டி விளக்கி  எழுதப்பட்ட புத்தகம்  ஐந்தாம் வேதம். ரெண்டு பாகங்களாக  வெளியிடப்பட்டது.  விலை கிடையாது. நன்கொடைக்கு மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டு அநேகர்  பெற்றுச் செல்கிறார்கள்.
ஆயிரம் பக்கங்கள் வண்ணஓவியங்களோடு உயர்தர காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. இன்னும் சில  பிரதிகள் உள்ளன.  தேவைக்கு    அணுக    ஜே கே  சிவன் 9840279080  வாட்சாப்  மூலமாக விலாசம் அனுப்பலாம்
மஹாபாரதம்  அர்ஜுனன் பேரன் பரீக்ஷித் மறைந்தபிறகு, அவன் மகன் ஜனமேஜயன் தனது முன்னோர்கள் பாண்டவர்களை பற்றி  வைசம்பாயன முனிவர் கதையாக சொல்வதன்  மூலமாக அறிவதாக அமைந்துள்ளது ஆச்சர்யம்.
ஆரம்பத்திலிருந்தே  பாண்டவர்களை எதிரிகளாக  கருதியவன் துரியோதனன், அவனுக்கு தூபம் போட்டவன் கர்ணன். மஹாவீரன்  கர்ணனை  பெரிதும் நம்பினான் துரியோதனன். இருந்தும் பதினெட்டு நாள் போரில் கர்ணன் 16வது நாள் யுத்தத்தில் தான் தலைமைப் பொறுப்பேற்கிறான்.
''மகரிஷி  எனக்கு  ஆர்வம் அடங்கவில்லை.  எனது முன்னோர்களின்   மஹாபாரத புராணம் கேட்பதற்கு  செவிக்கினிமையாக இருக்கிறது.  துரோணர்  மரணத்துக்கு பிறகு நடந்த விவரங்கள் அறிய  ஆவலாக இருக்கிறேன்'' என கேட்கிறான்  ஜனமேஜயன்.
சொல்கிறேன் ஜனமேஜயா கேள் என்று தொடர்கிறார் வைசம்பாயனர். ''துரோணர்  மறைவுக்குப் பிறகு அனைவரும் பதினைந்தாம் நாள் யுத்தம்  முடிந்த  இரவு  அஸ்வத்தாமன் பாசறைக்கு சென்று  அவனுக்கு ஆறுதல் கூறினார்கள்.  அவன் சீற்றம் கொண்டிருந்தான். மறுநாள்  திருஷ்டத்யும்னனை  பழிவாங்குவேன். பாண்டவர்கள் அனைவரையும் கொல்வேன்'' என்று  சீறினான்.  மற்றொரு கூடாரத்தில்  துரியோதனன்,   கர்ணன்,துச்சாதனன், சகுனி ஆகியோர்  தூக்கம் இழந்து  யோசித்தனர். எப்படி  பாண்டவர் சேனையை எதிர்கொண்டு வெல்வது என்று திட்டம் தீட்டினர்.  பொழுது விடிந்தது. அவரவர் நித்ய கர்மாக்களை முடித்து படை திரட்டினார்கள்.  கர்ணன்  சேனைத் தலைவனாக  முடிசூட்டப் பட்டான்.  படைகளை  மகர வியூகமாக  அமைத்தான் கர்ணன்.  அவனது சங்கநாதம் பலமாக ஒளித்து  கௌரவப் படை போருக்கு தயார் என்று அறிவித்தது.   பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதின. வழக்கம்போல்  ரத்த வெள்ளம்  ஆரம்பித்து விட்டது. கர்ணனின்  வீர ஆவேச யுத்தம்  பாண்டவர்களை  கலக்கியது. இதுவரை அவனது வீரம் வெளிப்படவில்லையே. ''சஞ்சயா,   இது பேரிடி, நிச்சயம்  நம்மை  விழுங்கப் போகும்  பிரளய பேரிடி.  பீஷ்மர், துரோணர், ஆகியோர் இல்லாத  கௌரவ சேனையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. கர்ணன்  தலைமை பொறுப்பெடுத்து என்ன செய்தான்  சொல்?.  என் உயிர்  என் உடலில இன்னும் எத்தனை நாள்  ஒட்டிக் கொண்டிருக்கும் என்று எனக்கே  தெரியவில்லையடா''   என்றான் திருதராஷ்டிரன். அர்ஜுனன்  ஒரு புறம்  கௌரவ சேனையை அழித்துக்கொண்டே  சென்றான்.  அவனை எதிர்க்க  இனி பீஷ்மரோ துரோணரோ இல்லையே.    பாண்டவர்கள் பக்கமும் அநேக வீரர்கள் மாண்டுவிட்டார்களே.  விராடன், துருபதன், அபிமன்யு, கடோத்கஜன், எத்தனையோ பேர்.  எத்தனை அக்ஷ்வுணி  வீரர்கள் மறைந்து விட்டார்களே இருபக்கமும். கர்ணனும்  பாண்டவ சேனையை நிலை குலைய செய்தான்.   ''அர்ஜூனா,  கவனித்தாயா  எதிரே கௌரவ சேனையை,  மிகச் சிறந்த  தலைவர்களை இழந்து  ஒரு சக்தியற்ற கும்பலாக காண்கிறது.  கர்ணன் ஒருவன் தான் நாம்  சமாளிக்க வேண்டியவன்.''  இவனை நீ  கொன்றுவிட்டால்  வெற்றி நமதே''  என்றான் யுதிஷ்டிரன்.  பாண்டவ சேனையின் மூன்று பகுதிகளில் இடது புறம் பீமனும், வலது புறம்  திருஷ்டத்யு ம்னனும்  நடுவே  அர்ஜுனனும் எதிர்கொண்டார்கள். ஒரு யானை மீதமர்ந்து  பீமன்  க்ஷேமதூர்தி என்கிற  கௌரவ அரசனோடு போர் புரிந்தான். முடிவில் க்ஷேமதுர்த்தி   பீமனது கதையால்  கொல்லப் பட்டான்.  பீமன் அஸ்வத்தாமனை தாக்கும் நேரத்தில்  நகுலன்  கர்ணனோடு மோதி அவன் படை குதிரைகளையும் யானைகளும் கட்டுக் கடங்காமல் செய்தான்.   சம்சப்தகர்களை அர்ஜுனன் வாட்டி வதைத்தான்.  யுதிஷ்டிரன் கிருபரை எதிர்த்து அவர் வீரர்களை கொன்றான். அவனுக்கு சாத்யகியும் சிகண்டியும் அருகிலிருந்து  ஒத்துழைத்தனர். திருஷ்டத்யும்னன்  துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் எதிர்த்தான்.   சாத்யகி  விந்தன் அனுவிந்தன் எனும் கேகய அரசர்களோடு மோதி இருவரையும்  கொன்றான் சித்ரசேனனுக்கும் ச்ருதகர்மனுக்கும் கடும் போர்  நிலவியது. ஒருவர் வில்லை ஒருவர் ஒடித்தும், தேரை நொறுக்கியும், பல ஆயுதங்களால் தாக்குண்டும்   இருவருமே   ரத்த ஆடை  போர்த்தி இருந்தனர். தொடர்ந்த யுத்தத்தில்  சித்ர சேனனின் தலை தரையில் உருண்டது.  பிரதிவிந்தியன்  சித்ரனை துரத்தி இருவரும் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டு  கடைசியில் அவன்  சித்ரனை கொன்றான்.  சித்ரனின் படை வீரர்கள்  சிதறி ஓடினார்கள்.  அஸ்வத்தாமன் பீமனை  துரத்தினான்.  பீமன் அஸ்வத்தாமனை  நெருங்கி தனது பலத்தால்  கொல்ல  முயன்றான். அவன் பிடியில் அகப்படாமல் அஸ்வத்தாமன் பீமனை அம்புகளால் துளைத்தான். கடைசியில்  அஸ்வத்தாமன்  பீமனின் தாக்குதலில் மயங்கி விழ அவனது தேரோட்டி  விரைவாக  தேரை அங்கிருந்து  ஓட்டிச்செல்ல  அஸ்வத்தாமன் உயிர் தப்பித்தான். அர்ஜுனனை எதிர்த்த சம்சப்தக படை  வெள்ளத்தை  அர்ஜுனன் அழித்து எங்கும் ரத்தம் நிறைந்த தலைகள் தரையில் நிரம்பியதைப் பார்க்கும்போது ஒரு  பெரிய விருக்ஷம் தனது சிவந்த மலர்களை தரையில் படர்த்தியதை போல் இருந்தது. அஸ்வத்தாமன் திரும்பி வந்து  அர்ஜுனனையும் க்ரிஷ்ணனையும் எதிர்த்தான்.  என்னோடு யுத்தம் செய்ய வா என்று  அர்ஜுனனை அழைத்தான்.  ''கிருஷ்ணா, நான் முதலில் எதிர்த்த  சம்சப்தகர்களை அழித்துக் கொண்டிருக்கிறேன், அதை விட்டு அஸ்வத்தாமனோடு  போர் புரியட்டுமா? அப்படியென்றால்  தேரை அஸ்வத்தாமன் பக்கம் கொண்டு செல்''   என்றான் அர்ஜுனன்.  கிருஷ்ணன் தேரை  அவ்வாறே செலுத்தினான். அஸ்வத்தாமன் அம்பு மழை பொழிந்து கிருஷ்ணனையும் அர்ஜுன னையும்  புகை சூழ்வதுபோல்  மறைத்தான். அவர்களைக் கொன்றுவிட்டதாக  மகிழ்ந்தான்.  சூரியன் பனியை நீக்குவது போல் அர்ஜுனன்  அஸ்வத்தாமனின் அம்புத்திரையை விலக்கி அவன் வில்லை ஒட்டித்தான். அவன் தேரை , தேரோட்டியை  தாக்கினான்.   எதிர்ப்பட்ட  சம்சப்தகர்களையும் கொன்றான்.  மின்னல் வேகத்தில் தாக்கிய  அர்ஜுனனை எவரும்  எதிர்க்க முடியாமல் பின் வாங்கினார்கள்.  அவனால் தாக்குண்டு  கௌரவப் படையின்  யானைகள்  குதிரைகள், வீரர்கள்  உயிரற்று எங்கும் வீழ்ந்தனர். அஸ்வத்தாமன் எண்ணற்ற அம்புகளை  அர்ஜுனன் மேல் எய்தவன். அவ்வளவையும் அர்ஜுனன் தடுத்து முறித்தான்.  கடைசியில் அஸ்வத்தாமன்  படு காயமுற்று  அங்கிருந்து நகர்ந்தான்.  அர்ஜுனனும் எஞ்சியிருந்த சம்சப்தக படையை தாக்கினான். பாண்டவ சைன்யத்தின்  வட பகுதியில் மகத நாட்டு அரசன் தண்டதரன்  மிகப் பெரிய வலிமையான படையுடன் தாக்கி  சேதம் செய்ததால்  அர்ஜுனன் அங்கே தேரை செலுத்தி அவனை எதிர்த்தான்.  தண்டதரன் அர்ஜுனன் வரவைக்கண்டு  அவனை கொல்ல யத்தனித்தான்.  அர்ஜுனன் அம்புகள் அந்த  மகதனின் சேனையை அழிக்க தொடங்கின.  பூனைக்கு முன் எலிகளாக  அவன் சேனை அழிந்ததால் அவன் ஆக்கிரோஷத்தோடு அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் தாக்கினான். எண்ணற்ற அம்புகளால்  அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் தாக்கி இருவரும்  ரத்த வெள்ளம் உடலில் ஓட  போரிட்டனர். கடைசியில் அர்ஜுனன்  தண்டதரனின் இரு கரங்களையும் தலையையும் அம்புகளால் சிதைத்து அவனை கொன்றான்.   எஞ்சிய மகத சேனை  தலைவன் இன்றி  உயிர் தப்பி ஓடியது.  தண்டதரன் சகோதரன் தண்டன்  சிதைந்து  ஓடிய  சேனையை ஒன்று  சேர்த்து மீண்டும் அர்ஜுனனோடு போர் புரிந்து அவனும் கொல்லப் பட்டான்.   அர்ஜுனனும் தொடர்ந்து சம்சப்தக படையை எதிர்கொண்டு போர் புரிந்தான்.  எண்ணற்ற  தலைகளை அம்புகளால்  கொய்து  அர்ஜுனன்  சம்சப்தகர்களை கொல்வதை  கவனித்து  கிருஷ்ணன்   ''அர்ஜுனா,  எதற்கு  வீணாக இந்த சம்சப்தகர்களை கொன்று  காலம் காததுகிறாய், உனது கவனம் கர்ணனை கொல்வதில்  அல்லவோ இருக்கவேண்டும். நமது சேனையை அவன் நிர்மூலம் செயது வருவதை கவனிக்கவில்லையா?'' என்று வினவ,   'நீ சொல்வது சரியே  கிருஷ்ணா, தேரைத் திருப்பு, கர்ணனை நோக்கி தேரைச் செலுத்து'' என்றான் அர்ஜுனன். வரும் வழியே எண்ணற்ற  உடல்கள், தலைகள், யானைகள் குதிரைகள் ரத்த வெள்ளத்தில்  தன்னால் அழிவுற்று  கிடப்பதை கண்டான்.  கிருஷ்ணன் சொல்வதில் உள்ள அர்த்தம் புரிந்தது. திரும்பி வரும்போது கௌரவ சேனையில்  பெரும் சப்தம், தேர்கள் நொறுங்கும்  ஓசை, கூக்குரல், வானைப் பிளக்க  காரணம் பாண்டவ வீரன்  பாண்டியனின் வீராவேசப் போர்  என்பதை அறிந்தார்கள். பீஷ்ம த்ரோணர்களுக்கு சமமாகவும்,  கர்ணனை தனக்கு ஈடற்றவனாகவும் கருதி பாண்டியன்  கௌரவ சேனையைத் தாக்கிக் கொண்டிருந்தான். சூறாவளியாக  அவன்  நிஷாதர்கள், போஜர்கள், வல்ஹிகர்கள், புலிந்தர்கள், அந்தகர்கள், ஆகியோரை வெட்டி வீழ்த்தியபோது அஸ்வத்தாமன் குறுக்கிட்டான். பாண்டியனை  ''என்னோடு யுத்தம் செய்''  என்று  தனியே அழைத்து இருவரும்  நெடு நேரம் கடும் போர் புரிந்தார்கள். கடைசியில்  பாண்டியனை  அஸ்வத்தாமன்  கொன்றான். 'சஞ்சயா,  அர்ஜுனன் என்ன செய்தான்  என்பதை சீக்கிரம் சொல் '' என்றான் திருதராஷ்டிரன். ''அர்ஜுனா,   நமது  படையை  கர்ணனும் அஸ்வத்தாமனும் சிதைக்கிறார்கள்.  யுதிஷ்டிரனை காணவில்லை, மற்றவீரர்களும் எதற்காக  பின் வாங்குகிறார்களோ?  பாண்டியனை  கொன்றுவிட்டான் அஸ்வத்தாமன். யுதிஷ்டிரன் நிலை என்னவோ? என்றான்  கிருஷ்ணன். ''தேரை அதி  வேகமாக  கர்ணனை நோக்கி செலுத்து'' என்றான் அர்ஜுனன். அர்ஜுனன் திரும்பினான் என்று சேதி அறிந்ததும் பாண்டவ சேனை புத்துணர்ச்சி பெற்றது. வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொன்று கொண்டு இருந்தார்கள். அம்புகள் சரமாரியாக  பொழிந்தன. நகுலன்  கர்ணனோடு மோதினான். வெகு நேரம் நகுலனை சோதித்த கர்ணன் அவனைக் கொல்லாமல்  ''ஓடு  நகுலா  ஓடு. அர்ஜுனன் கிருஷ்ணன் இருக்கும் இடம் சென்று உயிர் தப்பித்துக்  கொள்.  உன்னைவிட  சக்தி வாய்ந்தவர்களிடம் மோதாதே'' என்கிறான்.  ஆயுதம்  தேர்  இழந்த நகுலன்    யுதிஷ்டிரனின் தேரில் ஏறிக்  கொண்டு அங்கிருந்து விலகுகிறான்.   கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும்  யுத்தம் தனியே நடக்கிறது. இருவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள் என்பதால்  வெற்றி தோல்வி இன்றி சேனையை அழிப்பதில் மும்முரமாக  மோதுகிறார்கள்.  சிகண்டி க்ருதவர்மனுடன் போரிடுகிறான்.   கிருபர் திருஷ்டத்யும்னனை  கொல்ல திட்டமிட்டார். துரோணர் மறைவுக்கு அவனை பழி வாங்க துடித்தார்.  அவர் எண்ணம் அ றிந்த பீமன்  திருஷ்டத்யும்னனை நெருங்கினான்.
க்ரித வர்மனுக்கும் சிகண்டிக்கும் நடந்த யுத்தத்தில்  இருவருமே காயமடைந்தனர் எனினும் கடைசியில்  சிகண்டி  தேர் பலகையில் சாய்ந்தது அவனது தேரோட்டி அவனை அப்புறப் படுத்தினான்.  பாண்டவ சேனையை கௌரவ சேனை ஆக்கிரமித்தது. அர்ஜுனனை  யுத்த களத்திலிருந்து அப்புறப் படுத்த வென்றே ஒவ்வொரு  நாளும் த்ரிகர்த்தர்களை அவனை  போருக்கு அழைக்க வைத்து  தொலை தூரம் விலகச் செய்தார்கள் கௌரவர்கள்.. தனியனாக  அவன் அவர்களை தாக்கி பெரும் பாலானவர்களை அழித்தான்.
அர்ஜுனன் அன்று தன்னை எதிர்த்த  சத்ருஞ்சயனை கொன்றான். சுஸ்ருதன்,சத்யசேனன் சந்திரதேவன், மித்ரதேவன் சுருதசேனன், ஆகியோர் எதிர்த்தபோது அவர்களை படுகாயமுற்று ஓடச் செய்தான்.   சந்திரதேவனையும் கொன்றான்.கிருஷ்ணனை  தாக்கிய  சத்யசேனனை  அர்ஜுனன் தாக்கி  அவன்  தலையை துண்டித்து கொன்றான். அடுத்து அவனைத் தாக்கிய சித்ரவர்மனும் மாண்டான். ஆயிரக் கணக்கான  சம்சப்தகர்களையும் அர்ஜுனன் ஒருவனாகவே கொன்றான்.  யுத்தம்  உச்ச கட்டத்தை  நெருங்குகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...