Saturday, August 10, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்   J K  SIVAN 
16ம் நாள்  யுத்தம்.
                    
                      சொல்  சண்டையா  வில் சண்டையா? 
                                                            
ஒவ்வொருநாளும்  ஜனத்தொகை  குறைந்து கொண்டே வருகிறது.  எத்தனையோ அக்ஷவ்ணி  சேனைகள்  இருந்ததே.கிட்டத்தட்ட முக்கால் வாசி காணோமே. 

கர்ணன் யுத்தத்துக்கு  தயாரானான். துரியோதனன் அவனை வாழ்த்தினான். '' நான்  உன்மூலம்  பெருமை கொள்கிறேன். என்னை வெற்றி பெற வைப்பவன் நீ . அதற்காகவே காத்திருந்தேன் என்றான்''. 

.''துரியோதனா, இன்று அர்ஜுனனா, நானா என்பது தெரியும் வரை போரிடுவேன். அவனைக் கொல்லாமல் நான் இன்று ரும்பி வருவது என்பது இல்லை. அர்ஜுனனுக்கு இருக்கும் வீரம், வில் வித்தை, அஸ்திரங்கள் என்னிடமும் உண்டு. அவனை விட நான் அதிக சக்தி வாய்ந்தவன். இருப்பினும் அவனது தேரோட்டி ஒருவன் தான் என்னைவிட அவனுக்கு அதிக பலத்தை தருகிற விஷயம். எனக்கு கிருஷ்னைப் போல் ஒரு தேரோட்டி இருந்தால் நான் எளிதில் அவனை வென்று கொன்று வருவேன். நம்மிடம் சல்லியன் ஒருவனே சிறந்த தேரோட்டி.    கிருஷ்ணனுக்கு ஈடு அவன். அவனை எனக்கு தேரோட்ட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால் ? என்கிறான் கர்ணன்.
''திருதராஷ்டிரா,   உன் மகன் துரியோதனன் சல்லியனை அழைத்து கர்ணன் விருப்பத்தை கூறி அர்ஜுனனை இன்று எப்படியாவது கொல்ல நீ கர்ணனுக்கு தேரோட்டி உதவ வேண்டும். நீ யுத்தத்தில் சாமர்த்தியத்தில் எல்லாவற்றிலும் கிருஷ்ணனுக்கு சமமானவன். கர்ணனை வழி நடத்தி காப்பாற்றி எதிரியை வெல்வதற்கு உதவவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான். இதைக் கேட்டதும் சல்லியன் கடுங்கோபம் கொண்டான்.

 ''துரியோதனா, நீ என்னை சாதாரண தேர் ஓட்டுபவனாக கருதுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நாளாக என்னை அவமானம் செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாய் ?    கர்ணன் நம் எல்லோரையும் விட மிக சிறந்த வீரன் என்றும் , நான் அவனுக்கு தேர் ஓட்ட மட்டுமே தகுந்தவன் என்ற எண்ணமா? நான் அவனை அப்படி எடை போடவில்லை. என்னை மரியாதையோடு நீ நடத்தினால் நான் உனக்காக போர் புரிகிறேன் இல்லாவிட்டால் இதோ என் நாட்டுக்கு த் திரும்பிச் செல்கிறேன். இனி என் பங்கும் உதவியும் உனக்கு தேவையில்லை. நான் தனியாகவே பாண்டவர்களை வெல்லும் சக்தி வாய்ந்தவன்.    தாழ்ந்த  குலத்தவன்  ஒருவனுக்கு நான் தேரோட்டியா? அவன் சொல்படி நான் கேட்டு நடக்கவேண்டுமா? அவனே ஒரு சாதாரண தேரோட்டியின் மகன், அவனுக்கு நான் தேரோட்டியா? என்னை தைரியம் உனக்கு என்னிடம் இப்படி வந்து கேட்பதற்கு?'' சினத்தில்  கொதித்தான் சல்லியன். 

''ஐயோ சல்லியா, அப்படியில்லை . தயவு செயது அமைதியாக  கேள்.   ஒரு காரணமாகவே இதை சொன்னேன். உன் பராக்ரமத்தின் முன் நானோ கர்ணனோ வேறு எவரோ ஈடற்றவர்கள் என்பது உண்மையே. ஆனால் அர்ஜுனனை விட கர்ணன் சக்தியிலோ போர் தந்திரத்திலோ, ஆயுதங்களை பிரயோகிப்பதிலோ உயர்ந்தவன். அவன் தேரை செலுத்துவதில் நீ கிருஷ்ணனைவிட கை தேர்ந்தவன் என்பதே உண்மை. ''

''சரி துரியோதனா, எப்போது நீ நான்  கிருஷ்ணனைவிட சாமர்த்திய சாலி என்று கருதுகிறாயோ அதனால் இன்று கர்ணனுக்கு நான் தேரோட்ட சம்மதிக்கிறேன். ஆனால் அவன் அர்ஜுனன் எப்படி கிருஷ்ணன்   சொல்வதைக்  கேட்கிறானோ அது போல் என் அறிவுரைகளை கர்ணன் கேட்டு நடக்கவேண்டும்.''   கர்ணனிடம் இதை துரியோதனன் சொல்ல அவன் அப்படியே ஆகட்டும்'' என்றான், என சஞ்சயன் திரிதராஷ்டிரனிடம் கூறினான்.

''சல்லியா, பரசுராமனிடமிருந்து சக்தி மிக்க அஸ்த்ரங்களையும் பிரயோக மந்திரங்களும் கற்றவன் கர்ணன் . சூரியனிடமிருந்து கவச குண்டலங்களை பெற்றவன். நிச்சயம் அவன் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனாக இருக்க முடியாது. ஒரு க்ஷத்ரியனுக்குண்டான லக்ஷணங்கள் மிகுந்தவன். தர்ம சிந்தனை உடையவன் ஒரு சாதாரண தாழ் குல பெண்ணுக்கு பிறந்திருக்கமுடியாது. மான் வயிற்றிலோ, பசு வயிற்றிலோ சிங்கம் தோன்றாதே. இன்று எப்படியும் அர்ஜுனனைக்  கொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறான் கர்ணன். கிருஷ்ணன் எப்படி அர்ஜுனனுக்கு தக்க சமயத்தில் ஆலோசனை கூறுகிறானோ, அதைப் போலவே நீயும் கர்ணனுடன் கலந்து பேசி இருவரும் வெற்றி அடைய வேண்டும். இது ஒன்றே என் விருப்பம். வேண்டுகோளும் கூட'' என்றான் துரியோதனன். சல்லியன் தலை யசைத்து ஆமோதித்தான்.

கர்ணனும் ''சல்லியா, கௌரவ சேனையின் நன்மைக்காக நீ எதை சொன்னாலும் நான் கேட்பேன்'' என்றான்.

'கர்ணா, நீ எதனால் பாண்டவர்களை பற்றி சக்தி குறைந்தவர்களாக உன்னை எதிர்க்க வலுவற்றவர்களாக நினைக்கிறாய். சர்வ சக்தி நிறைந்தவர்கள் அவர்கள்.தெய்வீக ஆயுதங்கள் பெற்றவர்கள். அவர்களை எதிர்க்க உனக்கு சிரமமாக தான் இருக்கும்.

''சல்லியா, முதலில் நீ தேரை செலுத்து. பிறகு இதைப்பற்றி பேச நேரமிருந்தால்  பேசுவோம்.'' என்ற ஒரு வார்த்தை தான் பதிலாக சொன்னான் கர்ணன்.  அன்று  அண்டமே கிடுகிடுக்க அபாரமாக போர் புரிந்தான் கர்ணன். பாண்டவ சேனையை நாலாப்பக்கம் சிதறி ஓடுமாறு கலைத்தான். எண்ணற்ற தலைகளை தரையில் உருளச்செய்தான்.

''சல்லியா, என்னதான் வீரர்களாக  இருந்தபோதும்   பீஷ்மராலும் த்ரோணராலும் அந்த அர்ஜுனனை கொல்ல எதற்காக முடியவில்லை?  என் வீரம் அவர்களுடையதை  விட ச்  சிறந்தது என்று நிரூபிக்கிறேன். இன்று பார் நான் அர்ஜுனனை பிணமாக்குகிறேன். என்னை விட சிறந்த வீரன் பராக்கிரமசாலி இதுவரை கௌரவ சேனையில்  எவரும் இல்லை என்று துரியோதனனுக்கு நிரூபிக்கிறேன். தேரை பாஞ்சாலர்கள், துருபதர்கள் பாண்டவர்கள் பக்கம் திருப்பு.

சல்லியன் சிரித்தான். ''என்ன சொன்னாய்? நீ பீஷ்மன் த்ரோணனைவிட சிறந்த விரனா? ஓ ! போதும், வேண்டாம் இந்த பிதற்றல். ஏதோ பதவி கிடைத்த மோகத்தில் உளறிவிட்டாய். வீரர்களிலேயே சிறந்தவன் முதன்மையானவன் அர்ஜுனன். எவராலும் வெல்ல முடியாதவன். நீயோ அடி மட்டத்து மனிதன். கொஞ்சம் யோசிக்கிறாயா? கிருஷ்ணனின் சகோதரியை பலாத்காரமாக அர்ஜுனன் கைப்பற்றியபோது, யதுக்கள் , விருஷ்ணிகள், எல்லோரும் எதிர்த்தும் தனி ஒருவனாக வென்று மணந்து கொண்டவனை நீ எதிர்த்து கொல்வாயா? சிவனையே எதிர்த்து போரிட்டு அவனைக் களைப்படைய செய்த மா வீரன், சிவனாலேயே சிறந்த வீரன் என புகழப்பட்டவனை நீ வெல்வாயா? கந்தர்வர்கள் துரியோதனனை சிறைப்பிடித்து கொல்ல முயன்றபோது அவர்களை வென்று துரியோதனனுக்கு உயிர் பிச்சை கொடுத்தவன் அர்ஜுனன். அப்போது  நீயோ ஓடிவிட்டாய்? துரோணர், பீஷ்மர் கிருபர் துணையிருந்தும், விராட தேசத்தில் ஒரு பெண்ணாக அர்ஜுனன் ஒரு சிறு பையனைத்  தேரோட்ட வைத்து உங்கள் அனைவரையும் வென்றானே. நீ மயங்கி விழுந்தாயே? இது தான் உன் வீரம். இந்த போரிலாவது நீ ஓடாமல் நின்றால் முடிவில் நீ உயிரிழக்கப் போவது என்னவோ நிச்சயம்? நீ அவனைக் கொல்வாயா?  நல்ல வேடிக்கை பேச்சு' என்றான் சல்லியன்.

கர்ணன்   கோபத்தை அடக்கிக் கொண்டான்.   ''சரி சரி, அப்படியே ஆகட்டும். எதற்கும்  யுத்தம் முடியும் வரை உன் புகழ் மாலையை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்.  அர்ஜுனன்  உயிரோடு இருந்தால் அப்போது அவனுக்கு சூட்டு.''

கர்ணன் தனது சங்கை ஒலித்தான் .'' எங்கே அந்த அர்ஜுனன் ஒளிந்து கொண்டிருக்கிறான். கொண்டு வாருங்கள் என் எதிரே அவனை. கொண்டு வருபவருக்கு எண்ணற்ற பரிசுகள் தருகிறேன்'' என்று உரக்க சத்தமிட்டான் கர்ணன் .

''கர்ணா எதற்கு பாவம் உன் பொருள்களை,  தனத்தை விரயம் செயகிறாய். உன் சங்க நாதம் ஒலி கேட்ட உடனே சந்தோஷத்தோடு உன் எதிரே உனை வதம் செய்ய வந்து நிற்பான் பார் இப்போது அர்ஜுனன்'' என்று சிரித்தான் சல்லியன். அதோ எதிரே படைகள் சூழ நிற்கிறான் அர்ஜுனன். வியூகத்தை உடைத்து உள்ளே சென்று அவனைக்கொல். அது துரியோதனனுக்கு நீ செய்யும் உதவி என்பதற்காக சொல்கிறேன்'' என்றான்  சல்லியன்.

'சல்லியா, நண்பன் என்ற போர்வையில் நீ எனக்கு முதல் எதிரி. இருக்கட்டும். அர்ஜுனனை கொன்றுவிட்டு பிறகு உன்னிடம் பேசுகிறேன்'' என்றான் கர்ணன்.
''தலையில் பெரிய பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு இரு கைகளால் மட்டுமே ஒரு பெரிய கடலை நீந்த முடியும் என்று நீ நினைக்கிற படியே நடக்கட்டும். மான் குட்டி சிங்கத்தை ஜெயிப்பதை பார்க்க எனக்கும் ஆசை தான்'' என்றான் சல்லியன்.
''உன்னோடு எதற்கு வீணாக பேச்சு. சிங்கங்கள் மோதும்போது நரியின் ஆலோசனை எதற்கு?'இதோ இந்த நாகாஸ்திரத்தை வெகு நாளாக அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் கொல்வதற்கென்றே தயார் நிலையில் வைத்திருக்கிறேன். இருவரையும் அது கொடிய விஷத்தை கக்கிக் கொண்டு கொல்வதை நீ பார். முட்டாளே,  பயத்தில் ஏதேதோ உளறுகிறாய். அவர்களைக் கொன்று விட்டு கடைசியில் உன்னையும் கொல்கிறேன்'' என்றான் கர்ணன்.

''சரியப்பா, ஏதோ உனக்கு தேரோட்ட வந்ததால் நான் தேரோட்டியும் இல்லை, உன்னைப் போல் தேரோட்டி மகனும் அல்ல. நண்பன் துரியோதனனுக்கு கொடுத்த வாக்குக்காக உன்னை உயிரோடு திரும்ப கொண்டு துரியோதனனிடம் ஒப்படைக்க  ஆசைப் படுகிறேன். எனக்கும் நாடு இருக்கிறது, சேனை இருக்கிறது, ஆயுதங்கள் அஸ்திர வித்தை தெரிந்தவன். எத்தனையோ யுத்தங்களில், உன்னைப் போல ஓடாமல், ஜெயித்திருக்கிறேனே. இருக்கட்டும் உன் நிலைமை எனக்கு ஒரு காகத்தை நினைவூட்டுகிறது என்று சல்லியன் கர்ணனுக்கு ஒரு காகத்தின் கதையை சொன்னான். அதைக் கேட்போமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...