Wednesday, August 7, 2019

VETRI VERKAI




நறுந்தொகை J.K. SIVAN
அதிவீரராம பாண்டியன்
நாலாவதில் மனப்பாடம் செய்தது

ஒரு நாட்டில் விவசாயத்தை தொழிலாக தேர்ந்தெடுத்த மக்கள், விவசாயிகள், உழவர் என்று எடுத்துக் கொள்வோம், அவர்களுக்கு எது அழகு என்றால் நன்றாக பயிரிட்டு, நல்ல பயிர்களை விளைத்து உணவு தயாரித்து அந்த சுவையான உணவை உற்றார் மற்றோருடன் சேர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுவது. இதை சொன்னால் உணவு கிடைக்காது அடிகிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு அதிவீர ராம பாண்டியா. உன் காலம் வேறு நாங்கள் வாழும் காலம் வேறு. உணவுப்பண்டங்களிலே கலப்படம் செய்து ஒன்றுக்கு மூன்று மடங்கு விலை வைத்து விற்பதைத்தான் நாம் வாங்கி உண்ணவேண்டும். இதில் ஓசியில் வேறு சாப்பாடு போட எவருக்கு மனசு உண்டு?
''உழவர்க்கழகேர் உழுதூண் விரும்பல் ''-

ஒரு நாட்டுக்கு மந்திரி யாக இருப்பவன் ஒவ்வொரு செயலாலும், செயல் படாததாலும், வரும் விளைவுகளை பல கோணங்களில் யோசித்து விசாரித்து என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே யூகித்து அரசனிடம் சொல்பவன் என்கிறான் அதிவீர ராமன். ஐயா, ஒருவேளை நீர் அதிர்ஷ்டசாலி என்பதாலோ அக்காலத்தில் இப்போதைய சாமர்த்தியங்களை யாரும் சொல்லித்தராததாலோ, உமக்கு நல்ல மந்திரிகள் கிடைத்தார்கள். பிழைத்து போ..
''மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல் '' இதுபோல் நிறைய உட்கார்ந்து எழுது. இப்போது மந்திரிக்கழகு எங்கிருந்து யாரிடமிருந்து என்ன பொருள், எவ்வளவு எப்போது வரும் என்று உணர்ந்து கரெக்ட்டாக ''மாட்டாமல் '' வீட்டில், சாக்கடையில், பள்ளியில், கல்லூரியில் மோட்டார் ஷெட்டில் ஒளித்து வைப்பது..

''தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை '' சேனாதிபதிக்கு அழகு வீரம், பயம் இன்மை, உயிரை திரணமாக மதிக்கும் தைர்யம், ஆண்மை இதெல்லாம் தான். இப்போது பெண் கூட சேனைக்கு அதிபதியாக இருக்க முடியும். நீ சொல்வதெல்லாம் வேண்டாம் மன்னா.

''உண்டிக்கழகு விருந்தோடுண்டல் '' கோபாலா, உனக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொடிமாஸ், கத்திரிக்காய் பிட்லை, சேனைக்கிழங்கு சிப்ஸ் டிபன் பாக்சில் வைத்திருக்கிறேன். யாருக்கும் கொடுத்துவிட்டு பேமாளமாக பட்டினி கிடக்காதே நீ மட்டுமே சாப்பிடு '' என்று பள்ளிக்கு செல்லும் சிறுவரிடம் சொல்லித்தரும் தாய்கள் நிரம்பி விட்டார்கள். உணவை சமைப்பதற்கு அழகே அதை ருசியாக நிறைய பண்ணி எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து உண்ணுதல் என்கிறான் பாண்டியன். இனி இவனை படிக்காமல் இருந்து விடுவோமா?

''பெண்டிற்கழகு எதிர் பேசாதிருத்தல்'' கணவன் கோபமாக ஏதாவது திட்டினால் கூட அவனுக்கு உபச்சாரம், சிச்ருஷை செயது சிரித்த முகமாக எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது தான் பெண்களுக்கு அழகு என்கிறான் பாண்டியன்.
''பாண்டியா, உனக்கு எத்தனை மனைவி? எல்லோருமே அப்படி தானா ? நீ இங்கே வந்தால் கூட இதெல்லாம் பற்றி வாய் திறக்காதே. ஒரு பிடி பிடித்து விடுவார்கள் எங்கள் கால பெண்கள்.

''குல மகட்கழகு தன் கொழுநனைப் பேணல்'' - ஒரு நல்ல குலஸ்திரீயானவள் தனது கணவனை பற்றி, அவனது நலத்தை பற்றியே அவன் சந்தோஷத்தை பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்து அவனை முகம் கோணாமல் பாதுகாத்து வளர்ப்பவள் .

''போய்யா , இதற்கெல்லாம் அர்த்தம் வேறு சொல்லி என்னை மாட்டி வைக்க பார்க்கிறாயா? எனக்கு இன்னும் சிறிதுகாலம் சந்தோஷமாக வாழ விருப்பம்.

''அறிஞர்கழகு கற்றுணர்ந்தடங்கல்'' நன்றாக கற்று தேர்ந்து கற்ற கல்வியின் பொருள் உணர்ந்து அதில் அறிந்து கொண்டவாறு அடக்கத்தோடு நடப்பது தான் நல்ல கல்விமானுக்கு அழகு.

''அவன் என்ன படிச்ச ஆளா? வாயே திறக்கறதில்லே, மிக்ஸர் மாமா வாக இருக்கிறானே என்று இப்போது யார் பேர் வாங்குவார்கள்?
''வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை'' - ஏழையாக இருந்தாலும், ஏழ்மை தன்னை, தன் குடும்பத்தை, சோதித்தாலும், எந்த தவறான காரியங்கள் செய்யாமலும் ஒழுக்கம் மீறாமலும், யோசிக்காமல், வரும்படிக்கு தக்கவாறு, விரலுக்கு தகுந்த வீக்கத்தோடு வாழ்வது தான் ஏழைகளுக்கு அழகு.

வெற்றிவேற்கை இந்த காலத்துக்கு ஒவ்வாதது என்று தள்ளி விட முடியாது. சமூகம், அதன் எதிர்ப்பார்ப்பு மாறிவிட்டது. ஆண் பெண் சரி சமமாக வாழ தொடங்கிவிட்டார்கள். கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. ஊருடன் சேர்ந்து வாழும் எண்ணம் மனதில் குறைந்து விட்டது. அடுத்த சுவற்றுக்கு பின்னால் பத்து வருஷமாக வாழ்பவன் இன்னும் பரிச்சயமாகவில்லை. இந்த நிலையில் ஒன்று வேண்டுமானால் சொல்வேன்.



அதி வீர ராம பாண்டியன் எழுதியவாறே வாழ்ந்தவர்கள் நமது மூதாதையர். அவர்கள் காலத்தில் நேர்மை நீதி நியாயம் இருந்தது. இன்னும் அது முற்றிலும் மாறவில்லை. படிப்படியாக குறைந்து இன்னும் சில குடும்பங்கள் அ .வீ.ரா.பாண்டியன் ஆசைப்பட்டவாறே நடக்கிறார்கள் என்று உணர்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...