ஒரிஸ்ஸாவில் ஒரு ராம பக்தர். ரகு தாசர் என்று ரொம்ப பொருத்தமான பெயர். பூரி ஜகந்நாதர் ஆலயம் அருகே சிம்மவாசல் பக்கம் ஒரு பெரிய குடையின் கீழே நிழலில் இருப்பவர். ஒருநாள் அவர் ஜெகன்நாதன் தரிசனம் செய்ய அவன் முன் நிற்கும்போது அவர் கண்ணெதிரே தோன்றியது ராமர், லக்ஷ்மணன் சீதா .வழக்கமான கிருஷ்ணன் பலராமன் சுபத்ரா அல்ல. அந்த கணம் முதல் ஜெகந்நாதன் வேறுயாருமில்லை ராமர் தான் என்று எங்கும் சொல்லிக்கொண்டே போனார். ஜெகந்நாதனோடு தோழமை பாவம் (BHAVAM) அவருக்கு மிகவும் பிடித்தது.
ஒருநாள் நிறைய பூக்களை பறித்துக்கொண்டு வந்து பூமாலை தொடுத்தார் ரகுதாஸர். ''பட்டாச்சார்யாரிடம் ஐயா இதை ஜெகநாதனுக்கு அணிவியுங்கள்'' என்று மாலையை கொடுத்தபோது அதை அந்த பட்டர் வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டார். மாலையை ரகுதாஸர் வாழைநாரில் தொடுத்திருந்தார். இந்த பழக்கம் அப்போது ஜகந்நாதர் கோவிலில் இல்லை.
''ஜெகன்னாதா, எவ்வளவு ஆசை ஆசையாக நான் இந்த மாலையை மணிக்கணக்காக உனக்கு என்று தொடுத்தேன். நீ ஏற்றுக்கொள்ள மறுத்தாயே'' என்று வருத்தம். கண்களில் தாரை தாரையாக நீர். மெதுவாக வெளியே நடந்தார். கோவிலில் வழக்கம்போல் சாயந்திரம் ஆரத்தி நேரம். ஜெகந்நாதனுக்கு வழக்கம்போல் ஸ்ரிங்கார அலங்காரம். பட்டர் ஆடை அணிவித்து மேலே மலர்மாலைகள் சாற்றிக்கொண்டிருந்தார். எந்த புஷ்பத்தை ஜெகந்நாதன் மேல் சாற்றினாலும் அது தானாகவே கீழே விழுந்து கொண்டே இருந்தது. பட்டருக்கு திகைப்பு. நடுக்கமாகியது. ''எங்கேயோ ஏதோ அபச்சாரம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஜெகந்நாதன் இப்படி செய்ய மாட்டானே''.ஓடினார் மற்ற பட்டாச்சார்யர்களிடம் விஷயம் சொல்லி அழுதார். என்ன நடந்திருக்கும் என்று எல்லோரும் சிந்தித்தார்கள். காரணம் புரியவில்லை.
'' நாம் எல்லோரும் இன்று உபவாசம் இருந்து இங்கேயே படுப்போம். ஜெகந்நாதன் கனவில் நமக்கு அறிவுறுத்தட்டும். நிச்சயம் நமது தவறை எடுத்துக் காட்டுவான்'' என்று தீர்மானித்தார்கள் . நம்பிக்கை வீண் போகவில்லை.
''எழுந்திரு, என்ன காரியம் செயதீர்கள்'' என்று ஜெகந்நாதன் தலைமை பட்டாச்சார்யரை கனவில் எழுப்பினான் ''
''ஜெகன்னாதா. க்ஷமிக்கணும். என்ன நடந்தது. நான் பொறுப்பேத்துக்கறேன். எனக்கு தண்டனை கொடு '' என்று கெஞ்சினார் தலைமை பட்டர்.
''எனக்கென்று எவ்வளவு பக்தியோடு என் பக்தன் நண்பன் ரகுதாசன் ஒரு மாலை தொடுத்து வந்தான். நானும் அதை நீங்கள் எனக்கு அணிவிக்க காத்திருந்தேன். வாழை நாரால் தொடுத்தது என்று அதை உதாசீனம் செயதாய். என் மீதுள்ள அன்பாலும் பக்தியாலும் அது தொடுத்தது என்று ஏன் மறந்தீர்கள்? ''என்றான் ஜெகந்நாதன்.
அந்த மாலையை எடுத்துக்கொண்டு சென்று எதிரே வைத்து அதை பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டு அன்ன ஆகாரமில்
லாமல் உறக்கமுமின்றி என் பக்தன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பது தெரியுமா உங்களுக்கு? .நீங்கள் எனக்களித்த மற்ற மலர்மாலைகளை நான் எவ்வாறு ஏற்பேன்? என் பக்தனின் விருப்பம் நிறைவேறினால் தான் இனி எனக்கு மலர் மாலை''
திடுக்கிட்ட தலைமை பட்டர் மற்றவர்களை எழுப்பி ஜெகந்நாதன் கூறியதை சொன்னார். ''ஆமாம் அவ்வாறு தான் நடந்தது என்று குறிப்பிட்ட பட்டர் அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார். நடுநிசி என்றும் பாராமல் எல்லோரும் ஓடிச் சென்று ரகுதாஸர் தங்கி இருந்த ஒரு குடிசையை தேடி கண்டுபிடித்து கதவை இடித்து தொபுக்கடீர் என்று அவர் காலில் விழுந்தார்கள்.
ஜெகநாதனின் கருணையை காதாரக் கேட்ட ரகுதாஸர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார். மாலையை எடுத்துக்கொண்டு எல்லோரும் ஆலயம் சென்று ஜெகந்நாதனுக்கு பட்டர் அந்த மலையை சூட்டியபிறகு தான் மற்ற மலர்மாலைகளை அவன் ஏற்றான். புன்னகைத்தான்.
ரகுதாசர் இன்னொரு அனுபவம் அடுத்ததில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment