Saturday, August 31, 2019

SHEERDI BABA



ஷீர்டி பாபா     J K SIVAN 
மனித உருவில் ஒரு தெய்வம் 


                                       
  தேவ தூதர்கள் 

கண்ணன் வருகின்ற நேரம் நெருங்கிக்  கொண்டே இருக்கிறது போல்  தோன்றுகிறது.  

''எப்போதெல்லாம்  தர்மம் சீர் குலைகிறதோ,  அதர்மம் மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வருவேன்.  நல்லோரைக் காக்க தீயோரை அழிக்க , நீதி நெறி, தர்மம் நியாயம்  தழைத் தோங்க  ஒவ்வொரு காலத்திலும் நான் நிச்சயம் அவதரிப்பேன் '' என்று தான் கிருஷ்ணன் கீதையில் நமக்கு சொல்லியிருக்கிறானே' . 

கண்ணன் எந்த ரூபத்தில், யாராக,  எங்கே,  எப்போது வருவான் என்பது அவனுக்கு மட்டுமே  தெரிந்த  ரஹஸ்யம்.எண்ணற்ற மகான்களை, ரிஷிகளை, யோகிகளை, ஞானிகளை  அவன் சார்பாக,  அவ்வப்போது நமக்காக பூமியில்  அனுப்பிக்கொண்டே  தானே  இருக்கிறான். 

அவரவர்  ஸ்வதர்மங்களை விட்டொழித்து விடுகிறார்கள்.  ஏற்ற தாழ்வு மக்களிடையே  பரவி விட்டது.  நீதி, நியாயம், சத்யம், நேர்மை என்றால்  எங்கோ ஒரு கம்பத்தின் உச்சியில்  மூன்று சிங்கங்களை மட்டும் காட்டுகிறோம்.  அது தான் சத்யம் அது மட்டுமே ஜெயிக்கும் என்று பாவம் அந்த ஒன்றை ஒன்று பார்க்காத மூன்று சிங்கங்களை  சுட்டிக்காட்டுகிறோம்.நீதி மன்றங்களில் அடுக்கடுக்காக பொய் சொல்கிறோம்.  வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் தூக்கி  எறியப்படுகிறது. பெரியோர், சான்றோர் வாக்கு எடுபடவில்லை.  தகாத செயல்கள் பட்டப்பகலில் மனச்சாட்சி இன்றி நடை பெருகிறதே. தீய பழக்கங்கள் நல்ல பழக்கங்களை விழுங்கிக்கொண்டே போகின்றன.   ஒற்றுமை மனப்பான்மை மறைந்து ஒருவரை ஒருவர் தாக்கி, அவமதித்து, இகழும் காலமாகி விட்டது. அன்பும் பண்பும் காகிதத்தில் மறைந்து விட்டது. யோகிகள், துறவிகள்  காசு பார்க்க ஆரம்பித்தாகிவிட்டது. குடும்பம் நரகமாகி விட்டது. எலிகளும் பூனைகளும் தான்  மிச்சம்.  

இந்த சூழ்நிலையில் தான் அவ்வப்போது உண்மை ஞானிகள் தோன்றி கொஞ்சம் அமைதியை நிலைநாட்டுகிறார்கள். அவர்கள் சொல்லும் செயலும் நம்மை திரும்பி பழைய பாதையில் செல்ல வைக்கிறது.  இருட்டில் ஒளி விளக்காக  வழி காட்டுகிறார்கள்.  இப்படி வந்தவர்களில் சில பெயர்கள் சொன்னால் ஞாபகம் வரும். துக்காராம், நாமதேவர், கோரா , ஏகநாதர், நார்சி மேத்தா , ராமதாஸ், ஞானதேவர்,ஷீர்டி ஸாயி பாபா, சைதன்யர், காஞ்சி மஹா பெரியவா ஆகியோர். 

கோதாவரி நதி தீரம் எத்தனையோ மகான்களை அளித்திருக்கிறது.   ஞானேஸ்வர் தோன்றினார்.  ஷீர்டி அங்கே தான் கோபர்காவுன் தாலுகாவில் இருக்கிறது. அங்கிருந்து ஒன்பது  மைல்  தூரத்தில்  நீம் காவுன் என்ற கிராமம் உள்ளடக்கியது தான்  ஷீர்டி. நமது காவிரிக்கரை எத்தனை மகான்களை தந்திருக்கிறது.  எனவே தான் அவை புண்ய நதி என்று பெருமையோடு போற்றப்படுகிறது. 

ஷீரடி எனும்  குக்கிராமம் உலகப் பிரசித்தி பெற்ற க்ஷேத்ர மானது ஸாயீ பாபாவினால் தானே.   அந்த மஹான் சம்சார சாகரத்தை வென்றவர்.  அமைதி பூத்த மனம், எளிமை, கருணை, அளவற்ற ஞானம் இதெல்லாம் ஒன்று சேர்த்தால் அதன் பெயர் தானே  ஷீர்டி ஸாயீபாபா  என்ற ஆத்ம ஞானி. தேனான வாக்குகள், அந்த  கண்ணாடி போன்ற துல்லிய  ஹ்ருதயத்தில் இருந்து வந்ததே. ஏழை யார்  பணக்காரன் யார் என்றே அறியாதவர்.  எந்த மரியாதை, உபச்சாரம் எதிர்பார்க்கா தவர். ஆடம்பரம் தேக சுகம் அறியாதவர். சமாதி நிலையில் தன்னை இழந்தவர்.இறைவன் நாமத்தையே மூச்சாக கொண்ட ஞானி. சர்வ வியாபி. ஒரு இடத்தில் இருந்தாலும் எங்கு எது நடந்தாலும் துல்லியமாக அறியும் சித்த புருஷர்.

ஒரு கணம் கண் மூடி  நினைத்து பாருங்களேன் .  ஒரு காலை குறுக்கே மடக்கி ஒன்றன் மேல் ஒன்றாக  வைத்துக்கொண்டு ஒரு பாழடைந்த மசூதி சுவற்றில் சாய்ந்து நிற்கும் முக்காடிட்டு  நீண்ட அங்கி யணிந்த  தாடிக்கார முதியவர் கண் முன்னே தோன்றவில்லையா?  அவர் தான் ஸாயீ . அவரது வாழ்க்கை ஒவ்வொருகணமும்  அற்புதங்கள் விநோதங்கள் நிறைந்த சம்பவங்கள் கொண்டது  என்பதால் தானே இதை எழுதுகிறேன்.

அவரது  கூர்ந்த பார்வை,  மௌனமான, சாந்தமான முகம் எண்ணற்ற துன்பங்களிலிருந்து பக்தர்களை  இன்றும் விடுவித்துக்கொண்டு இருக்கிறதே.

அவரை நேரில்  காண கொடுத்து வைத்த நம் முன்னோர்கள்  பாக்கியவான்கள். அப்படித்தான் இப்போது நாம் ஸ்ரீ மஹா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரை தரிசிக்க கொடுத்து வைத்தவர்கள். இது பிற்காலத்தில் கிடைக்குமா?  ஷீர்டி ஸாயீ பாபாவின் உதி ( துனி சாம்பல்) சகல வியாதி நிவாரண, துக்க நிவாரணியாக பல வீடுகளில் இன்றும் உண்டே.

ஆச்சர்யமாக நான் சமீபத்தில் உடல் நலம் குன்றி இருக்கும்போது ஒரு சிறந்த  ஸாயீ  பக்தர் ஸ்ரீ  சுந்தரராமன்  எனக்காக  ஷீர்டி ஸாயி உதி ஒரு சிறு பாக்கெட் கொடுத்து நீரில் கரைத்து குடிக்க சொல்லி  அப்படியே செய்தபிறகு  எழுந்து உற்கார்ந்து,
 பழையபடி புத்துணர்ச்சியோடு  எழுத ஆரம்பித்தேன் என்பது கட்டுக்கதை அல்ல. 

கேட்டதை எல்லாம் கொடுப்பவனான க்ரிஷ்ணனாகவும், ராமனாகவும் விட்டலனாகவும்,  எண்ணியபடியெல்லாம் பலருக்கு காட் சி அளித்த ஸாயீ பகவான் சர்வ சக்தி மிக்க தெய்வமாக இருப்பதால் தானே கணக்கில்லா  ஆலயங்களிலும்  எண்ணற்ற இல்லங்களிலும் ''யாம் இருக்க பயம் ஏன்?'' என்று தைரிய மூட்டுகிறார்! 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...