ஐந்தாம் வேதம் J K SIVAN
கௌரவர்களின் கடைசி சேனாதிபதி
''வைசம்பாயனரே, எனக்கு வருத்தமாக இருக்கிறது. இத்தனை நாள் அற்புதமாக நீங்கள் சொல்லி வந்த மஹா பாரதம் துரியோதனனின் மரணத்தோடு முடிவு பெற்றதா. அப்புறம் என்ன நடந்தது? மேற்கொண்டு சொல்லுங்கள். கேட்க ஆவலாக இருக்கிறேன் என்றான் ஜனமேஜயன்.'
''ஜனமேஜயா. மஹாபாரதத்துக்கு முடிவேது ? இனிமேல் தான் முக்கிய சம்பவங்கள் பல நடக்கப்போகிறது. கேள் சொல்கிறேன்.
'' அஸ்வத்தாமன் கோபத்தின் உச்சியில் இருந்தான். எல்லாவற்றையும் இழந்தாகிவிட்டது. அருமை துரியோதனனும் மாண்டான். அவன் மரணத்துக்கு எப்படி பழி தீர்ப்பது. இனி யுத்தம் என்பது குதிரைக் கொம்பு. பாண்டவர்கள் ஐவரும் ஒரு துன்பமும் இல்லாமல் தப்பிவிட்டார்கள். கௌரவர்கள் பெரிய சேனை முற்றிலும் அழிந்து விட்டது. இனி நேரடி தாக்குதல் நடக்காது. இனி மறைமுகமாகவே நான் அவர்களை அழிப்பேன் என்று மனதில் எண்ணம் கொண்டான்.
அன்றிரவு பாண்டவர்கள் குருக்ஷேத்திர யுத்த களத்தில் எங்கும் அமைதி நிலவ, அனைத்து பாசறைகளையும் தமதாக்கி தங்க ஏற்பாடுகள் செய்யும்போது, கிருஷ்ணன் எங்கோ நோக்கியவாறு சிந்திப்பதை யுதிஷ்டிரன் பார்த்து விட்டான்.
''கிருஷ்ணா உன் மனதில் எந்த எண்ணக்குதிரை ஓடுகிறது சொல்வாயா?''
'' யுதிஷ்டிரா, இன்றிரவு நீங்கள் ஐவரும் இங்கு தங்கக் கூடாது. உடனே ஹஸ்தினாபுரமோ வேறு எங்கோ சென்று தங்குங்கள்''
''கிருஷ்ணா உன் வார்த்தைக்கு மறுப்பேது'' என்று பாண்டவர்கள் கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் ஒகவதி நதிக்கரைக்கு சென்றனர். அங்கிருந்து அவர்களை பிரிந்து கிருஷ்ணன் ஹஸ்தினாபுர த்திற்கு தனது தேரை தாருகன் செலுத்த புறப்பட்டான்.
''கிருஷ்ணா, திருதராஷ்டிரன், காந்தாரிக்கு தக்க ஆறுதல் சொல்'' என்று பாண்டவர்கள் வேண்டினர்.
''வைசம்பாயனரே, எதற்கு கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் சென்றார்? அவர் தானே முதலில் அங்கே சமாதானம் பேச சென்று விருப்பம் நிறைவேறாமல் திரும்பினவர். அதனால் தானே போர் மூண்டது. ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரும், ஏன், காந்தாரியின் 100 பிள்ளைகளும் கூட மறைந்தார்கள். கிருஷ்ணன் சென்றதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் அல்லவா ?''
''ஆம் ஜனமேஜயா, காரணம் ஒன்று இருக்கிறது. துரியோதனனை பீமன் சாஸ்த்ர விரோதமாக தாக்கி கொன்றான். காந்தாரி மிகவும் சக்தி வாய்ந்தவள். கோபம் கொண்ட அவள், தனது பதி விரத சக்தியால், அவள் பிள்ளைகளை, பேரர்களை அனைவரையும் அழித்த பாண்டவர்களை சாம்பலாக்கி இருப்பாள். எனவே கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் ஒருவாறு சமாதானப் படுத்தி பிறகு அவர்களை பாண்டவர்கள் சந்திக்க தயார் செய்வதற்கு சென்றார்''
'' கிருஷ்ணா, நீ செய்த உதவி ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. நீ ஹஸ்தினாபுரம் அடைந்தால் அங்கு தாத்தா வேத வியாசரும் இருப்பார், அவர் உதவியும் ஒருவிதத்தில் காந்தாரியின் கோபத்திலிருந்து சாபத்திலிருந்து எம்மைக் காப்பாற்றட்டும்.'' என்றான் யுதிஷ்டிரன்.
''அரண்மனையில் கிருஷ்ண துவைபாயனரையும் திருதராஷ்டிரனையும் பாதம் தொட்டு வணங்கிய கிருஷ்ணன் காந்தாரியையும் சந்தித்தான். இருவரையும் கைகளால் அணைத்து சிறிது துக்கத்தினால் கண்ணீர் உகுத்தான். (வியாசர் ஸ்லோகத்தில் இருக்கிறது)
''த்ரிதராஷ்டிரரே, உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. உங்கள் ஆசியால் பாண்டவர்கள் குலம் அழியாமல் மிஞ்சினார்கள். சூதாட்டத்தில் ஏமாற்றப் பட்டு எண்ணற்ற இன்னல்களை ஏற்று பல வருஷங்கள் வனங்களில் தவம் மேற்கொண்டு அமைதியாக நியாயமாக நேர்மையாக சொன்ன சொல் தவறாமல் பாண்டவர்கள் வாழ்ந்தனர் .அப்புறமும் சமாதானத்தோடு வாழ, ஐந்து ஊர்கள், ஐந்து வீடுகள் கேட்டும் மறுக்கப் பட்டு, யுத்தம் தான் முடிவு என்று உன் மகனால் நேர்ந்தது. நானும், விதுரரும், பீஷ்மரும் துரோணரும், எவ்வளவோ சொன்னோம். என் செய்வது. விதி வலியது, கொடிது. நீங்களும் தவறு செய்து விட்டீர்கள். கர்ம பலனை தவிர்க்க முடியுமா? பாண்டவர்கள் மேல் இனியாவது வெறுப்போ கோபமோ வேண்டாம். அவர்களும் உங்கள் குழந்தைகள் தானே. உங்களை என்றும் மதிப்பும் மரியாதையோடும் வணங்குபவர்கள் அல்லவா. உங்களை இனி அவர்கள் கண் போல் ரக்ஷிப்பார்கள். அவர்களும் உங்கள் பிள்ளைகள் தானே. உங்கள் சொல் தவறாது ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள். யுத்தத்தில் எதிர்த்தவர்களை கொல்வது மரபு என்றாலும் யுதிஷ்டிரன் துளியும் யுத்தத்தில் விருப்பமின்றி தான் போரிட்டான். அவன் தூக்கம் இழந்து தவிக்கிறான். உற்றாரை இழப்பது எளிதல்ல. சகோதரர்கள்,குருமார்கள், உறவினர், குழந்தைகள், பெயரர்கள், அனைவரையும் இழக்க நேரிட்டதே என்று வருந்துகிறான். மீளா துக்கத்தில் இருக்கும் உங்கள் இருவரையும் எப்படி நேரில் வந்து சமாதானமோ ஆறுதலோ சொல்வது என்று தவிக்கிறான். அதற்காகவே என்னை அனுப்பினான்.
தாயே,.அன்று நீ சபையில் கூறியது நினைவிருக்கிறதா? நீ எடுத்து சொன்னதை உன் மகன் துரியோதனனோ மற்றவர்களோ மதிக்கவில்லை. ''சத்யம் நேர்மை தானடா ஜெயிக்கும் என்றீர்கள். அப்படியே நடந்துவிட்டது. எனவே பாண்டவர்கள் மீது கோபம் வேண்டாம். அவர்கள் நிரபராதிகள்.
''கேசவா, நீ சொல்வது நியாயம் தான். என் மனம் கோபத்தால் குழம்பி இருந்தது வாஸ்தவம். பிள்ளைகளை இழந்த திருதராஷ் ட்ர மஹாராஜாவுக்கும் எனக்கும் இனி பாண்டவர்கள் தான் வாரிசு. அவர்களது பாதுகாப்பில் தான் நாங்கள் வாழ்வோம்.
இவ்வாறு சொல்லி விட்டு காந்தாரி முகத்தை மூடிக்கொண்டு ஓ வென்று அழுதாள்.
''நீங்கள் அமைதியாக இருங்கள், நான் அவசரமாக செல்ல வேண்டியிருக்கிறது. துரோணர் மகன் அஸ்வத்தாமன் ஏதோ தீங்கு, தகாத காரியம், செய்யப் போகிறான் என்று தோன்றுகிறது. பாண்டவர்களை இன்று அவர்கள் எதிர்பாராத நேரம் ஓய்வெடுத்து தூங்கும் நேரம் கொல்ல முயற்சிப்பான் என்று என் மனதில் படுகிறது. வருகிறேன்'' என்று கிருஷ்ணன் புறப்பட்டார் .
''ஐயோ என்ன அநியாயம் இது என்றாள் காந்தாரி. கிருஷ்ணா நீ உடனே செல், என் குழந்தைகள் பாண்டவர்களை யாவது காப்பாற்று.'' இவ்வாறு அவளது அன்பை பாண்டவர்கள் மேல் பெற்று கிருஷ்ணன் வெளியே வந்து வியாசரை சந்தித்தான். அவரையும் திருதராஷ்டிரன் காந்தாரிக்கு ஆறுதல் சொல்ல வேண்டிக்கொண்டு புறப்பட்ட கிருஷ்ணன் பாண்டவர்களை சந்தித்து நடந்ததெல்லாம் உரைத்தார் .
''சஞ்சயா கடைசி நேரத்தில் என் மகன் துரியோதனன் என்ன சொன்னான் என்று மீண்டும் எனக்கு சொல்லேன்'' என்ற திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் பதில் சொல்கிறான் :
''துரியோதனன் தொடைகள் பீமனால் தாக்கப்பட்டு, நசுங்கி கூழாகி, அரை உயிருடன் இருந்தவன், கண்களில் நீர் ஆறாக ஓட மெதுவாக கைகளை ஊன்றி சற்று நிமிர்ந்து தலை தூக்கி சுற்று முற்றும் பார்த்தான், அவன் எதிரில் அஸ்வத்தாமன், கிருபர், க்ருதவர்மன் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள்.
துரியோதனன் மூச்சு திணறி மெதுவாக பேசினான் ''அஸ்வத்தாமா, என்னிடம் எவராலும் வெல்ல முடியாத பீஷ்மர், துரோணர், கர்ணன், மேலும் சகுனி, என் சகோதரர்கள் இதோடு கூட பதினோரு அக்ஷ்வுணி சைன்யம் இருக்கும்போது எவர் என்னை வெல்ல முடியும் என்று நினைத்தேன்.எல்லாமே, எல்லோருமே என்னை விட்டு பிரிந்து போய்விட்டது. விதி வென்று விட்டது. அநியாயமாக, முறை தவறி தான், பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிசிரவஸ், ஜயத்ரதன், நான் எல்லோருமே கொல்லப் பட்டோம். அரசன் என்றும் பாராமல், உதவியற்ற நிலையில், என் தலையை மிதித்தான் பீமன். என் தாய் தந்தை, மற்றும் எஞ்சி உயிரோடு இருப்பவர்கள் இதை அறியச் செய். என் உயிருக்காக அவர்கள் பாண்டவர்களை பழி வாங்கட்டும். நான் சகல சம்பத்தும், மரியாதையும் கொண்டு பெருமையுடன் வாழ்ந்தேன், நல்ல வேளை என் உயிர் பிரியும் வரை என் செல்வங்கள் என்னை விட்டு செல்லவில்லை. எத்தனையோ பேர் எனக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்கள்.' என்றான்.
''அஸ்வத்தாமா, நான் மூவுலகும் போற்றும் சக்ரவர்த்தியாக மண்ணை ஆண்டேன், இதோ மண்ணில் கிடக்கிறேன். எதுவும் சாஸ்வதம் இல்லை. மரணம் தவிர்க்க முடியாதது. நீங்கள் எல்லோரும் எனக்காக தியாகம் செய்தவர்கள், அதிருஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள். எனக்காக யாரும் வருந்த வேண்டாம்.''
''துரியோதனா , எங்கள் ஆருயிர் நண்பா, மஹாராஜா, உன்னால் நான் வளர்ந்தவன். உனக்காக நான் பாண்டவர்களை, கிருஷ்ணன் கண் முன்னாலேயே அழித்து அவர்கள் துடிக்க , பழி வாங்குவேன். அப்போது தான் என் மனம் திருப்தியடையும்.''
''கிருபரே , உங்கள் கையால் எனக்கு கொஞ்சம் நீர் கொடுங்கள்'' என்றான் துரியோதனன். துரியோதனன் கண் முன்னே, கிருபர் மந்திரங்கள் உச்சரித்து அஸ்வத்தாமனை அடுத்த கௌரவ சேனாதிபதியாக்கினார்''.
அஸ்வத்தாமன் வருந்தினான். யோசித்தான். முடிவுக்கு வந்தான். கிருபர், க்ருதவர்மன் ஆகியோருடன் பாண்டவர்கள் தங்கி இருந்த பாசறைக்கு படையோடு வந்தான். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவனாக அஸ்வத்தாமன் அங்கிருந்து விடுவிடு வென்று எங்கோ கிளம்பி சென்றான்.
இத்துடன் சல்லிய பர்வம் மஹாபாரதத்தில் நிறைவு பெறுகிறது. அடுத்தது சௌப்திக பர்வம்.
No comments:
Post a Comment