ஐந்தாம் வேதம் J K SIVAN
பதினேழாம் நாள் யுத்தம்
தமிழ் சினிமா ஒன்றில் ஒருவனை மயக்கம் தெளிவித்து தெளிவித்து அடிப்பார்கள் . அது ஹாஸ்யம்.. ஆனால் இது நிஜம். அதுபோல் சஞ்சயன் திருதராஷ்டிரனை துச்சாதனனின் மரணச்செய்தி அளித்த மயக்கத்திலிருந்து தெளிவித்து மேலும் செயதிகள் சொன்னான். அப்படி சஞ்சயன் சொன்ன சேதி ஒன்றும் திருதராஷ்டிரன் காதில் தேனாக பாயவில்லை. மென்மேலும் அவனுக்கு அதிர்ச்சியும், பயமும், கவலையும் அதிகரித்தது.
''அரசே, உன் மகன் துச்சாதனனின் கொலையைப் பழிவாங்க மீதியுள்ள உன் பிள்ளைகள் பத்துபேர் பீமனை சூழ்ந்து பயங்கரமாக தாக்கினார்கள். அவ்வளவு கோபம் அவர்களுக்கு அவன் மேல். உடலெல்லாம் ரத்தம் சொட்ட, கோபமடைந்த பீமன் உன் பிள்ளைகள் பத்து பேரையும் ( நிஷங்கினன் , பாஸின், துண்டதரன், தனுர்க்ரஹன், ஆலோலுபன் ,சஹன் , சண்டன் , வடவேகன், சுவர்சசஸ்) கொன்றான். இதைக் கண்ட மற்ற படை வீரர்கள் உயிர் தப்ப ஓடிவிட்டனர்.
கர்ணன் திடுக்கிட்டான். சல்லியன் அவனிடம் '' கர்ணா, பீமனைப் பற்றி தான் உனக்கு தெரியுமே. அங்கே துரியோதனனை கிருபர் மற்றவர்கள் மயக்கத்திலிருந்து தெளியவைத்து ஆறுதல் சொல்கிறார்கள். உன்னை நோக்கி வரும் அர்ஜுனனை நீ எதிர்க்கத் தயாராகு. பீமனைப் பற்றி கவலை வேண்டாம். பீமன் உன்னைக் கொல்லமாட்டான். உன் உயிரை அர்ஜுனனுக்காக விட்டு வைத்திருக்கிறான்'' என்றான்.
கர்ணனின் மகன் வ்ரிஷசேனன், பீமன், அர்ஜுனன், நகுலன், கிருஷ்ணன், ஆகியோரை வீராவேசமாக தாக்குகிறான். அவனது அம்புகள் நகுலனின் தேரை, குதிரைகளை, வில்லை, வாளை, ஒடித்து நகுலன் ஓடிச் சென்று பீமனுடைய தேரில் ஏறிக் கொள்கிறான். வ்ருஷ சேனன் நகுலனையும் கொல்ல முயல்கிறான். கர்ணனின் தேரின் முன்பு அவனது பாதுகாப்பில் வ்ரிஷசேனன் கிருஷ்ணனையும் தாக்கவே கோபம் கொண்ட அர்ஜுனன், அவனை அம்புகளால் தாக்கி அவன் கைகளையும், தலையையும் அவன் தந்தை கர்ணன் கண் முன்னே துண்டித்துக் கொல்கிறான் .
எதனால் அப்படி கேட்க தோன்றியதோ தெரியவில்லை, கர்ணன் சல்லியனிடம் ''சல்லியா, நான் அர்ஜுனனால் கொல்லப்பட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டான் கர்ணன்.
''கர்ணா, இது என்ன கேள்வி? தனியனாக நான் ஒருவனே போரிட்டு அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் கொல்வேன்''
கர்ணன் கேட்ட இதே கேள்வியை அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்கிறான்.
''அர்ஜுனா உன்னைக் கொல்வது என்பது நடவாத காரியம். அது கர்ணனால் முடியாது. அப்படிக் கொன்றால் பிரபஞ்சமே அழியப் போகிறது என்று அர்த்தம். அப்போது நான் ஒருவனே என் கைகளால் கர்ணன், சல்லியன் அனைத்து கௌரவ சேனையையும் கொல்வேன் .
அர்ஜுனன் கர்ணன் இருவரும் வெகுநேரம் நேரடியாக மோதினர். யுத்தம் வெகு வீராவேசமாக நடந்தது.இருவருமே சிறந்த வில் வீரர்கள். சூரியனும் இந்திரனும் போரிட்டது போல் இருந்தது. நர நாராய ணர்கள் ஒரு சம சக்தி வாய்ந்த வீரனோடு போரிடுவது போல் இருந்தது. வெற்றியா தோல்வியா என்று இருவருக்கும் அறிய முடியாத ரகசியமாக இருந்தது.
சகோதரன் என்று தெரிந்து ஒருவனும், தெரியாமல் ஒருவனும் யுத்தம் புரிந்தார்கள். ஆச்சரியமான ஒரு நிலை. எண்ணற்ற அஸ்திரங்களை ஒருவர் மீது ஒருவர் வீசினார்கள். அம்புகள் மழையாக பொழிந்தன. நீயா நானா என்ற முடிவோடு அவர்கள் மோதி பல காலமாக ஒருவரை ஒருவர் கொல்ல சந்தர்ப்பம் தேடியது இன்று இங்கே கிடைத்ததில் மகிழ்ச்சியோடு சண்டையிட்டார்கள். பயம் அறியாதவர்கள். மிக சக்தி வாய்ந்த தெய்வீக ஆயுதங்களை தொடுத்தும் தடுத்தும் அவர்கள் போரிட்டது அனைவருக்கும் வியப்பை தந்தது. மற்றவர்கள் யுத்தத்தை மறந்து கர்ணன் அர்ஜுனன் சாகசங்களை, இருவரின் மோதலை வியப்போடு பார்ப்பதில் தாங்கள் மறந்து போனார்கள்.
அர்ஜுனன் மீதும் பாண்டவ சைன்யத்தின் மீதும் பார்கவாஸ்திரம் எய்தான் கர்ணன். அதை அர்ஜுனன் தடுத்து திருப்பினான். அது பாஞ்சால வீரர்கள் அனைவரை கொன்று திரும்பியது. அர்ஜுனன் எய்த அக்னி, வாயு, வருண அஸ்திரங்கள் கௌரவ படையில் பெரும் சேதம் விளைத்தது.
''துரியோதனா , எனக்கென்னமோ அர்ஜுனனை எதிர்த்து கர்ணன் வெல்வது முடியாது என தோன்றுகிறது. நான் வேண்டுமானால் யுதிஷ்டிரனோடு சமாதானம் பேசட்டுமா, என் மீது மதிப்பு வைத்து கேட்பான். யுத்தத்தில் எஞ்சி மிஞ்சி இருப்பவர்களாக உயிர் தப்பலாமே. கிருஷ்ணன் சமாதானப் ப்ரியன். யுதிஷ்டிரன் போரை வெறுப்பவன். பீமனோ அவன் சொல் தட்டாதவன். இல்லையேல் நாம் எல்லோரும் அழிவோம்'' என எனக்குப் படுகிறது என்றான் அஸ்வத்தாமன்.
''அஸ்வத்தாமா, பீமன் செய்த சபதம் உனக்கு தெரியும். என் சகோதர்கள் அநேகரை அவன் அன்று நமது சபையில் சொன்னபடியே கொன்றான். கர்ணனை அர்ஜுனனால் வெல்லவே முடியாது. பார்த்துக் கொண்டே இரு. இன்று மாலைக்குள் அர்ஜுனன் மரணம் நிச்சயம். சற்று நேரம் பொறு. அர்ஜுனனின் உயிரற்ற உடலை காண்போம் '' என்றான் துரியோதனன்.
கர்ணனின் அம்புகள் பீமனையும் கிருஷ்ணனையும் துளைத்தன. அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை எடுத்து தொடுத்தான். கர்ணன் அதை எதிர்பார்த்தவன் ஆகையால் தானும் அதே அஸ்திரத்தை செலுத்தி தடுத்தான். மற்றுமொரு ப்ரம்மாஸ்திரத்தால் அர்ஜுனன் கௌரவ சேனையை பெருவாரியாக அழித்தான். அதேபோல் கர்ணனால் பாண்டவ சேனையும் நாசம் அடைந்தது. கடுங்கோபத்தோடு அர்ஜுனன் மற்ற தெய்வீக அஸ்திரங்களையும் தொடுக்க கௌரவ சேனை பின் வாங்கி சென்றது. கர்ணன் மட்டுமே தனித்து போரிட்டான். அவன் உடலில் இருந்து ரத்த ஆறு வழிந்தது. அர்ஜுனன் மீண்டும் அக்னி அஸ்திரம் விடுத்தான். கர்ணன் வருணாஸ்திரம் செலுத்தி அதை தடுத்தான். அர்ஜுனன் காண்டவ வனத்தை அழிக்கும்போது உயிர் தப்பிய அஸ்வசேனன் என்ற கொடிய விஷ நாக ராஜன் அர்ஜுனனை பழி வாங்க காத்திருந்தவன் இந்த சந்தர்ப்பத்தில் பாதாளத்திலிருந்து மெதுவாக புறப்பட்டு கர்ணனின் அம்புகளோடு சேர்ந்து ஒரு அம்பாக தன்னை அவன் பிரயோகிக்க காத்திருந்தான். கர்ணன் இதை அறியவில்லை. வலுவிழந்தான். அவன் அஸ்திரங்கள் நம்பிய பலனளிக்க வில்லையே. கடைசியாக இதுவரை போற்றி பாதுகாத்த நாகாஸ்திரத்தை எடுத்தான். கர்ணனுக்கு தெரியாது அஸ்வசேனனும் அம்பாக அந்த அஸ்திரமாக அர்ஜுனனை தாக்கப் போகிறான் என்று. அர்ஜுனன் தலையை துண்டிக்க குறி வைத்தான்.
''அவசரப்படாதே கர்ணா. அர்ஜுனன் தலைக்கு குறி வைத்தால் தவற வாய்ப்பு உண்டு. ஆகவே அர்ஜுனனின் மார்புக்கு குறி வைத்து அஸ்திரத்தை செலுத்து'' என்றான் சல்லியன்.
கர்ணனுக்கு ஆத்திரமும் கோபமும் வழக்கம்போல் அவன் மேல் வந்தது. ''சல்லியா, கர்ணனின் குறி தப்பியதாக சரித்திரம் கிடையாது. என் போன்ற ஒரு பெரிய மஹா வீரன் வைத்த குறியை மீண்டும் மாற்ற மாட்டான். பேசாதே. உன் வேலையைப்பார் '' என்றான் கர்ணன்.
''அர்ஜுனா, நீ அழிந்தாய் இதோடு'' என்று சொல்லியவாறு கர்ணன் அந்த நாக அஸ்திரத்தை அர்ஜுனன் மீது அதி வேகமாக அவன் தலைக்கு குறிவைத்து செலுத்தினான்.
நாக அஸ்திரம் சீறிக்கொண்டு அர்ஜுனன் தலையை நோக்கி வருவதைக் கவனித்த கிருஷ்ணன் தனது கால் கட்டை விரலால் தேரை பூமியை நோக்கி அழுத்தினான். தேர் ஒரு முழம் உயரம் குறைந்து பூமியில் அழுந்தியது. . குதிரைகள் காலை மடக்கிக் கொண்டன. உயரம் குறைந்தது. சீறி ஆக்கிரோஷத்தோடு வந்த நாக ராஜன் அஸ்வசேனன் அஸ்திரமாக வந்தவன் அர்ஜுனனின் கிரீடத்தை வெறியோடு தாக்கி அதை நொறுக்கிவிட்டு சென்று விட்டான்.
No comments:
Post a Comment