யாழினும் இனிய குரலோன் -J K SIVAN
ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒரு அற்புத மனிதர் தோன்றுவர். இசையில், அதுவும் திரை இசையில் நமது தமிழ் திரை இசைக்கு அப்படி தான் TMS , சீர்காழி, திருச்சி லோகநாதன், MKT பாகவதர், NSK KB சுந்தராம்பாள் ஆகியோர் கிடைத்தார்கள்.
இந்தி திரையுலகில் மொஹம்மத் ரபி, முகேஷ், மன்னாடே , போன்ற பலர் கிடைத்தார்கள். அவர்களுள் ஒரு அற்புத மனிதர் தான் தலத் மஹ்மூத். இசையுலகம் இன்றுவரை காணாத ஒரு வெல்வெட் சில்க் குரல் கொண்ட தனிப்பிறவி. எத்தனை பாட்டுகள், எல்லாமே அந்த இனிய தேன் குரலில் பாடியவை. நான் சிறிய பையனாக இருந்த காலத்தில் பாபுல் என்ற ஹிந்தி படத்தில் திலிப் குமாருக்காக அவர் பாடிய பாடல்களை தான் முதலில் கேட்டேன். அன்று முதல் இன்றுவரை நான் இந்தி நிபுணன் இல்லை. அனால் அவர் இசைக்கு அடிமையானேன். இசைக்கு மொழி ஏது? . தலத் மஹ்மூத் குரல் காந்த சக்தி கொண்டது. இதயத்தை பிழியும் சக்தி வாய்ந்தது. உள்ளே எங்கேயோ புகுந்து மயிலிறகு தேன் தோய்த்து தடவுவது போல் மனதை த்தொட்டு தடவி சுகம் தருவது. இரவில் கண்ணை மூடிக்கொண்டு அவர் பாடல்களைக் கேட்கும் சுகம் அதை அனுபவித்தோருக்கு மட்டுமே புரியும்.
74 வயது வாழ்ந்த அவர் GAZAL கிங் என்ற பேரோடு மறைந்தவர். சில படங்களில் நடித்து தலை காட்டி பாடியதும் உண்டு.
1992ல் பத்ம பூஷண் விருது பெற்றார். வீணை நாதம் போன்ற மெல்லிய குரலில் குழைந்து, சோகம் ததும்ப பாடல்கள் பெரிதும் ரசிகர்களால் பாராட்டப்பட்டவை. 1950-60 களில் இசையுலகை ஆண்டவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இருபக்கத்தாலும் ரசிகர்களால் தேடப்பட்ட பாடகர் அவர். உலகமுழுதும் இன்றும் ரசிகர்கள் உண்டு. வெளிநாடுகளில் அழைக்கப்பட்டு பாடிய முதல் திரை இசை பாடகர் தலத். 40 ஆண்டுகளில் 800க்கும் அதிகமான பாடல்கள் அந்த காலத்திலேயே பாடிய பேர்வழி.
அவர் ஆல்பர்ட் ஹால், லண்டனில், ( இந்தியாவில் ரெண்டே பேர் தான் அங்கு நிகழ்ச்சி கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவு பிரபலம் அந்த ஹால்- லதா மங்கேஷ்கர், தலத்மஹ்மூத் ) . நிகழ்ச்சிக்கு பத்து நாள் முன்பே எல்லா டிக்கெட்களும் விற்று போய்விட்டதாம். அவர் நேரடியாக தனது 55 வயதில் பாடிய சில பாட்டுகளை கேட்டிருக்கிறேன். சினிமாவில் அவர் குரல் எப்படிப் பட்டது என்றால் மறுபடியும் ஏற்கனவே சொன்னதையே திரும்ப சொல்கிறேன். ஒரு 10 A. M. ராஜா + 8 P. B. ஸ்ரீனிவாஸ் இருவரின் குரலை கலந்து பிழிந்து வடிகட்டி அதில் கிடைக்கும் எஸ்ஸன்ஸ் . தலத் மக்ம்மூத்தின் சினிமா பாட்டுகளை கேட்கும்போது நேரடி நிகழ்ச்சியை விட இன்னுமே மென்மையாக, இருக்கும். கேட்டுப் பாருங்களேன். பிறகு எனக்கு சொல்லுங்கள். நான் ஒருவேளை சங்கீதம் அறியாத அவுரங்கசீப்பா என்று?. மாதிரிக்கு ஒரு பாட்டு இத்துடன் இணைத்திருக்கிறேன். https://youtu.be/D5P2iJh-Lqk
No comments:
Post a Comment