Sunday, August 11, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்       J K  SIVAN 
16ம் நாள் யுத்தம்..


                                              '' ஜம்பம்  பேசிய  காக்கை ''

யுத்தம்  எப்போதும் ஆரம்பத்திலும்  முடிவிலும்  சூடு பிடிக்கும். ஒவ்வொருநாளும்   இன்றோடு  முடியும்  என ரெண்டு பக்கமும்  எதிர்பார்ப்போடு தான்  யுத்தத்தில்  ஈடுபட்டார்கள். இருந்தும்  பதினாறு நாள் ஆகிவிட்டது.    நானா  நீயா  இன்னும் தெரியவில்லை. 

''வைசம்பாயனரே, எனக்கு ஆர்வத்தை கிளைப்பி விட்டீரே. உடனே சொல்லும், அது என்ன காக்கா கதை, அவ்வளவு முக்கியமாக அதை சல்லியன் கர்ணனிடம் சொன்னான்?.'' என கேட்டான் ஜனமேஜயன்.

''ஜனமேஜயா, சல்லியன் காரணமாகதான் அந்த கதையை கர்ணனுக்கு சொன்னான். '' என்கிறார் முனிவர்.
'' சஞ்சயா எனக்கு அந்த கதையை சுருக்கமாக சொல்லு'' என்றான் த்ரிதராஷ்டிரனும்.
 இது தான் அந்த கதை.
"கர்ணா, உனக்கு ஒரு காக்கையின் கதை சுருக்கமாக சொல்கிறேன் கேள். அது ஒரு சாதாரண காக்கை. உணவுக்கு ஆலாய்ப் பறக்கும் பக்ஷி. ஒரு தனவந்தனுடைய வீட்டு பின் பக்க மரத்தில்  வசித்தது. தனவந்தனின் பிள்ளைகள் போடும் எச்சிலில், மீதியாக எறிந்த உணவில், உயிர் வாழ்ந்தது. அதிக புஷ்டியான ஆகாரம்.   மிதமிஞ்சி உண்ட பிள்ளைகள் வீணாக்கிய பண்டம் அதன் உடலை வளர்த்தது.  நல்ல திண்டியான  சாப்பாட்டினால்  தனக்கு அதிக பலம் வந்ததாக நினைத்த காக்கை மற்ற பக்ஷிகளிடம்   ''நான் உங்களை விட பலம் மிக்கவன். என்னை எவரும் வெல்ல முடியாது என்று இறுமாப்பு கொண்டு ஒருநாள் ஒரு பெரிய நீர் நிலையை அடைந்தது.    அங்கு அன்னங்கள் குடும்பமாக வசித்தன. காக்கை அவைகளிடம் தன் வீரம் , பலம்  அதீத சக்தி  பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.  

''என்னைப் போல நீண்ட தூரம் வித்தைகள் காட்டி உங்களால் பறக்க முடியுமா என்று சவாலுக்கு அழைத்தது. அன்னங்களின்  அரசன்  பதில் சொன்னது  '
'ஹே காக்கையே,உன்னால் நீண்ட தூரம் பறக்க முடியாது. எங்களைப்  போல் நீரிலும் நீண்ட நேரம் மிதக்க முடியாது. நாங்கள் தொலைதூரம் கடலில் கூட மிதப்போம், கடலைக் கடந்தும் கூட  பறப்போம்.    முட்டாள்தனமாக  ஜம்பம் பேசி  நேரம் வீணாக்காமல்  போய்  உன் வேலையைப் பார்''  என்றது.  விடுமா காக்கை?
''இதோ பார் கிழட்டு அன்னமே,   என் சாமர்த்தியத்தை''  என்று காக்கை அந்தர் பல்டி, கீழே இருந்து மேல், மேலிருந்து கீழ், பக்கவாட்டில், குதித்து குதித்து,   என்றெல்லாம் வித்தை காட்டி இது போல் உங்களால் பண்ண முடியுமா? என்னிலும் நீங்கள் தாழ்ந்தவர்கள்'' என்று வசனம் பேசியது. கடைசியில்   எதிரே  தெரிந்த சமுத்திரத்தை காட்டி  ''இதோ இந்த பெரிய சமுத்திரத்தின் மீது பறந்து அக்கறை சென்று திரும்ப வேண்டும். பறக்கும் போட்டி உனக்கும் எனக்கும் '' என்று காக்கை அழைத்தது. அன்னம் அப்போதும் சொல்லியது.
''வேண்டாம் விஷப் பரிக்ஷை. காக்கைகளால் அவ்வளவு தூரம் பறக்க முடியாது. பேசாமல் போ'' என்றது அன்னம்.
கேட்குமா காக்கை? வாதாடியது. கடைசியில் ''சரி''  என்று அன்னமும் ஒப்புக் கொண்டு இரண்டும் கடலின் கரையிலிருந்து பறந்தன. காக்கை வித்தை எல்லாம் காட்டிக் கொண்டு பறந்தது. அதன் முட்டாள் தனத்தை ரசித்து மற்ற பறவைகள் கை தட்டியதை தனது வீரத்தை மெச்சுவதாக ஏற்றுக்கொண்டு காக்கை தொடர்ந்து தனது சக்தியை இழந்து கொண்டே பறந்தது. அன்னம் மெதுவாக ஒரே சீராக பறக்க ஆரம்பித்தது .   காக்கை வேகமாக வெகு நேரம் மேலே பறந்தது. சிறிது தூரம் பறந்ததும் காக்கை திரும்பிப் பார்க்கும்போது அன்னம் பின்னால் எங்கோ மெதுவாக பறந்து வருவதை பார்த்து இன்னும் வேகமாக முன்னால் பறந்தது. நேரமாக ஆக களைப்பு,  காக்கைக்கு தாகம், இறக்கைகள் வலுவிழந்தன . .கீழே பெருங்கடல், எங்கும் மரமோ தங்குவதற்கு ஒரு இடமோ இல்லை, எதிரே எல்லையில்லாத கடல்...காக்கைக்கு பயம் வந்து விட்டது. அன்னம் பின்னால் மெதுவாக பறந்து வந்தது. காக்கையின் வேகம் குறைந்து கொண்டே வந்து பறக்கவே முடியாத நிலை. தொப்பென்று கடலில் விழுந்து கடல் நீரை குடித்தது. இறக்கையெல்லாம் நீரில் நனைந்து முழுகும் நிலை. மீண்டும் எப்படியோ கொஞ்சம் சமாளித்து கொஞ்சம் பறந்தது. மறுபடியும் விழுந்தது. அன்னம் அருகே வந்து விட்டது. ''அட இது என்ன புது வித்தை. நீரில் இறங்கி மீண்டு பறந்து நன்றாக வித்தை காட்டுகிறாயே .இது என்ன புது வித்தை. பலே பலே, நீ கெட்டிக்காரன். நான் இதற்கெல்லாம்  நான் எங்கே போவேன் ?'' என்றது அன்னம்.
விழுந்து விழுந்து பறக்க தவித்தது காக்கை. அன்னம் ஒரே சீராக பறந்து கொண்டிருந்தது.
''அன்னமே ,  ஐயோ,   இது வித்தை இல்லை. நான் உயிருக்கு தவிக்கிறேன். என்னை விட்டு போகாதே. உதவி செய் '' என்றது காக்கை.
''இல்லை அப்பனே, நான் நீ சொன்னபடி அதோ அந்த கரைக்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். நீ தான் வேகமாக பறப்பவன் சீக்கிரமே வந்துவிடுவாயே. நான் மெதுவாக பறந்து போகிறேன்''. என்றது அன்னம் பறந்து கொண்டே.
''ஐயய்யோ , என்னை இங்கே தவிக்க விட்டு விடாதே. என்னால் அவ்வளவு தூரம் இன்னமும் பறக்க முடியவே முடியாது. போகாதே ப்ளீஸ் ''.  காக்கை  .கெஞ்சியது. அழுதது.
''நீ வேடிக்கைக்  காரன்.   பலசாலி, என்னிடம்  விளையாடுகிறாய். நான் மெதுவாக போய் கொண்டிருக்கிறேன் நீ வா'' என்றது அன்னம்.  காக்கை ஓவென்று அழுதது.
''ஐயோ,   என்னை சாக விடாதே. தெரியாமல் சொல்லி விட்டேன், என் முட்டாள் தனத்துக்கும் அறிவின்மைக்கும் தக்க பரிசு கிடைத்துவிட்டது. எப்படியாவது என்னை காப்பாற்றி மீண்டும் நாம் வந்த கரைக்கே கொண்டு செல். என்னை மன்னித்து அருள் புரிவாய். இனி இந்த தப்பு பண்ணவே மாட்டேன்'' என்றது காக்கை.
''உண்மையாகவா சொல்கிறாய். நீ சொல்வதில் எதை நம்புவது எது   உண்மை  எது  கேலி வீண் பேச்சு என்றே புரியவில்லையே. எதற்கும் உண்மையாகவே உன்னால் பறக்க முடியவில்லை என்றால் என் முதுகில் ஏறி அமர்ந்து கொள். மெதுவாக உன்னை தூக்கி கொண்டு கரை சேர்க்கிறேன்'' என்றது அன்னம்.
மூக்கால் காக்கையை தூக்கி தன் முதுகில் அமர்த்திக்கொண்டு வெடவெட என்று காக்கை நடுங்க, அன்னம் சாவதானமாக கரை சேர்ந்தது. எல்லா பக்ஷிகளும் காக்கையை பார்த்து ஏளனம் செய்தன. தலை குனிந்து அனைவரையும் வணங்கிவிட்டு காகம் மெதுவாக தனது மரத்துக்கு சென்றது. அதன் ஆணவம் அதை விட்டு அகன்றது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...