Tuesday, August 8, 2017

எப்போ பிறந்தார்??


எப்போ பிறந்தார்?? J.K. SIVAN

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நல்லவேளை ராமானுஜர் பற்றிய கால நேரங்கள் கிட்டத்தட்ட மாறுபாடு இன்றி கிடைத்திருக்கிறது. ஆனால் சங்கரரை பற்றி அவ்வாறு சொல்வதற்கில்லையே. இதற்கு ஒரு முக்கிய காரணம் பண்டை காலத்தில் எழுதியவர்கள் தங்கள் இயற்பெயர்களை குறிப்பிடும் வழக்கம் மேற்கொள்ளவில்லை. அகஸ்தியர், அவ்வையார், வள்ளுவர், விஸ்வாமித்ரர் -- இவர்கள் ஒருவருக்கு மேல் பலர் இருந்திருக்கிறார்கள். யார் நாம் தேடுபவர்கள்?? அவர்கள் உண்மையில் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள். பல சித்தர்கள் ஆழ்வார்கள் ராஜாக்கள் வாழ்க்கை தலையை சுற்றுகிறது சரியானவர்களைத் தேடி. இதை எழுதும் வரை என்னால் சிவ வாக்கியர் தான் திருமழிசை ஆழ்வார் என்று ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வட தென் துருவங்களையா முடிச்சுப்போட முடியும்.

ஆதி சங்கரரின் குரு கோவிந்த பகவத் பாதர் விக்ரமாதித்தன் காலத்தவர் என்று அறியும்போது ரெண்டு விக்ரமாதித்யர்கள் கண்ணில் படுகிறார்கள். சந்திரகுப்த மௌரிய வம்ச விக்ரமாதித்தனா அல்லது சாளுக்கிய விக்ரமாதித்யனா? ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லையே.

ஆதி சங்கரரின் ஒரு சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தில் திருஞான சம்பந்தரைப் பற்றி வருகிறது. ''த்ராவிட சிசு'' என்கிறார். அதனால் ஒன்று சம்பந்தர் காலமோ அல்லது அவருக்கு அப்புறமோ தான் சங்கரர் வாழ்ந்திருக்கவேண்டும்.
அதே சமயம் குமாரில பட்டர் பற்றியும் மண்டன மிஸ்ரர் பற்றியும் சொல்லும்போது காலம் தாளம் போடுகிறதே.

குமாரில பட்டர் கி.பி. 7ம் நூற்றாண்டு. மண்டனர் 8ம் நூற்றாண்டு. சம்பந்தரின் காலம் 7ம் நூற்றாண்டு. இடைவெளி??
அது சரி சம்பந்தர் கலாமே குழப்புகிறதே. அப்பர் எனும் திருநாவுக்கரசர் சம்பந்தரை சந்தித்திருக்கிறார் என்று அறிகிறோம். அப்பர் ராஜ ராஜ சோழன் காலத்துக் காரர் என்றால் சோழன் 985-1014 அதாவது 11வது நூற்றாண்டு ஆரம்பம். போதுமா கால வித்தியாசம் ? இந்த ராஜ ராஜ சோழன் தானே நம்பி ஆண்டார் நம்பி மூலமாக அப்பர் ஓலைச்சுவடிகளை வெளிக்கொண்டு வந்தவன்? அப்போது அப்பர் ராஜாவுக்கு முந்தைய காலத்தவர் அல்லவா? அமரர் கல்கி பொன்னியின் செல்வன் எனும் அற்புத படைப்பில் திருநாவுக்கரசை குந்தவை எனும் ராஜராஜ சோழன் தமக்கை தரிசனம் செய்ததாக அல்லவோ படித்த ஞாபகம்?

ஆதி சங்கரர் அதனால் தானோ என்னவோ தன்னுடை வாழ்க்கை குறிப்பை எங்கும் கொடுக்கவில்லை. தான் கோவிந்த பகவத்பாத சிஷ்யன் என்று மட்டும் நிறுத்திக்கொண்டார்.

கி.மு . கி.பி களால் வந்த வினையோ இது? எதற்கு எவர் காலத்தையோ அளவுகோலாக கொண்டு நமது மஹான்களின் காலத்தை கணிக்கவேண்டும். வேறு ஏதேனும் ஆதாரம் தென்படவில்லையா. கி.பி 788-788–820 CE: சங்கரர் காலம் 32வருஷங்கள் மட்டுமே என்று அறிகிறோம். சிருங்கேரி சாரதா பீட தஸ்தாவேஜ்கள் இதை சொல்கிறது. ஆச்சார்யர்கள் வம்சாவளி அவர்கள் தான் ஏதோ சில ஏடுகள் வைத்திருக்கிறார்கள். மூன்றாவது ஆச்சார்யரிலிருந்து கணக்கு இருக்கிறதாம். நூல் பிடித்துக் கொண்டே போனால் ஆதி சங்கரரின் கி.பி. 8ம் நூற்றாண்டுவரை செல்ல முடிகிறது. விக்ரமாதித்ய ராஜாவின் 14வது அரசாட்சி ஆண்டில் பிறந்தார் என்கிறது. எந்த விக்ரமாதித்யன்? 2ம் சந்திரகுப்தன் 4வது நூற்றாண்டு ஆளாச்சே. (4th century CE),

இல்லை இல்லை. அவன் சாளுக்கியன் தான். பாதாமியஹே தலைநகராக கொண்டவன். (733–746 CE), பல அறிஞர்கள் ஆமாம் என்று தலை ஆட்டுகிறார்கள்.(Max Müller, Macdonnel, Pathok, Deussen and Radhakrishnan)

ஆனால் வேறு சில ஆதாரங்கள் உண்டாம். (509–477 BCE:) இதெல்லாம் துவாரகா கோவர்தனம், காஞ்சி சங்கர மடங்கள் இதை சொல்கிறதாம். சிருங்கேரி சொல்வது தான் ஏற்புடையது என்று கணிப்பு.

அது சரி புத்தர் முந்தைய காலத்தவராச்சே. ஆதி சங்கரர் கவுதம புத்தரின் பிற்காலத்தவர் ஒரு பிக்ஷுவான தர்மகீர்த்தி பற்றி சங்கரர் குறிப்பிடுகிறாரே. இந்த தர்மம் கீர்த்தி தானே சீனாக்காரர் ஹ்யுவான் சுவாங் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கி.பி 7ம் நூற்றாண்டு அல்லவோ? தவிர ஆதிசங்கரரின் காலத்தவர் என்று சொல்லப்படும் குமாரில பட்டர் 8ம் நூற்றாண்டுக்காரராச்சே. சிருங்கேரி தவிர மற்ற மடத்து விஷயங்கள் இதில் வேறுபடுகிறதே.

குறுக்கே ஆனந்தகிரி என்பவர் சங்கரரின் 32 வருஷ காலம் சிதம்பரத்தில் 44–12 BCE என்பதை என்ன சொல்வது? கி.மு. 6ஆவது நூற்றாண்டு அல்லவோ இது? ஆர். ஜி . பண்டர்கார் அதெல்லாம் இல்லை சங்கர் பிறந்தது கி.பி. 680 என்று கூட இருந்தவர் போல் சொல்கிறார்.

தோடகாச்சார்யார் சங்கரரின் சீடர். அவர் கி.பி. 8வது நூற்றாண்டு. அவர் தான் ஆதி சங்கரர் நிறுவிய பத்திரிநாத் அருகே உள்ள ஜோதிர்மட முதல் பீடாதிபதி. இந்த தோடகரே திரிஸூரில் வடக்கே மடம் என்பதை ஸ்தாபித்தவர்.

முடிவாக ஒரு சின்ன விஷயம். சங்கரர் எங்கே எப்போது பிறந்தால் என்ன. சங்கரர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ரசித்து ருசித்து நல்ல விஷயங்களை அனுபவிப்போம். பாவம் சரித்திரக்காரர்கள் ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் படிக்காமல் எதெதையோ தேடி பிடித்து படிக்கிறார்கள். நம் தலையை சுற்ற வைக்கிறார்களே!



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...