Wednesday, August 14, 2019

INDEPENDENCE DAY



''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' J K SIVAN

''இன்று என்ன என்னைச் சுற்றி இத்தனை பேர்?'' என்று வியக்கிறார் பாபுஜி
'' ஈஸ்வர் அல்லா தேரோ நாம். சப்கோ சம்மதி தே பகவான்' என்று MS சுப்புலக்ஷ்மி பாடும் போது எல்லோரும் ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். கவனம் கலையவே சுற்றி பார்த்தார் பாபுஜி. ஏன் இன்று இவ்வளவு பேர் இங்கே என்னை சுற்றி ?
''இன்று பாரத தேசம் 73வது சுதந்திர நாள் கொண்டாடுகிறது பாபுஜி'' என்கிறார் பாட்டை நிறுத்திய M.S. சுப்புலக்ஷ்மி. அருகில் நின்ற MKT பாகவதர் தலை ஆட்டிக்கொண்டு ஏதோ முணுமுணுத்தார்.
'' ஓ பூமியில் நமது பாரததேசத்தில் நாளை ஆகஸ்ட் 15 அல்லவா? புன்னகைத்தார் காந்திஜி. பாகவதர் என்ன ஏதோ தனக்குள் பாடிக்கொள்கிறார் உரக்கவே பாடட்டுமே கேட்போம்'' என்று மதுரை சோமு சொன்னது பாகவதர் காதில் விழுந்தால் மனிதர் சும்மா இருப்பாரா? ஐந்து கட்டை சுருதியில் உரக்கவே பாடினார்.
'''காந்தியைப் போல் ஒரு சாந்த ஸ்வரூபியை.....''
''ஆஹா என்ன அற்புதம். என்ன அர்த்தம் அவர் பாடுவதற்கு?'' என்று சரோஜினி தேவி கேட்க
''உங்களைப்போல சாந்தமாக இன்னொருவரை பார்க்கமுடியாது ''என்கிறார் நேரு, காந்தியை பார்த்து.
''ஆமாம். இல்லாவிட்டால் இன்னும் உன் தோளில் கை போட்டுக்கொண்டிருப்பேனா?'' என சிரிக்கிறார் பாபுஜி
''நேரு ரொம்ப ஆச்சர்யமான விந்தை மனிதர் என்கிறார் ராஜாஜி''
''ஆம். இல்லாவிட்டால் 73 வருஷங்கள் ஓடியும் பழைய விஷயங்களை நினைக்க வேண்டி இருக்குமா?'' என்கிறார் படேல். ஏனோ கடுகடுவென்று இருக்கிறார்.
''எல்லாம் நல்லதுக்கே '' என்கிறார் வாஜ்பாயி.
''என்ன பூடகமாக பேசுகிறீர்கள் எல்லோரும். நாம் எல்லோரும் பாரதநாட்டு மன்னர்கள் அல்லவா?
''பாரதியார் போதும்... போதும்..அப்போதே மன்னர்களை இணைக்க நான் பட்டபாடு எனக்கு தான்தெரியும்'' என்கிறார் படேல்.
'' என் சுதந்திர நாட்டை பார்க்காமல் இங்கே வந்தபின் ஒவ்வொரு வருஷமும் நான் விடாமல் மேலிருந்து அந்த நன்னாளை நம் நாட்டு மக்கள் கொண்டாடுவதை, தாயின் மணிக்கொடி வெற்றி எட்டு திக்கும் முரசு கொட்ட பளபளவென்று மின்னி பறப்பதை வெள்ளிப்பனியின் மீதிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன்.'' என்கிறார் பாரதி.
''நானும் எத்தனையோ கனவுகளுடன் தான் அங்கிருந்து இங்கே வந்தேன் '' என்று ஆமோதித்தார் அப்துல் கலாம். எதிர்காலத்தில் இளைஞர்கள் எப்படியெல்லாம் நமது நாட்டுக்கு பெருமைகள் சேர்ப்பார்கள் என்ற என் கனவு நிச்சயம் நிஜமாகும் '' என்கிறார் சிரித்தமுகமாக கலாம்.
சுதந்திரம் என்றால், "நினைத்ததைச் செய்வது, சொல்வது, எழுதுவது ஜாலியாக இருப்பது" என்றல்ல. யாரும் வித்தியாசமின்றி ஒற்றுமையாக ஒரு நாடு ஒரு மக்கள் என்று பலம் வாய்ந்த பாரத பிரஜைகளாக இருக்கவே நான் நினைத்தேன். பிரயாசையோடு பாடுபட்டேன்.எல்லோரும் சமம் என்றபோது யாதொரு வித்யாசமும் கூடாது '' என்கிறார் அம்பேத்கர். அவருக்கு நல்ல ஜுரம். இழுத்து போர்த்திக்கொண்டிருக்கிறார்.
ஏன் பாபாஜி புரையேறுகிறது உங்களுக்கு. யாராவது நினைத்தால் தான் அப்படி புரைக்கேறும் என்பார்களே '' என்றார் சுஷ்மாஜி .
' வாஸ்தவம் தான். அவரை உலகத்தில் எல்லோரும் இப்போது நிறைய நினைக்கிறார்கள்.. பேசுகிறார்கள் ''என்கிறார் லால் பகதூர் சாஸ்திரி .
''என்ன நேருஜி எப்போதும் கலகலப்பாக இருப்பவர் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கிறார்? என்று காமராஜர் கேட்க
ஒருவேளை அவரையும் குடும்ப கவலை வாட்டுகிறதோ என்னவோ? என்னைப் பொறுத்தவரை நாடும் வீடும் தனித்தனி எல்லையில்லாமல் போனது பெரிய துன்பத்தை தந்தது... வீட்டு நலம் நாட்டு நலத்தில் சேர்ந்தால் எப்படியெல்லாம் நடக்கும்'' ம்ம்ம்... அனுபவம் சொல்கிறது என முணு முணுக்கிறார் ஜெயலலிதா. பார்வை அருகே கலைஞர் மீது பாய அவரோ சூரியனை பார்க்கிறார். 'இந்திராவும் ராஜீவும் பின்னால் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியாக பார்த்துக்கொள்கிறார்கள்.
.
நல்லது என்று நினைத்தோ, தெரிந்தோ ஏதோ ஒன்று செய்ய அது வேறுவிதமாக முடிந்தால்....? விருப்பு வெறுப்பாக தானே மாறும்'' எப்போதுமே தன்னிச்சையான உயிராக இருக்கின்றீர்கள், இதுதான் வாழ்வின் அழகு. எனவே உங்கள் விருப்புகளும் வெறுப்புகளும் உங்கள் வேலிகளா அல்லது சுதந்திரமா? உங்களுக்கு பிடித்ததை மட்டுமே நீங்கள் செய்வதென்பது உங்கள் சுதந்திரமா அல்லது பிணைப்பா? சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன் என்பதுதானே சுதந்திரம்?
சும்மா இருப்பது தான் சுதந்திரமோ? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என முழங்கினார் பாரதி.
தேவ தூதர்கள் தட்டுகளில் இனிப்பு வழங்க அனைவரும் வாழ்க பாரதம் என்று ஒரே குரலில் முழங்குகிறார்கள்.
வானுலகில் நடப்பதை விடுங்கள். மண்ணுலகில் இது போன்ற சுதந்திர நாட்களில் நானும் சுதந்திர தின ஸ்வீட் சாப்பிட்டிருக்கிறேன். சூளைமேட்டில் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் நான்கு ஐந்து நாட்கள் முன்னாலேயே சுதந்திர தின கொண்டாட்டம் பற்றி பள்ளியில் டீச்சர் கள் என்னசெய்யவேண்டும் என்று சொல்லி விடுவார்கள். பள்ளியில் மரத்தில் தொங்கும் தண்டவாளத்தில் இரும்பு குழாயால் மணி அடிக்கும் கோவிந்தசாமி எல்லா பையன்களையும் உயரம் பார்த்து நிற்க வைத்து ஒன் டூ த்ரீ என்று கை விரித்து மேலே தூக்கி ஒரு குதி குதித்து கீழ இறக்க, லெப்ட் ரைட் கவாத்து பழக்கி நடக்க சொல்வான்.கோவிந்தசாமி ஒன்பது பெயிலானவன். பள்ளியில் சகல வேலைகளும் அவன் தான் செய்வான். சுவற்றில் கொடி படம் போடசொன்னார் தலைமை ஆசிரியர் சுப்ரமணிய ஐயர் . மேலே பச்சை நடுவே வேலை கீழே சிகப்பு பெயின்ட் அடித்துவிட்டு அழிக்க பாடுபட்டான். அந்த கோவத்தில் எங்களை எழுந்து உட்கார, ஓடச்சொல்லி பழி வாங்கினான்.
சரோஜினி டீச்சர் பெண் குழந்தைகளை ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'', '' பச்சை மலை பவழ மலை எங்கள் மலை அம்மே'' பாட்டுக்கு குறத்தி டான்ஸ் நாலு நாளாக பழக்கினாள் . வீட்டிலிருந்து குறத்தி வேஷத்தில் கூடை சுமந்து வர சொன்னாள். ஆகஸ்ட் 15 காலை ஆறரை மணிக்கு நீங்கள் தோய்த்து உலர்த்திய சுத்தமான ஆடைகளை அணிந்து , தலை வாரி, நெற்றியில் பொட்டு வைத்து, பள்ளிக்கு வரவேண்டும். எல்லோரும் மறக்காமல் மூவர்ண கொடி சட்டையில் குத்திக் கொள்ளவேண்டும். வரிசையாக சுண்ணாம்பு கோட்டுக்குள் குறிப்பிட்ட இடத்தில் வகுப்பு வாரியாக நிற்க வேண்டும். யாரும் சத்தம் போட கூடாது. ஏழரை மணிக்கு புலியூரிலிருந்து வரதராஜ நாயக்கர் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து விடுவார். எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர். அவருக்கு எப்படி கொடியேற்றவேண்டும் என்று பல முறை சொல்லிக்கொடுத்தாலும் தப்பு பண்ணிவிடுவார் என்பதால், கொடி மேலே ஏறி கம்பத்தின் உச்சியில் சிக்கிக்கொண்டு பிடிவாதம் பிடிக்காமல் இருக்க, கோவிந்தசாமி அருகே நிற்பான். உண்மையில் பியூன் கோவிந்தசாமி தான் கொடியேற்றுவான். நாயக்கர் அந்த கயிற்றின் ஒரு முனையை அவன் சொல்லிக் கொடுத்தபடி தொட்டுக் கொண்டிருப்பார். கொடி மேலே ஏறும். எல்லோரும் கைகளை பலமாக தட்ட, நாயக்கர் மேலே வாய் பிளந்து பார்ப்பார். கொடி அவிழ்ந்து அதன் உள்ளே சுற்றி வைத்திருந்த
ரோஜா இதழ்கள், சாமந்தி, செண்பகம், நந்தியாவட்டை செவ்வரளி பூக்கள் மேலேஇருந்து அவர் வழுக்கை மண்டையில் விழும்போது ஆனந்தம். '' இன்று இ ஸ்கோலில் நான் தான் கொடியேற்றினேன்'' என்று எல்லோரிடமும் பஜாரில் சொல்லிக்கொள்வார்.
கொடியை மேலே ஏற்றி கயிற்றை கம்பத்தில் கட்டியதும் எல்லோரும் ''ஜெய் ஹிந்த்'' ''பாரத மாதாக்கு ஜே '' என்று உரக்க சொல்வோம். மீனாட்சி டீச்சர் பத்து பெண்களோடு கம்பத்தை சுற்றி நின்று கொண்டு ''தாயின் மணிக்கொடி'' என்று கீச் கீச்சென்று பாடுவார். சுப்ரமணியஐயர் இந்தியா சுதந்திரம் பெற்று மூன்றாவது வருஷம் என்று எழுதிக்கொண்டு வந்து அதை பார்த்து பேசினார் ''நாயக்கர் அய்யா ரெண்டு வார்த்தை சொல்ல வேண்டும் '' என்று ஞாபகப்படுத்தினார்.
''அதெல்லாம் வாணாமுங்கோ, எல்லாத்துக்கும் வெல்லக்கட்டி கொணாந்திருக்கேன். வண்டிலே இருக்குது. எடுத்தாந்து தரச்சொல்லுங்க. வாத்தியார் மார்களுக்கு எல்லாம் சாக்கலேட் பொட்டலம் கூட கட்டி வச்சிருக்குது வண்டிலே ''
'அப்படி இல்லீங்க ஐயா, தலைவர் நீங்க ரெண்டு வார்த்தை பேசுங்க நாயக்கரே. குழந்தைகள் ஆசையா கேட்குது '' என்று மீனாட்சி அம்மாள் கூற தட்டமுடியாமல் திக்கித் திணறி பேசினார்:
''நமது தேசம் இந்தியா. நாம் இன்று சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆகவே நாம் சுதந்திரமாக வாழுகிறோம். சுதந்திரம் என்பது அப்படியெல்லாம் சுலபமாக கிடைக்காது. ரொம்ப கஷ்டப்படவேண்டும். நம்மால் அதை வாங்க முடியாது என்பதால் தான் பெரிய பெரிய மனிதர்கள் காந்தி நேரு எல்லாம் நமக்காக ராவும் பகலும் எங்கெல்லாமோ போய் பேசி கஷ்டப்பட்டு வாங்கி நமக்கு தந்தார்கள். ஆகையால் தான் சுதந்திரம் வாங்குமுன் இருந்த கஷ்டத்தை விட சுதந்திரம் வாங்கியபின் நமக்கு இருக்கும் கஷ்டம் ரொம்ப கொஞ்சம் ஆகி விட்டது. ஆகவே தான் சுதந்திரம் ரொம்ப ரொம்ப அவசியம்'' என்று ஒரு வழியாக மென்று முழுங்கி, திணறி, தட்டு தடுமாறி உடம்பை எல்லாம் நெளித்து பேசி முடிப்பதற்குள் உடம்பெல்லாம் வியர்க்கும். விழி பிதுங்கியது. தொண்டை அடைத்துக் கொண்டது. மேல் அங்கவஸ்திரத்தால் முகத்தை பலமுறை துடைத்துக் கொண்டார் இப்படிப் பேச வேண்டியிருக்கும் என்று தயார் பண்ணிக்க கொண்டு வந்த பேச்சு. என்றாலும் கடைசி நிமிஷம் காலை வாரியது.
அவர் பேசியதும் கண்டிப்பாக நாங்கள் எல்லோரும் கைதட்டவேண்டும் என்று கட்டளை இட்டிருந்ததால், உடனே கை தட்டினோம். யாராவது கைதட்டாமல் இருப்பதை பார்த்துவிட்டால் அடுத்தநாள் சுப்ரமணிய ஐயர் பிரம்பு பேசும். கழுகுமாதிரி கோவிந்தசாமி பார்த்துக்கொண்டிருப்பான். கூர்ந்து கவனிப்பான்.
ஒருமுறைக்கு மேல் ரெண்டாவது முறை மிட்டாய் கேட்டால் கோவிந்தசாமி கொடுக்க மாட்டான். அவனுக்கு வேண்டிய பசங்களுக்கு மட்டும் ரெண்டுடன் ஒன்று சேர்த்து மூன்றாக கொடுப்பான்.
நாயக்கர் தானே குள்ள மாட்டை ஒட்டிக்கொண்டு வண்டியில் பானையில் நீர் மோருடன் சென்று மார்க்கெட்டில் ஆலமரத்தடியில் தண்ணீர்ப்பந்தலில் நீர் மோர் விநியோகம் செய்தார்.
1947ல் நாடு சுதந்திரமடைந்தபோது எனக்கு எட்டு வயது. சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியவில்லை. எங்கும் கலர் கலராக வண்ண தோரணம். சுண்ணாம்பு கோடுகள், கேசவ நாயர் டீ கடையில் ரேடியோ பெரிதாக வைத்து கொரகொர சப்தத்தோடு நிறைய வாத்தியங்கள் இசைத்தன. வெள்ளை அடித்த சுவர்கள். வாழ்க பாரதம். நேருஜி வாழ்க காந்திஜி வாழ்க என்ற கூச்சல். தெருவில் நின்று மிட்டாய்கள் கொடுத்தார்கள். நிறைய வெள்ளைக்காரர்கள் மதராஸில் இருந்த காலம். பின்னி கம்பெனியில் வேலை செய்த ஜார்ஜ் பரூச்சி என்ற வெள்ளைக்காரன் நன்றாக் தமிழ் பேசுவான். என்னை தட்டிக் கொடுத்தான். அவனைக் கண்டபோதெல்லாம் சல்யூட் அடிப்பேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையர்கள் குறைய ஆரம்பித்தார்கள். சுதந்திரம் என்றால் அப்போது விவரம் தெரியவில்லை, இப்போது விஷயம்
புரியவில்லை. ஆனால் வருஷங்களும் ஓடிவிட்டது , வயசும் ஏறி விட்டது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...