ஐந்தாம் வேதம் J K SIVAN
பதிநான்காம் நாள் யுத்தம் முடிந்தது
கண்ணன் காப்பாற்றினான்
''அர்ஜுனா , இல்லை, வஜ்ராயுதத்தை இழந்த கர்ணனை இனி நீ வெல்வது சற்று சுலபம். அவ்வளவு தான். ஆனால் உன்னால் அவனைக் கொல்ல முடியாது. வேறு பல சக்திகள் அவனிடம் உள்ளன. கடோதகஜனை இழந்ததில் எனக்கு மிகவும் வருத்தம். அதே நேரம் அர்ஜுனா, அவன் மரணத்தால் உன் உயிர் தப்பியதில் எனக்கு அதைவிட அதிக மகிழ்ச்சி. புரிகிறதா? கர்ணனின் தேர் சக்கரம் நகராமல் இருக்கும் ஒரு சமயம் வரும். அப்போது நான் உனக்கு சொல்வேன். அந்த நேரம் நீ அவனைக் கொல்வாய். அதுவரை நீ அவனை கொல்ல முடியாது '' என்றான் கிருஷ்ணன்.
அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் 'அப்படியா?'' என்றான்.
''ஆம் அர்ஜுனா, இது மட்டுமல்ல. ஜராசந்தன், ஏகலவ்யன், பகன், சிசுபாலன்,இடும்பன்,கீசகன் ஆகியோர் உயிருடன் இருந்தால் நிச்சயம் கௌரவ சேனையோடு இணைந்து உன்னை அழித்திருப்பார்கள். அவர்கள் மறைவுக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்ததால் இப்போது உன் வேலை சற்று எளிதாகியது. கடோத்கஜன் இருந்தவரை யாராலும் அவனை அழிக்கமுடியாது என்னைத் தவிர. எனவே இந்திரனின் வஜ்ராயுதம் அவனை அழித்ததால் இரு நன்மைகள், இனி அவனால் பிராமணர்கள் ரிஷிகள் துன்பமடைய மாட்டார்கள், என்னிடம் பல ரிஷிகள் முனிவர்கள் கடோதகஜனை வதம் செய்ய வேண்டினார்கள். நானும் இது காரணமாக இதுவரை அதை நிறைவேற்ற வில்லை. கர்ணனுக்கும் வலிமை குறைந்தது. நீ தப்பினாய். கர்ணனைப் பற்றிய கவலை வேண்டாம். நான் சொல்வேன் அதன்படி நீ நட . அதுவே போதும்.'' என்றான் கிருஷ்ணன்.
"திருதராஷ்டிரா , கிருஷ்ணன் சாமர்த்தியமாக இதைச் செய்து விட்டான். கர்ணன் தன்னிடம் இருந்த வஜ்ராயுதததை அர்ஜுனன் மீது பிரயோகிக்க எண்ணம் கொண்டிருந்தால் '' அர்ஜுனா நீ என்னோடு தனியே யுத்தம் செய்'' என்று கூப்பிட்டிருக்க வேண்டும். அர்ஜுனன் சுத்த வீரன் அதை மறுக்க முடியாது. உயிரிழந்திருப்பானே. அதை விட்டு கிருஷ்ணன் ஒரே கல்லில் இரு மாங்காயை பெற, கடோத்கஜா நீ கர்ணனை உன்னோடு யுத்தம் செய்ய அழை என்று சொல்லி அவன் கர்ணனோடு மோதி அவனை துளைத்து எடுக்க வைத்து, கடைசியில் அவனைக் கொல்ல இந்திரன் கொடுத்த சக்தி வாய்ந்த ஆயுதத்தை கர்ணன் பிரயோகித்து அந்த மஹா ஆயுத சக்தியை இழந்தான். அவசரக்காரன் கர்ணன் எப்போதுமே'' என்றான் சஞ்சயன்..
''என் மகன் துரியோதனன் முட்டாள். அவனுக்கு அறிவுரை கூறுபவர்களும் அவன் ரகமே. நான் என்ன செய்வேன்? சஞ்சயா நீயாவது கர்ணனுக்கு தக்க சமயத்தில் அறிவுரை கூறி இருக்கலாமே?''
" ஒவ்வொரு இரவும் பாசறையில் துரியோதனன், சகு னி, துச்சாதனன் கர்ணன் நான் ஆகியோர் கூடிப் பேசும்போது முக்கியமாக அழிக்கவேண்டியது கிருஷ்ணனை தான் அவன் தான் எல்லாவற்றுக்குமே மூல காரணம். பிறகு அர்ஜுனன் என்று கர்ணனுக்கும் எடுத்துரைக்கப் பட்டது. மறுநாள் யுத்தத்தில் முதல் நாள் தீட்டிய திட்டத்தை எப்படியோ மறந்து விடுகிறார்கள். என்றான் சஞ்சயன்.
கிருஷ்ணா நீ கடோதகஜனை காப்பாற்றி இருக்கலாம்'' என்றான் சாத்யகி
''அர்ஜுனன் விஷயத்தில் கர்ணன் அந்த வஜ்ராயுதத்தை அவனை கொல்வதற்கு தான் தயாராக வைத்திருந்தான். அர்ஜுனன் அவனுடன் போர் புரியும்போது கர்ணன் வஜ்ராயுதததை எப்போது அர்ஜுனன் மேல் வீசலாம் என்று எண்ணுவதை கவனித்து உடனே கடோத்கஜனை கர்ணனிடம் அனுப்பி அவன் மேல் கவனம் வரும்படி செய்தேன் . கடோத்கஜனை விட்டு கர்ணனை துன்புறுத்த செய்ததில் அவன் கோபம் கடோத்கஜன் மேல் திரும்பி அந்த ஆயுதத்தை உபயோகித்தால். ஒருமுறை எய்தவுடன் அது பயனற்று விடும். கடோதகஜனும் முடியும் நேரம் வந்துவிட்டது '' என்றான் கிருஷ்ணன் சாத்யகியிடம்.
அப்போது வேத வியாசர் அங்கே வந்து யுதிஷ்டிரா! யுத்தத்தில் உன் சேனை அடைந்த நஷ்டம் பற்றி கலங்காதே. கடோத்கஜன் வதம் பற்றிய வருத்தத்தைவிட மிகப் பெரிய சொல்லொணாத துயரம் அர்ஜுனனை இழந்து நீ அடைந்திருப்பாய் . கிருஷ்ணன் உன்னைக் காப்பாற்றினதோடு அல்லாமல் அர்ஜுனனையும் காப்பாற்றினான். இன்னும் ஐந்தே நாளில் இந்த புவிக்கே நீ தான் அரசன் என்று தீர்மானிக்கப் படுவாய். சந்தோஷமாக இரு '' என்கிறார்.
இரவு நடு நிசிக்கு மேல் ஆனதால் பாண்டவ சைனியத்தை சற்று ஓய்வெடுக்குமாறு அர்ஜுனன் பணித்தான். அவ்வாறே கௌரவர்களும் யானைகள் குதிரைகளும் சற்று ஓய்வெடுத்தன. தூக்கம் அனைத்தையும் அனைவரையும் ஆட்கொண்டது.
சிறிது நேரத்தில் வானில் சந்திரன் ஒளி பிரகாசமாக தெரிந்தது. துரியோதனன் நேராக துரோணரிடம் சென்றான். வழக்கம்போல அவரை குறை கூறினான். ''மனது வைத்திருந்தால் எப்போதோ நீங்கள் பாண்டவர்களை கொன்றிருக்கலாம். உங்களுக்கு இணையாக உலகிலே எவருமே தனுர் வித்தையில் இல்லையே. ஏனோ பார்த்தன் மேல் தனி பாசம். அவர்களை ஓய்வெடுக்க விட்டிருக்கக் கூடாது. இது எனது துரதிருஷ்டம் தானே'
துரியோதனா நான் வயதானவன். தனுர் வித்தையில் நிபுணன் என்பது சரி. அர்ஜுனனைத் தவிர மற்றவர்கள் எனக்கு ஈடாக மாட்டார்கள். உனக்காக எல்லோரையும் கொல்வேன். அர்ஜுனனைக் கொல்வது என்பது கனவு. எவராலும் முடியாத காரியம். கர்ணன் தான் அர்ஜுனனை கொல்வேன் என்கிறான் அவனையே விட்டு மோதி அர்ஜுனனை கொல்லலாமே''
போர் மீண்டும் துவங்கியது. முக்கால்வாசி இரவு முடிந்தது. கிழக்கே வானில் செக்கச் செவேலென்று அருணன் உதயமானான் .
மஹாபாரத யுத்தம் 15வது நாளுக்கு தயாரானது.
No comments:
Post a Comment