Friday, August 2, 2019

VETRI VERKAI

நறுந்தொகை   J K SIVAN 
அதிவீரராம பாண்டியன் 
                                                      
                                                           
               நாலாவதில் மனப்பாடம் செய்தது 

அதி வீர ராம பாண்டியனை மீண்டும் பிடிப்போம் படிப்போம். இலங்கை எனும் ராவண ராஜ்யத்தில் கொழும்பு என்கிற சிலோன்  க்ளாம்பு  என்று உச்சரிக்கப்பட்டாலும் அங்கே ஒரு செட்டியார் தெரு உண்டு. அதில் ஒரு புத்தக கடை  சரஸ்வதி புத்தக சாலை,  அது நாலு அணாவுக்கு  அதிவீர ராம பாண்டியன் விற்றிருக்கிறது. அவனை என்றால் அவன் எழுதிய வெற்றி வேற்கை புத்தகத்தை.  இதை பிரசுரித்தது ஸ்ரீமகள் விலாசம், ஜார்ஜ் டவுனில் 1947ல்.

நறுந்தொகை என்ற பேரை சொன்னால் யாருக்கும் தெரியாது. வெற்றி வேற்கை என்றால் கொஞ்சம் புரிந்தமாதிரி இருக்கும். அவன் முதல் வாக்கியத்தையே   ''எழுத்தறிவித்தவன் இறைவனாகும்''  எனக்கு ஆனா  ஆவன்னா சொல்லிக்கொடுத்த         டீச்சர்  SSLC முடிக்காதவள். சுப்ரமணிய அய்யர் எப்படியாவது நிச்சயம் SSLC  அவருக்குண்டான சாமர்த்தியத்தில் கரை ஏறியிருப்பார். இருந்தும் அவர்கள் என் இரு கண்கள். எனக்கு எழுத்து எழுத, படிக்க, பேச கற்றுக்கொடுத்தவர்கள் இல்லையா?
  அதிவீரன் நன்றி மறக்காதவன். ஆகவே தான் கல்வி கற்பித்தவன் கடவுளுக்கு சமானம் என்று சொல்லவில்லை. கடவுளே தான் என்கிறான்.

 ''கல்விக்கழகு கசடற மொழிதல்'' - குறையோ, தப்போ இல்லாமல் எப்படி மனப்பாடம் பண்ணி, (டப்பா அடிச்சு பாஸ் பண்ணினால் ) பேசமுடியும். கற்றது மனதில் நுழையும்போது அர்த்தத்தோடு விளங்கினால்  மனப்பாடம் எதற்கு. கற்றதை விஸ்தரித்து விவரித்து  பிறருக்கு சொல்வது, எழுதுவது தான் கல்விக்கு அழகு என்கிறான் அ வீ.ரா. பாண்டியன்.

''செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதலாம்''   - பிள்ளை பெண்ணை படிக்கவைச்சு அமேரிக்கா அனுப்பினால் நீ யார் என்று கேட்பது பாண்டியனுக்கு தெரியாது. நாலு காசு பணம் இருந்தால் அல்ல, பரம்பரை பரம்பரையாக கோடி சொத்து இருந்தாலும் சுற்றத்தை, உற்றாரை, உறவை மறக்காமல் அவர்களுக்கு உதவுவது தான் செல்வந்தனுக்கு அழகு. உறவினரை காப்பாற்ற விட்டாலும் பெற்றவரை காப்பாற்றவாவது  இப்போது புதிதாக  கை நிறைய   காசு வாங்குவோர் பந்த பாண்டியன் பாட்டின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும். கிருஷ்ணன் அருள்புரிவான்.

''வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்'' -- அந்தணன் என்பவன் சொத்து சம்பாதிக்காதவன். சாத்வீகமாக வேதம் சிறுவயது முதல் பயின்று கசடற கற்று அதில் சொல்லியபடி எல்லோருக்கும் ''நல்லது '' சொல்லி நல்வழி காட்டி அவர்கள்  மனமுவந்து தரும் தக்ஷிணையில் ஆச்சார்யனாக பெறுமதிப்போடு வாழ்பவன். அரசன் முதல் ஆண்டிவரை  அவனை மதித்து போற்றி வாழ வகை செய்துகொடுத்த காலம் மலையேறிவிட்டதால் அது பற்றி இப்போது பழம் புத்தகத்தில் எங்காவது படித்து தெரிந்து கொள்ளலாம். அதிகம் இதை பற்றி பேச மனம் இடம் கொடுக்கவில்லை.

 ''மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை'' -- ராஜ்ஜியம் ஆளுபவர் நீதி நெறி முறை வழுவாது பிரஜைகளை ஆண்டு அவர்கள் சந்தோஷமாக பயமின்றி வாழ வைப்பது தான் அழகு என்கிறான் பாண்டியன்.  அரசினர் என்றாலே பயமாக இருக்கிறதே இப்போது. இல்லாவிட்டால் தனியார் துறை வளர்ந்திருக்குமா?  ஆளுபவர்க்கழகு அவர்கள் மகிழ்வது என்றாகி விட்டது.  பாண்டியா முடிந்தால் புதிதாக காலத்திற்கு ஏற்றால் போல எழுது.

''வணிகர்க்கழகு வளர்பொருள் ஈட்டல்''  -  வியாபாரிகளுக்கு அழகு  பணத்தை நிறைய சம்பாதிப்பது என்பதை மட்டும் புரிந்துகொண்டு  தேங்காயை கூட எடை போட்டு கிலோ  இவ்வளவு என்று விற்கும் காலத்தில், சரியான அளவுக்கு, சல்லிசான விலைக்கு குறைந்த லாபத்திற்கு பொருள்களை விற்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றவில்லையா?

போதும் இப்போதைக்கு பாண்டியனை சற்று ஓரம் கட்டுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...