Saturday, August 19, 2017

இதோ ஒரு ஆதி ரங்கம் !!



யாத்ரா விபரம்   -    


                               



இதோ ஒரு ஆதி ரங்கம் !!

சென்ற கட்டுரையில்  வேதாரண்யத்திலிருந்து திருத்துறை பூண்டி சென்றோம் என்று எழுதியபோது நடுவே  ஒரு அற்புத பெயர் கொண்ட ஊர் வந்தது என்று சொன்னேனே. அது ஆதிரங்கம்.   ஸ்ரீ ரங்கம் எல்லோருக்கும் தெரியும். விழுப்புரத்தில் இன்னொரு பழம்பெரும் அரங்கநாதர் ஆதிரங்கம் என்ற ஸ்தலத்தில் இருக்கிறார்.  அதற்கு சென்று அந்த அழகிய ரங்கநாதனை சேவித்திருக்கிறேன்.  

திருத்துறைபூண்டி செல்லும் பாதையில் அதே பெயர் கொண்ட ஆதிரங்கம் என்ற கிராமம் வழியாக சென்றபோது வண்டியை நிறுத்தினோம் .  இந்த ஆதிரங்கம்  வேதாரண்யம்  திருத்துறைப்பூண்டி சாலையில்  வடமலை என்ற ஊருக்கு அடுத்த கட்டிமேடு பக்கத்தில் இருக்கிறது.  ஊரில் நுழைந்து விசாரித்து  அங்கே உள்ள  ரங்கநாதர் பெருமாள் கோவிலுக்கு சென்றபோது நடுப்பகல் பன்னிரண்டு மணி. கோவில் என்னவோ திறந்திருந்தது. உள்ளே எவரையுமே காணோம்.  அரங்கன்  சந்நிதி திரைபோட்டு பூட்டியிருந்தது.  அந்த சிறிய ஊரில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ கட்டிய கோவிலாகத்தான் அதை அனுமானிக்க முடிந்தது.

கோவில் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தில்  கோட்டு  சூட்டு போட்ட ஒருவர் சப்பணம் கட்டி  கைகூப்பி அமர்ந்திருக்க மற்ற சில உறவினர்கள் நின்றவண்ணம் கைகூப்பி நிற்பது போல் சில உருவ பொம்மைகள் அங்கே கண்டேன். அந்த கோவிலுக்கு நிர்மாணம் செய்ய உதவிய நல்லிதயங்களாக இருக்க வேண்டும். சமீப காலத்தில் கும்பாபிஷேகம் பண்ணிய அறிகுறிகள் காணப்பட்டது.  ஒரு சில சந்நிதிகள் பார்க்க முடிந்தது.  மனதை கவரும் காளிங்க நடனம் ஆடும் கண்ணன்  அழகாக இருந்தான்.  படம் பிடித்தேன். அரங்கநாதர் படம் ஒரு இடத்தில் கிடைத்தது. அதையும் படம் பிடித்தேன். அமைதியாக  ஒரு  சிறு  சந்நிதியில் ஆண்டாள் கண்ணைப்பறித்தாள்.  சூடிக்கொடுத்தவளையும்  தரிசித்துவிட்டு,   நரசிம்மர் சக்கரத்தாழவார் சந்நிதி சுற்றி வருவதற்குள் உள்ளங்கால்  சுட்ட அப்பளம் ஆகி விட்டது.

ஒருவேளை  இது ஒருகாலத்தில் ஏதோ பழங்கால கோவிலோ. அதை புணருத்தாரணம் பண்ணி இருக்கிறார்களோ?  அல்லது யாரோ புதிதாக பல ஆண்டுகளுக்கு முன் கட்டியதா? 

அய்யா கோவில் கட்டியவரே, அதை நிர்வாகம் பண்ணுபவரே,  அந்த ஊரில் வாழும் பிரமுகர்களே , உங்களில்  யாருக்காவது  முக நூல் என்று ஒன்று இருப்பது தெரியாதோ?  அதில் உங்கள் கோவிலை பற்றி படத்தோடு போட்டால் என்னை போன்று எங்கிருந்தோ கோவில் பசியோடு வருபவன்   கண்ணால் சாப்பிட வழி உண்டே!   இந்த ''கண்ண தானம்''   செய்யக்கூடாதா?  இதோ என்னால் ஆனதை நான் உங்களுக்காக பல ஆன்மீக அன்பர்கள் பார்த்து மகிழ உங்கள் ஊர் கோவிலை பற்றி  எழுதிவிட்டேனே. 

ஆனால்  முழு  விபரம் தெரியாமல் அரை மனதோடு நான் செய்த  காரியம் அல்லவா இது?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...