யாத்ரா விபரம் J.K. SIVAN
திருவெண்பாக்கம் ஊன்ரீஸ்வரர்
ராமகிரி கால பைரவர் தரிசனம் முடிந்து சுனை நீரை நந்தியின் வாயில் இருந்து அமிர்தமாக பருகிவிட்டு பூண்டி வழியாக திரும்பும்போது பூண்டி அருகே வெண்பாக்கம் என்ற பழைய ஒரு சிவஸ்தலம் இருப்பது ஞாபகம் வந்தது. பூண்டி நீர் தேக்கம் அருகில் இருக்கிறது அந்த கோவில். வெண்பாக்கம் என்றால் யாருக்கும் தெரியவில்லை. பூண்டி அருகே சிவன் கோவில் என்றால் கொஞ்சமாவது தெரிகிறது.
மூலவர் ஊன்ரீஸ்வரர் அம்பாளுக்கு அற்புதமான பெயர் மின்னொளி அம்மன். அருகிகே இருக்கும் குசஸ்தல ஆறு தான் கைலாய தீர்த்தம். ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டு ஆலயம். பழம்பதி பூண்டி ஆகி உண்மைப்பெயர் திருவெண்பாக்கம் இப்போது பூண்டி ஆகிவிட்டது.
276 சிவஸ்தலங்களில் 17வது ஸ்தலம். சுந்தரர் வந்து பாடிய ஸ்தலம்.
ஊன்ரீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கம். கிழக்கு பார்த்தவர். சுந்தரர் பார்வை இன்றி இருந்தபோது நடக்க உதவியாக ஊன்றுகோல் கொடுத்தவர். இன்றும் கண்ணற்ற சுந்தரர் விக்ரஹம் சிவனை பார்த்தவாறு நந்தி அருகே கையில் ஊன்றுகோலோடு காட்சி அளிக்கிறது. அமாவாசை பவுர்ணமி அன்று சிவனுக்கு இங்கே வடை மாலை. ஒரு அதிசய வழக்கம்.
வலம்புரி விநாயகர் இங்கே இருக்கிறார். அஷ்ட புஜ பைரவர் தெற்கு பார்த்தவாறு அருள் பாலிக்கிறார். அஷ்டமில் விமரிசையாக பூஜை அவருக்கு.
சுந்தரர் சங்கிலி நாச்சியாரை பிறியேன் என வாக்களித்து வாக்கை மீறி திருஆரூர் பரவை நாச்சியாரை தேடி செல்கையில் வழியே அவருக்கு பார்வை பறிபோய்விட்டது. வெண்பாக்க ஈசனை வேண்ட பார்வை அளிக்காமல் ஊன்றுகோலை கொடுக்கிறார் ஈசன். மீண்டும் திருவாரூரிலிருந்துவந்து சுந்தரர் வேண்ட ஈசன் பார்வை அளிக்கவில்லை. அந்த கோபத்தில் அவர் கொடுத்த ஊன்றுகோலை வீச அது அருகே நந்தியின் மீது பட்டு அவரது வலது கொம்பு உடைந்து விட்டது. வலது கொம்பு உடைந்த நந்திகேஸ்வரர் இந்த ஆலயத்தில் சுந்தரர் சிலைக்கு அருகே நிற்கிறார்.
இதை ஆலயம் திருவள்ளூரிலிருந்து சுமார் 12 கி.மி. தூரம். பூண்டி செல்லும் பஸ் நிறைய இருக்கிறது. கோவில் வாசலிலேயே பஸ் நிற்கிறது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் 1 கி.மி. சென்றும் அடையலாம்.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
தேவார காலத்தில் திருவிளம்பூதூர் என்ற குசஸ்தல ஆற்றங்கரையில் இருந்த இந்த விக்ரஹம், பூண்டி நீர் தேக்க அணை கட்டிய காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு இப்போதுள்ள இடத்தில் இருக்கிறது. 11ம் நூற்றாண்டு ஆலயம்.
சுந்தரர் இறைவன் சிவனோடு வாக்கு வாதம் செய்து பார்வை கேட்ட இந்த ஸ்தல பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
1. பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
2. இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்
அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே.
3. செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.
4. கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே.
5. பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே.
6. கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன
ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.
7. பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.
8. வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.
9. பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.
10. மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே.
11. ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.
No comments:
Post a Comment