யாத்ரா விபரம் - J.K. SIVAN
பிறவி மருந்தீஸ்வரர்
சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் சென்றிருப்பீர்கள். நோய்க்கு மருந்தான சிவனை நீங்கள் வைத்யநாதனாக அறிவீர்கள். உடல் நோய்களை விட மிகப் பெரிய நோயாக உள்ளது இந்த அடுத்து அடுத்து நாம் மேற்கொள்ளும் பிறவி த்துயர் எனும் பெரும் பிணி. இந்த நோயிலிருந்து நம்மை மீட்க மருந்தாக ஒருவர் திருத்துறை பூண்டியில் இருக்கிறார். அவரே பிறவி மருந்தீஸ்வரர். பவ ஒளஷதீஸ்வரர் என்று சமஸ்க்ரித பெயர் கொண்ட ஈஸ்வரன். .அம்பாள் பிரஹந்நாயகி எனும் பெரிய நாயகி.கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள்.
வேதாரண்யத்திலிருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த பழம் பெரும் சிவ க்ஷேத்ரம். வழியெல்லாம் பசுமை போர்த்த கிராமங்கள். கோடியக்கரை சாலை தூக்கி குலுக்கி போட்டு எலும்பை எண்ண தொந்தரவு கொடுக்கவில்லை. ஒரு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. வடபாதி , தென்பாதி, ஆதிரங்கம் தகட்டூர் என்று பல ஊர்கள். ஆதிரங்கம் கேள்விப்பட்ட ஒரு பெயர் ஆனால் விழுப்புரம் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஆதிரங்கம் இது இல்லை. அங்கே சென்றதை பற்றி அடுத்த விபரத்தில் எழுதுகிறேன்.
திருத்துறை பூண்டி ஆலயம் ராமர் காலத்து கோவில். ஆயிரக்கணக்கான வயது கொண்டது. மேற்கு நோக்கிய சிவன். தாருகா வன ரிஷிகளின் தவ சக்தி ஆணவத்தை அடக்க அவர்கள் உருவாக்கி அனுப்பிய அதிக சக்தி வாய்ந்த யானையை கொன்று அவர்கள் ஆணவத்தை அடக்கியதால் கஜசம்ஹார மூர்த்தி. அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். HEALTH IS WEALTH . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும்.
திருத்துறை பூண்டி சிவ க்ஷேத்திரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு. சிலவற்றை சொல்கிறேன். வில்வாரண்யம், பிரம்மபுரி,
நவ தீர்த்த புரம், ஜல்லிகாரண்யம், நவகிரஹ புரம். வில்வம் தான் ஸ்தல விருக்ஷம். ஐந்து நிலை ராஜகோபுரம்.
இங்கு நடராஜர் ஆடியது சந்த்ரத சூடாமணி தாண்டவம்.
இந்த ஊர் புராணம் ஒரு சில வரிகளில் சொல்கிறேன். ஜல்லிகை ஒரு ராக்ஷஸி. சிவ பக்தியில் சிறந்தவள். பசித்தால் மனிதனை உண்ணும், விருபாட்சன் அவளது ராக்ஷஸ கணவன். ஒருமுறை, தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்த ஒரு அந்தண சிறுவனை விருபாட்சன், காலை ஆகாரமாக விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். கேட்கவில்லை விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான்.ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வேண்டி உயிர்ப்பிச்சை கேட்டாள் . ''அவன் அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணம் கொடுத்து மீண்டும் பிறக்கச் செய். இல்லையேல், பிறவியிலிருந்தே விடுதலை கொடு''
பெரியநாயகி அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அவன் வயிற்றில் கிடந்த அந்தணச்சிறுவனும் உயிர் பெற்றான்.சிவபக்தர்களாக தொண்டு செயது வீடு பேறு பெற்று பிறவாவரம் பெற்றார்கள்.
இங்கும் அழகிய மரகத லிங்கம் இங்கு தியாகேசராக பூஜிக்கப்பட்டு வருகிறது. பல லக்ஷம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பச்சை க்கல் கையடக்க லிங்கம். 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.
போன்: ஹரிஹரன்என்கிற இளம் வயது அர்ச்சகர், வயதான அப்பா மஹாதேவ குருக்களுக்கு உதவி செய்கிறார். அன்பாக பழகுகிறார். நல்ல வைதீக குடும்பம் தலைமுறை தலைமுறையாக சிவத்தொண்டு. அணுகினால் வேண்டிய உதவி செய்பவர் +91-9449722844. திருத்துறை பூண்டியில் ஒரு சிறிய மெஸ். நல்ல சாப்பாடு கிடைக்கிறது.
கொள்ளிக்காடு கேள்விப்பட்டதுண்டா?. அங்கு போய் வந்ததையும் அப்புறம் சொல்கிறேன்.
No comments:
Post a Comment