அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! - 1.
சென்னையிலிருந்து சற்றே தூரத்தில் ஒரு ஊர் பூந்தமல்லி. இது அதன் இயற் பெயர் இல்லை. ஹமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி (ஒரு சிலர் இதை மறுபடியும் ஆங்கிலத்தில் ''Barber's bridge என மொழி பெயர்ப்பு வேறு!!) ஆனது போல்,''பூவிருந்த வல்லி'' பழைய அழகிய செடி கொடி மலிந்து கம்மென்ற மணமிழந்து தனது பேரையும் அடையாளத்தையும் கூட இழந்து விட்டது.
இதன் அருகே மற்றொரு அருமையான புனித கிராமம் திருமழிசை. திருமழிசை பூந்தமல்லி தேசிய சாலையில் திடீரென்று வலக்கை பக்கம் திரும்பும். ஊசி குத்த இடம் இல்லாமல் ஒரு பெரிய தொழில் பேட்டையாகவும் திருவள்ளூர்,திருத்தணி போகும் வேகப்பாதையாகவும் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆங்கிலத்தில் ''திருமுஷி'' என்று இன்னும் வெள்ளைக்காரன் வைத்த பெயர் தப்பாமல் எழுதுகிறோம்..ஆனால் இதெல்லாம் அதற்கு பெருமை சேர்க்காது. இந்த திருமுஷி ஒருகாலத்தில் திருமழிசைஆக இருந்தது..
7ம் நூற்றாண்டில் இந்த கிராமம் வெறும் மூங்கில் காடாக இருந்த சமயம். ஒரு நாள் பார்கவ ரிஷி என்ற ஒரு பக்தர் கனகாங்கி என்னும் தனது பத்னி யோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது சொல்கிறோமே ''ஸ்டில் பார்ன்'' என்று அது போல்) பிறந்த ஒரு சிசு.
''.இறைவா, இதுவும் உன் செயலாலே என்றால் அப்படியே ஆட்டும்".
ஒரு மூங்கில் புதரில் அந்த சிசு கை விடப்பட்டது. இதயம் வெடித்து சிதற பெற்றவர்கள் பார்கவ ரிஷியும் கனகாங்கியும் இனி அந்த குழந்தை வைகுண்டம் செல்லட்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கே காட்டில் அதை விட்டு விட்டு கண்ணில் நீர் மல்க மனம் உடைந்து திரும்பி சென்றனர்.
நாராயணன் சித்தம் வேறாக இருந்தது அவர்களுக்கு தெரியாதே! எம்பெருமானின் கருணையை வார்த்தைகளில் ரொப்ப முடியுமா? தனித்து விடப்பட்ட "அது", அந்த குறைப் பிரசவ சிசு, சில மணி நேரத்திலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக அழுதது.
காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தை செல்வமில்லாத இரு வயதான காட்டுவாசிகளான திருவாளன், பங்கயற்செல்வி ஆகிய தம்பதியர் அந்தப் பக்கமாக அப்போது தான் வரவேண்டுமா? அவர்கள் காதில் மூங்கில் காட்டில் ஒரு குழந்தை அழும் ஒலி ஸ்பஷ்டமாக கேட்கவேண்டுமா? கேட்டதும் ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டுமா? யார் இந்த குழந்தையை இங்கே விட்டு விட்டு சென்றது என்று தேட வேண்டுமா?
யாரும் உரிமை கொள்ள இல்லையே என்று வருந்தவேண்டுமா? அவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லாமல் இப்படி திடீரென்று ஒரு அபூர்வ குழந்தை கிடைக்கவேண்டுமா?
இதற்கெல்லாம் ஒரே பதில் எல்லாம் சர்வேசன் நாராயணன் செயல்.அவனது திருவுளம்.
காட்டுவாசிகள் அந்த குழந்தையை தங்கள் குடிசைக்கு எடுத்து சென்றனர்.. திருமழிசையில் கிடைத்ததால் அதற்கு திருமழிசையான் என்றே பெயரிட்டனர். மிக்க ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினர்
''ஐயோ இதென்ன சோதனை? குழந்தை பால் கூட பருக மறுக்கிறதே. ஆகாரமே உட்கொள்ளாததால் அவர்களுக்கு கவலை வந்துவிட்டது.
"ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும் என அந்த கிழ தம்பதியர் அந்த ஊர் பெருமாளையே தஞ்சமென வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டு மீதியை அவர்களே குடிக்க வைத்தது.
தொடர்ந்து இன்னொரு ஆச்சர்யம்! குழந்தை மறுத்து அவர்களுக்கு அளித்த பாலை அருந்தியவுடன் அந்த கிழ வேடுவர்கள் இருவரும் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து அவனுக்கு கணிக்கண்ணன் என்று பெயரிட்டு அவன் திருமழிசையானுடன் இளைய சகோதரனாக வளர்ந்தான் என்று ஒருவரியில் கதையை சுருக்கிவிட்டேன்.
திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்று சொல்வதுண்டு. நிறைய சிவ வாக்கியர் பாடல்கள் உங்களுக்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மிகவும் சக்திவாய்ந்த அர்த்த முள்ளவை அவை. எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்தவை. மீண்டும் ஒரு சில பாடல்களை மட்டும் அலசுவோம். எழுத்திலே பல 'டன்' சுமையும் வலிமையையும் கொண்டவை.
''இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்ற தொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்று மல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே''.
(அவன் இல்லாதது போல் இருக்கிறான். இல்லை என்று சொல்வதனால் இல்லாதவனாகி விடுவானா? எல்லாமாக இருக்கும் ஒன்று என்றாலும் இல்லவே இல்லை என்றாலும் இரண்டும் அவனே என்று முடிவாக தெரிந்தவர்கள் ஜனனம் மரணம் சுழற்சி முடிந்து இனி பிறவாவரம் பெற்றவர் என்கிறார் சிவ வாக்யர் )
''தில்லைநாயகன் னவன் திருவரங் கனும் அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
(அரியும் அரனும் ஒண்ணு.இந்த புவனமே அவன். எல்லாமும் தானான ஒருவன். பல்லும் நாக்கும் புரட்டிப் பேசும் மனிதர்களே , கபர்தார்!! நீங்கள் யாரேனும் அந்த அரியும் அறனும் வேறு என்று பங்கு போட்டு பேசி மகிழ்வதாக இருந்தால் , ஞாபகம் இருக்கட்டும் வாய் புழுத்து விடும். அப்புறம் அபோல்லோ உங்களை விழுங்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்.)
திருமழிசை ஆழ்வார் தொடர்கிறார்
No comments:
Post a Comment