Wednesday, August 30, 2017

ஒரு பத்து விஷயம் முக்கியம்


ஒரு பத்து விஷயம் முக்கியம்
J.K. SIVAN

வயதானாலே அடிக்கடி உடம்பை பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது. எதனால்? அறுபது தாண்டினால் இந்த நிலை என்று பல பேரை பார்க்கும்போது தெரிகிறது. ''என்ன சார் சந்தோஷம், எப்படி சார் சிரிச்சுண்டு சந்தோஷமாக இருக்கமுடியும்? உடம்பு படுத்தறதே. இப்பவோ எப்பவோ! இந்த கிழம் கட்டையெல்லாம் யார் மதிக்கிறா சொல்லுங்கோ?''

பல பேரிடம் சொல்லியிருக்கிறேன். ''வேண்டாம் சார் இந்தமாதிரி எண்ணங்கள் மனதிலேயே இருக்கக்கூடாது. இது தவறான பாதை. அதில் செல்லவேண்டாம்.

1. வயதானவர்கள் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சுகமாக சந்தோஷமாக வாழ ஒரு பத்து மந்திரங்கள் சொல்கிறேன். ஒவ்வொரு கண வாழ்க்கையும் உற்சாகத்தோடு கழியவேண்டாமா?

2.''நான்ரொம்ப வயதானவன்'' என்ற எண்ணமே வேண்டாம். யாருக்கு வயது கூட வில்லை. எல்லோருக்கும் தான் ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும். வயதை மூன்றாக பிரிக்கலாம். நம்பர் பிரகாரம் போனவருஷம் 78 இப்போ 79 அடுத்து 80. பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கூட்டிக்கொண்டு வருவது.

ரெண்டாவது உடல் ரீதியாக. நமக்கு நேரும் வியாதி, உடலின் ஒத்துழையாமையால் ஆளே மாறிப்போவது. மிக நன்றாக இருந்த ஒரு நண்பராய் ரெண்டு நாள் முன்பு சந்தித்த போது அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தார். சர்க்கரை வியாதி, இதய கோளாறு, புற்றுநோய் சிகிச்சை ஆகியவை உடல் ரீதியாக வயதை கூட்டிக் காட்டும்.

மூன்றாவது மனோரீதியில், தத்துவ உளவியல் வழியில். இது தான் உண்மையில் கவனிக்க வேண்டியது. உங்கள் கையில் தான் இருக்கிறது இது. ''எனக்கு வயதாகிவிட்டது. இனி நான் எதற்கு பிரயோசனம் இல்லை'' என்கிற எண்ணம். ஆளைத் தின்றுவிடும் இது. எனக்கு ஒன்றுமில்லையே. என்றும் போல் தான் இருக்கிறேன் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருந்தால் அது வியாதியை தூர வைக்கும். மேலும் புது தெம்பு கொடுக்கும். எல்லோருடனும் சிரித்து பேசி பழகவேண்டும். ஒதுங்கி மூலையில் உட்காரக்கூடாது. மற்றவருக்கு சுமையாக இருக்க வைக்காது.


2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலை பேணி வளர்க்க வேண்டும். இது இறைவன் வாழும் கோயில் வருஷா வருஷம் செக் அப் செயது கொள்ளவேண்டும். கொடுத்த மருந்துகளை நம்பிக்கையோடு இது என்னை பழையபடி நன்றாக வைக்கப்போகிறது என்று சாப்பிடவேண்டும். உடம்பை தான் வியாதி வந்தால் பணம் செலவு செய்ய இன்ஷூர் செயகிறார்களே. அதன் பயனும் சேரட்டும்.

3. ஒவ்வொரு முதியவரும் தன் வசம் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கையின் ஆதார தேவைகளுக்கு மற்றவர் கையை நம்பி இருப்பது நல்லதல்ல. சிலருக்கு குடும்ப கௌரவ பிரச்னை இதனால் வருகிறது. பணத்தை பாதுகாக்க வேண்டாம். நமது பாதுகாப்புக்காக பணம் வேண்டும். தேவை. குழந்தைகளுக்காக, பேரன் பேத்திகளுக்காக சக்திக்கு மீறி கடன் வாங்கியாவது செலவு செய்வது தவறு.
ஒய்வும் நிதானமும் பொழுது போக்கும் அவசியம்.
இந்த இடத்தில் தான் ஆன்மிகம் கை கொடுக்கும். நல்ல நண்பர்கள், இசையில் ஈடுபாடு, மிதமான உறக்கம். சிரித்து பேச சந்தர்ப்பங்கள் கட்டாயம் உதவும் .

4 நேரத்தை வீணாக்க கூடாது. குதிரையின் சேணத்தை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். குதிரை நாம் சேணத்தை இழுப்பதற்கு ஏற்ப தான் ஓடும். காலம் அவ்வாறு தான் ஓடவேண்டும்.
நேற்று நாளை ரெண்டுமே வேண்டாம். இன்று இப்போது இந்த கணத்தை எப்படி உபயோக்கிறாய் என்பது தான் அத்தியாவசியம். நான் நேரத்தை வீணாக்காமல் வாழ்கிறேன்.

5. மாறுதல் இன்றியமையாதது. ஒருவராலும் இதை மாற்ற முடியாதே. அதற்கு வழி விட்டு அதன் படியே அதை ஏற்றுக்கொள்ள
வேண்டியது தான். மாறுதலை மனம் விரும்பி வரவேற்றால் நிம்மதியாவது கிடைக்கும்.அடுத்த தலைமுறைகளோடு சேர்ந்து அதை அனுபவிப்போம்.

6 .பலனை எதிர்பார்த்து தான் எதையுமே செயகிறோமே. அந்த திருப்தி ஆத்ம திருப்தியாக பரிமளிக்கட்டும். மற்றவர்க்கு உதவி, நல்லதை செய்து மன நிறைவு பெறுவோம். எதிர்பார்ப்பு இப்படி இருக்கட்டும்.

7. மறப்போம் மன்னிப்போம் என்பது மிக உயர்ந்த கோட்பாடு. மற்றவர் தவறை சுட்டிக் காட்டாதே. கோபம் தாபம் சண்டாளம் என்பார்கள்.கோபம் ஆங்காரம், வெறுப்பு இதற்கு இடம் கொடுத்தால் டாக்டர் பீஸ் தான் உயரும். BP எகிறும்.

8. எல்லாமே ஏதோ ஒரு காரணத்தாலேயே நிகழ்கிறது என்ற மனப்பான்மை அமைதியை நிரந்தரமாக்கும். இதை தான் பல பேர் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்பது.

9. உலகத்தில் யார் மட்டம் யார் ஒஸ்தி? அவரவர் வழியில் போக்கில் அவரவர் செய்வது சரி. இதில் உனது அபிப்ராயம் விருப்பம் எங்கிருக்கிறது?

10. கடோசி கடோசியாக ஒன்று. மரணத்தை பற்றிய பயம் துளியும் நெஞ்சில் இருக்க கூடாது. வரும்போது வரட்டும். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது என்பது தான் தெரியுமே. எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் தானே போகவேண்டும் . முன் கூட்டியே சொல்ல நாம் என்ன முனிவர்களா மஹான்களா? இதில் மட்டும் தான் பினாமி கிடையாது. உனக்காக மற்றவனை அனுப்ப முடியாது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...