Sunday, August 13, 2017

நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்




நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்....
J.K. SIVAN

ரோஹிணி பாடும்மா

ஒன்பது வயது ரோஹிணி ஒருவாரமாக சரோஜினி டீச்சர் சொல்லிக்கொடுத்த பாட்டை மனப்பாடம் செய்து மற்ற பெண்கள் ஆட , பாடுகிறாள்

''ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று.....ஆடுவோம்...''

நிறைய பிள்ளைகள் மகிழ்ச்சியாக சீருடை அணிந்து நிற்க, பெற்றோர்கள் திரள் திரளாக கூடி ஒருவரை ஒருவர் அன்போடு அணைத்து ஆனந்தத்தை இனிப்புகள் கொடுத்து அனுபவிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த சந்தோஷம் பொங்குகிறது.

கோபால நாயுடு தலைமை ஆசிரியர் கொடியேற்றி விட்டார். ஒரே கை தட்டல். கோலாகலம். சந்தோஷம் பொங்குகிறது ஒவ்வொரு முகத்திலும்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு பெண்களுக்கு நாயுடு என்றால் உயிர். அடிக்கவே மாட்டார். திட்டமாட்டார். இரவு பகல் காசு வாங்காமல் அனைவருக்கும் பாடங்கள் எத்தனை தடவை கேட்டாலும் சொல்லிக்கொடுப்பவர். கல்வி சொல்லித்தர, டியூஷன் என்பது எப்போதும் எனக்கு தெரிந்து இலவசம் தான் என்று சொல்பவர். செய்பவர்.

பள்ளியில் மரத்தடியில் இதோ நாயுடு பேசுகிறார். காதில் விழுகிறதா?

''நமது நாட்டை சுரண்டிய வெள்ளையனை வெளியேற்றி விட்டோம். கெட்டவர்களை அயோக்கியர்களை வெளியேற்றி விட்டோம். நமது தாய் நாடு சுபிட்சமடைந்துவிட்டது. நம்மை நாமே ஆள்கிறோம். ஒரு குடைக்கீழ் 70 வருஷங்களாக நமது தலைவர்கள் நம்மை ஆள்கிறார்கள். நமது நாணயம் மதிப்பில் உயர்ந்து விட்டது என்று நான் சொல்லும்போது நாணயம் என்று காசு பற்றி மட்டும் சொல்லவில்லை. நமது மதிப்பு மரியாதை, நன்னடத்தை, நல்ல பெயர் பற்றி தான் சொல்கிறேன்

பாருக்குள்ளே நல்ல நாடு நமது பாரத நாடு. உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட தேசம். இங்கே வேலை வாய்ப்பு அதிகம் இருந்த போதிலும் , எல்லோருக்கும் ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் ''மத சார்பற்று'' எல்லோரும் எல்லோரையும் ஆண்ட போதிலும், ஏனோ நிறைய பேர் அமேரிக்கா மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் பறந்து கொண்டே இருக்கிறார்கள். போனவர்கள் திரும்புவதில்லை. அங்கேயே ஐக்கியமாக துடிக்கிறார்கள். ஏன்?

இது தவறு.அவசியமில்லாதது. இங்கே தான் நாட்டுப்பற்று கொண்டவர்கள்நாம் எல்லோரும் நிரந்தரமாக இருக்கிறோம் . பண வெறி, நிற வெறி, பேராசை, சுயநலம், சொத்து சேமிப்பது, மறைப்பது என்ற ஒரு வெளிநாட்டு கெட்ட பழக்கமும் இல்லாமல் நாம் ஜாக்கிரதையாக இந்த எழுவது ஆண்டு மட்டும் இல்லை, இதற்கு முன்னரும் வெளிநாட்டவர் நம்மை ஆள்வதற்கு முன்னும் இருப்பவர்கள். நம்மைப்போல் எந்த தேசத்திலும் நாட்டுப்பற்று பரந்த மனம் கொண்டவர்கள், எல்லா மொழிப்பற்றும் உள்ள ஒரே மக்கள் கிடையாது.

கட்சிகள், பத்திரிகைகள் மீடியாக்கள் எதுவுமே ஒரே மாதிரியாக நல்ல விஷயங்களையே சொல்கிறது என்றால் அது நமது நாட்டில் மட்டுமே நடக்கும் அதிசயம். இதற்கு என்ன காரணம்?.

நாம் எல்லோரும் உடன் பிறவா, உடன் பிறந்த, சகோதர சகோதரிகள், ஒரே குடும்பம் நாம் என்ற உணர்ச்சி நம் அனைவருக்குள்ளும் இருப்பதால் தானே.

வரி குதிரை ஒன்றுக்கு தான் நமது ஊரில் வரி ஜாஸ்தி. நமக்கு எந்த வரியும் , ஏன் நிறைய பேருக்கு முகவரி கூட கிடையாது. நமது நாட்டில் இருக்கும் ஒரே வரி ஜனவரி, பெப்ருவரி தான். பொய் தெரியாத, பேசாத மக்கள் இந்தியர்கள் ஒருவரே இந்த பரந்த உலகில்.

விலை வாசி வெள்ளைக்காரன் காலத்தில் இருந்ததை விட இப்போது கம்மி. கத்திரிக்காய் வெண்டைக்காய், தக்காளிக்கு என்ன அறிவா இருக்கிறது? பைத்தியக்கார தனமாக தானாக தனது விலையை ஏற்றி்க்கொள்கிறது. தேங்காய் இனி நிறுத்துக் கொடுத்தால் தான் அதற்கும் திருப்தி ஏற்படும். மற்ற காய்களை விட அது எந்த வகையில் மட்டம். எல்லாவற்றையும் நிறுத்துக்கொடுக்கும்போது அது என்ன பாவம் செய்தது என்ற தாராள மனம் நமக்கில்லையா? ஒவ்வொருவரும் மற்றவருக்காக பாடுபடும் தேசம், எதையும் மற்றவர்களோடு பகிர்ந்து சரி நிகர் சமானமாக வாழும் நாடு நமது தேசம்.

எல்லா நதிகளும் இணைக்கப்பட்டிருப்பது இங்கே மட்டுமே. ,நதி காற்று, வெயில், வெளிச்சம் எல்லாருக்கும் பொது என்று நாம் மட்டுமே அறிவோம்நாலாபக்கமும் ஒரே இனமாக, ஒரே எண்ணமாக இருக்கும் மக்கள் நாம் தானே.

கலப்படம் என்ற வார்த்தை நமது நாட்டில் எவரும் அறியாதது. எவருக்கும் தெரியாதது. தெரிந்தது நாம் உண்ணும் பப்படம் தான். யார் யாரோ சொல்வதை நம்பாதீர்கள். நமது சுதந்திரத்தை இகழ்பவர்கள் ஒருவேளை அப்படி சொல்லலாம்.

எங்கும் எதிலும் நேர்மை, நியாயம், கிரமம் , நிறைந்த ஒரே தேசம் பாரத தேசம். லஞ்சம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரே மக்கள் நாம். பாரத சமுதாயம். நமது தலைவர்கள் அனைவருமே அடிமட்ட கவுன்சிலர்களிலிருந்து ஜனாதிபதி வரை பதவி மோகம் அற்ற பொது நலம் மட்டுமே மனதில் நிரம்பிய சுத்த ஆத்மாக்கள். அவர்கள்

வேட்டி சட்டை போல இல்லாமல் கையோ, மனமோ கரை இல்லாதது. சிறை சென்றாலும் மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்ட மகாத்மாக்கள். யாரோ ஒருவர் மட்டும் மஹாத்மா என்று பெயர் கொண்டது தவறு. அனைவருமே மகாத்மாக்கள் தான் இங்கே.

கள்ளர் பயம் காவலர் பயம் எதுவும் இங்கே இல்லை. பள்ளியில் கல்லூரியில், கோயிலில் கூட கட்டணமே கிடையாது. வரிசையாக அவரவர் தனக்கு தேவையானதை எவர் தயவும் இன்றி பெறுவது நமது நாட்டில் மட்டும் தான் என்று பல வெளிநாடுகள் வாய் ஓயாமல் பேசுகிறதும், எழுதுகிறதும் எல்லோருக்கும் தெரிந்த பழைய சமாச்சாரம்.

பெண்களுக்கு ஆண்களுக்கு என்று பாகுபாடு இல்லாத நேர்மையான சந்தர்ப்பங்கள் அளிக்கும் தேசம் பாரத தேசம்.
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று ஒரு தலைப்பாகை காரரை பாட வைத்தோமே. ஏன் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

ரூபாய் நோட்டில் உள்ள காந்திக்கு தான் தெரியும். இந்த நாடு ஒன்றில் தான் உழைக்காமல் எவன் கையிலும் தான் போகவில்லை என்று. கொடுப்பினை யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பெறுகிறார்கள். காகிதம் கைமாறினால் என்ன காணாமல் போனால் என்ன. இந்தியா முழுதும் எங்கும் ஒரே விலை, ஒரே ஞாயம், ஒரே அளவு. ஒரே நேர்மையான புன்னகையோடு அளிக்கும் சேவை.

எது வேகமாக நடக்கவேண்டுமோ அது ஆமை வேகத்தில் நகரட்டுமே. வேகம் விவேகம் அல்ல என்கிறார்களே. . விலை வாசி மட்டும் எல்லாத்துக்கும் சேர்த்து கட கடவென்று வேகமாக உயர்கிறது. அதற்கு விவேகமே தெரியவில்லை. நாம் கடைப் பிடிப்பது தானத்தில் சிறந்த நிதானம். சன்னிதானம்.

''எங்கும் அச்சம் எதிலும் அச்சம், எதற்கெடுத்தாலும் வாடுபவன் தமிழன் இல்லை. பாலும் தேனும் நீரைப்போல் எங்கும் நிறைந்தது நமது செந்தமிழ் நாடு. இதை கேட்கும்போது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..''

ஜாதிகள் இல்லையடி பாப்பா.. ஆனால் வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு ஓடு அதன் மேல் என்று ஒன்று தான் நமக்கு தெரிந்தது. முன்னோர்களின் காலத்தை மதிக்கவேண்டும் என்ற எண்ணம் நமது பாரம்பரியம். தேவையற்று உழைத்து ஓடாய் தேய மாட்டோம். திண்ணைகள் அதற்கு தான் நமது முன்னோர் ஒவ்வொரு வீட்டிலும் கட்டி வைத்தார்கள் என்பது ஏனோ வெள்ளைக்காரர்களுக்கு புரியவில்லை?

எல்லாரும் இந்நாட்டு மன்னர்.அது வாஸ்தவ
மான பேச்சு....''

நாயுடு கரகோஷம் பெற்றார். சுற்றி முற்றி எங்கும் பார்த்தார்

கடிகாரம் சுவரில் ஆறு அடித்தது. .

''டேய் எழுந்திரு ஒரு நாளு கிழமை இல்லை. எப்போபார்த்தாலும் ஒரே தூக்கம்... எழுந்திரு மணி காலை ஆறு ஆயிட்டது. குளிச்சிட்டு ஓடு. பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர் நீயே இப்படி இருந்தா மத்த பிள்ளைங்க டீச்சருங்க எப்படி இருப்பாங்க? கொடி ஏத்தவாணாம்?

நாயுடுவின் வயதான தாய் அவரை தட்டி எழுப்பினவுடன் தான் ''அடாடா இதெல்லாம் நனவில்லையா, வெறும் கனவா?????
என்று தலை சொரிந்துகொண்டு எழுந்து கனவுக்கு தலை முழுகுவதற்காக ஓடினார்நாயுடு ...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...