அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
ஒருவரது கவிகள், பாசுரங்கள், பாக்கள் எந்த அளவிற்கு தேன் சொட்ட அமைந்திருந்தால், இனிமையாக இருந்தால், அவர் தனது உண்மைப் பெயர் மறக்கப்பட்டு ''மதுர கவி'' என்று நினைக்கப்படுவார். போற்றப்படுவார், தெய்வமாக கருதப்படுவார்?'' என்று எண்ணும் போது மதுர கவி ஆழ்வாரின் பாசுரங்களை உடனே படித்து மகிழ ஆர்வம் ஏற்பட வில்லையா?.
எனக்கு ஏற்பட்டது.
மற்ற ஆழ்வார்களுக்கும் இவருக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் ?
மற்ற பதினொரு ஆழ்வார்கள் வைகுந்தனை, மாலவனை வேண்டி துதி பாட, மதுர கவி மட்டுமே தனது ஆசானை, குருவை, அரங்கனைவிட அதிகமாக நேசித்து தமது குருவைப் பற்றி மட்டுமே பாசுரங்கள் இயற்றியவர். இது ஒன்றே போதாதா அவர் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் குரு தெய்வத்துக்கு முன்பே அமைகிறார் என்று உணர்த்த? சீரிய ஆச்சாரிய பக்தியை வெளிப்படுத்த?
மதுரகவி ஆழ்வாருக்கு மற்றுமுண்டான பெயர்கள் இன் கவியார், ஆழ்வார்க்கு அடியான்.(''பொன்னியின் செல்வனில்'' வரும் ஆழ்வார்க்கடியான் எனும் திருமலை நம்பி இல்லை)
இந்த ஆழ்வார் பிறந்தது திருக்கோளூர் என்ற கிராமத்தில்.ஆழ்வார் திருநகரி என்கிற வைணவ க்ஷேத்ரத்தின் அருகே உள்ளது.
கி .பி. ஒன்பதாவது நூற்றாண்டில் ஈஸ்வர வருஷம் முதன்மை வாய்ந்த இந்த ஆழ்வார் முதல் மாதமான சித்திரையில் சித்திரை நக்ஷத்திரத்தோடு முத்திரை பதித்தவர். இவரை கருடனின் அம்சமாகவும் -- வைனதேயன் (வினதாவின் மகன்)-- என்று கருதுவதால் தான் 11 பாசுரங்கள் மட்டுமே அளித்து எங்கோ உயரே சென்றுவிட்டார். கருடன் அல்லவா?
இந்த ஆழ்வாரை குமுத கணேசர் என்னும் விஷ்வக்சேனரின் சிஷ்யரே தான் பூமியில் வந்து பிறந்தவர் என்றும் கூறுவார்கள். இதற்கு எது ஆதாரம் என்றெல்லாம் கேட்கவேண்டாம்.
ஆழ்வார்களில் சிறந்தவர் என்ற உண்மை இவர் பதினொரு பாசுரங்களே எழுதி அவை நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் முக்யமாக நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளதிலிருந்தே தெரிய வரும்.
கண்ணினுண் சிறுதாம்பு அந்தாதி வகையைச் சேர்ந்த பாசுரம். இப்பாசுரங்களைப் பாடிய பிறகே திருவாய் மொழி பாசுரங்கள் துவங்கும் வழக்கம் என்பதிலிருந்தே இவற்றின் முக்யத்வம் புரியும்.
நாதமுனிகள் 12000 முறை கண்ணினுட் சிறுதாம்பு பாசுரங்களைப் பாடிய பிறகு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. சாக்ஷாத் நம்மாழ்வாரே அவருக்கு தரிசனம் கொடுத்து 12 ஆழ்வார்களின் பாசுரங்களை, நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை, அருளினார் என்பார்கள்.
மதுரவி, நம்மாழ்வாருக்கும் முன்னே தோன்றியவர். நம்மாழ்வாரின் முதன்மையான சீடராக விளங்கிய இந்த ஆழ்வார் நம்மாழ்வாருடைய ''திருவாய் மொழி''யை வைஷ்ணவ சமுதாயம் அன்றாட வாழ்வில் நித்ய பாராயணம் செய்யும் அளவுக்கு பரவச் செய்தார்.
அந்த காலத்தில் பிரசுர வசதிகள் ஏது ? வாய் மொழியாகவே பல இடங்களுக்கு அது பரவ வேண்டுமானால் எத்தனை பேர் அதைக் கற்று, சென்ற இடமெல்லாம் அனுபவித்துப் பாடி, மற்றோர் பலரும் அதே வண்ணம் செய்ய வைத்திருக்கவேண்டும்!!. இதைத்தான் பிரம்மப் பிரயத்தனம் என்று சொல்கிறோமோ?
பிரபல நாவலாசிரியர் சுஜாதா ஒரு கட்டுரையில் இந்த மதுர கவியை பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.
''பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்று தான். அவை எல்லாம் குருகூர் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் புகழைப் பாடுவதே. இருப்பினும் மதுரகவி வைணவர்களின் மரியாதைக்கு உரியவர் - அவர்தான் நம்மாழ்வாரைக் கண்டுபிடித்துப் பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில்.
நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக்கொண்டு அவர் பிரபந்தத்தைப் பரப்பியவர். நம்மாழ்வாரை உலகுக்குக் காட்டி அவர் பாடல்களை ஓலைப்படுத்தியவர் மதுரகவிகள் என்பதில் ஐயமில்லை.
வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் பெரியவரான நம்மாழ்வாரைத் தன் குருவாகக் கொண்டார். அவருக்கு மற்ற தெய்வங்கள் தேவைப்படவில்லை.''
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே"
என்று எனக்கு வேறு தெய்வமில்லை, குருகூர் சடகோபன்(நம்மாழ்வார்)தான் தெய்வம் என்று அவர் மேல் பதினோரு பாடல்கள் பாடி, ஆழ்வாரின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டவர் மதுரகவியார்.
No comments:
Post a Comment