Wednesday, August 16, 2017

திருமறைக்காட்டீஸ்வரர்








யாத்ரா விபரம் J.K. SIVAN
திருமறைக்காட்டீஸ்வரர்

சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்தில் தரிசித்தது பற்றி ஏற்கனவே எழுதினேன் அல்லவா. மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம். வேதாரண்யம் என்ற சமஸ்க்ரித வார்த்தை தமிழில் திருமறைக்காடு. வேதாசலம் என்ற அறிஞர் மறைமலை அடிகள் ஆன மாதிரி.

நாகபட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி வழியாக நல்ல சாலை செல்கிறது. அதில் 48 கி.மீ. பிரயாணம் செய்தால் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் வேதாரண்யம் அடையலாம்.

தேவார பாடல் பெற்ற இந்த ஸ்தலம். 7ம் நூற்றாண்டை சேர்ந்தது. கிழக்கு பார்த்த ஐந்து நிலை கோபுரம். ஆதித்த சோழன் திருப்புறம்பியம் யுத்தத்தில் வெற்றி பெற்றதற்கு ஞாபகமாக கட்டிய கோவில். வேதாரண்யேஸ்வரர் ஸ்வயம்பு லிங்கம். வேதவனேசர், மறைக்காட்டீசர், வேதாரண்யேஸ்வரர், வேதாரண்ய நாதர் என்றெல்லாம் பெயர் கொண்டவர் சிவன். அம்பாள் வேத நாயகி. யாழினும் இனிய மொழியாள் என்ற அற்புதமான பெயரும் கொண்டவள். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இங்கே அம்பாள் காட்சி தருவது சுந்தரி பீடத்தில்.

சிவாஜி கணேசன் அப்பர் திருநாவுக்கரசராக நடித்த திருவருட்செல்வர் படத்தில் ''தாள் திறவாய்'' என்ற பதிகத்தை பாடினாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த கோவில் பற்றிய சிறப்பு செய்தி. திருஞான சம்பந்தரும் அப்பரும் இந்த ஆலயத்தில் சந்தித்தபோது நிகழ்ந்த அதிசயம். அப்பர்பத்து பதிகம் பாடி திறந்த கதவு திருஞான சம்பந்தர் ஒரே பதிகம் பாடியவுடன் மீண்டும் மூடியது. அந்த வாசல் படம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இந்த வாசல் வழியாக எவரும் உள்ளே செல்ல இயலவில்லை. அப்பர் சம்பந்தர் விஜயத்திற்கு பின் கதவு திறந்து மூடிய பின் எல்லோரும் இந்த வாசல் வழியாகவே வந்து சிவ தர்சனம் பெறுகிறார்கள்.

வேதம் உருவான இடம் என்று பெயர் பெற்ற ஸ்தலம் வேதங்கள் உருவாகி சிவனை வழிபட்டது இங்கேதான் இங்கே சரஸ்வதி கையில் வீணை இல்லை. வேதங்கள் நிரம்பிய ஓலைச்சுவடி மட்டுமே ஏந்தி நிற்கிறாள்.

உப்பு சத்யாகிரஹம் நடந்த சமயம் வடக்கே மஹாத்மா காந்தி குஜராத்தில் தண்டி யாத்திரை சென்றார். இங்கே சர்தார் வேதரத்னம் ராஜாஜி ஆகியோர் ஆங்கில ஆட்சியை எதிர்த்து கடல்கரையில் உப்பெடுத்து சத்யாகிரஹம் செயது சிறைப்பட்டனர்.

ராமர் ராவணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வந்து வழிபட்ட இடம் இதுவும் ராமேஸ்வரமும் என்பதால் இந்த ஊருக்கு அருகே ராமர் பாதம் என்ற ஒரு புனித ஸ்தலம் உண்டு.

இங்கே மரகத லிங்கமான விடங்க தியாகராஜனை தரிசித்ததில் பெரு மகிழ்ச்சி. காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மரகத லிங்கத்தை கொண்டுவந்து அபிஷேகம் ஆனவுடன் உடனேயே ஜாக்கிரதையாக எடுத்துச் சென்று பாதுகாக்கிறார்கள். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். இங்கு சிவன் ஆடிய நடனம் ஹம்ச பாத நடனம். பொறுத்திருந்து அபிஷேகம் பார்த்து விட்டு சென்றேன். தல விருட்சம் புன்னை மரமும் வன்னி மரமும்.

ஒரு விஷயம் சொல்லட்டுமா. இந்த ஊரில் மற்ற எல்லா கிணற்று நீரும் உப்பு கரித்தாலும் இந்த ஆலய கிணற்று நீர் மட்டுமே குடிக்க ருசிக்கிறது.

இன்னொரு ஆச்சர்யமும் சொல்லிவிடுகிறேன். விடங்க க்ஷேத்திரங்களில் நந்தி நின்று கொண்டு இருப்பதை கவனித்தேன். இத்துடன் இணைத்துள்ள படத்திலும் காணலாம்.

அடுத்து கோயில் கதவு சாத்தும் முன்பு திருத்துறை பூண்டி விடங்க க்ஷேத்ரம் செல்ல ஓடினோம். காலால் அல்ல. ஸ்ரீனிவாசனோடு காரில்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...