LIFE'S LESSON:
கனக சபைக்கு மட்டும் சொன்னதல்ல
J.K. SIVAN
தாத்தா உங்களை ஒன்று கேட்கவேண்டும். மறதி எதற்காக எப்படி ஏற்படுகிறது? என்றான் கனகசபை
அப்பனே, விஞ்ஞான ரீதியில் மனிதனுக்கு ஏன் மறதி ஏற்படுகிறது என்று நிறைய புத்தகங்களில் இருக்கிறது. உடலில் சில பகுதிகள் காலப்போக்கில் தமது சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறதி ஏற்படுகிறது ஒருபக்கம் இருக்கட்டும். மறதி ஒரு வரப்பிரசாதமாக ஏற்க வேண்டியது அவசியம்.
ஏன் தாத்தா?
நிம்மதி வாழ்க்கையில் தேவை என்றால் அதை விட அவசியம் தேவை மறதி. சிலவற்றை உடனே மறந்தால், அதை எப்போதும் மறந்தால் தான் நிம்மதி ஏற்படும். இது எல்லோர் வாழ்க்கையிலும் நேருவது தெரியும். சில ஞாபகங்கள் அடிக்கடி தலை தூக்கி நம்மை அதிர்ச்சி, ஆங்காரம், அவமானம், ஆத்திரம் கொள்ளச் செய்யும். அந்த சம்பவங்களை ஞாபகத்துக்கு கொண்டுவராமல் செய்ய மறதி ஒன்றினால் தான் முடியும்.
தந்தி என்று மூன்று எழுத்து வார்த்தை ஒரு காலத்தில் நம்மை நடுங்க வைத்தது. அப்போது ஸ்மார்ட் போன், ஈமெயில், பாக்ஸ் (fax ) எல்லாம் கிடையாது. செயதி உடனுக்குடன் கிடைக்காத காலம். எனவே தந்தி வந்தால் யாருக்கோ ஆபத்து என்று தான் புரிந்து கொண்டோம். வதந்தி நாலு எழுத்து வார்த்தை. அது தந்தியைவிட வேகமாக பரவும். எழுத்தில் வராத வார்த்தை. பராபரியாக காதில் விழும். பரபரப்பு ஏற்படுத்தும். இதில் என்ன வேடிக்கை என்றால் தந்தி உண்மை. வதந்தி பொய் முக்கால்வாசி. கால்வாசி எங்கோ உண்மை ஒட்டிக்கொண்டிருக்கும். மற்றதெல்லாம் கண் காது ஒட்டவைத்த ஜோடனை பொய் . வதந்தியை நம்புகிறோம். பாடாய் படுத்தும் தன்மை கொண்டது வதந்தி. வதந்திக்கு ஆயிரம் நாக்கு, வாய், இரும்பு இதயம் என்று சொல்வார்கள்.
ரொம்ப நன்றாயிருக்கிறது நீங்கள் சொல்வது. என்ன நோட் புஸ்தகத்தில் எதையோ நான் வரும்போது எழுதிக்கொண்டிருந்தீர்கள் தாத்தா என்றான் கனகசபை. கூர்மையான கண்களை உடையவன்.
சில மனத்தை கவர்ந்தது. படிக்கிறேன் கேள்.
பூக்கள் அன்று மலர்ந்து அன்றே மடிபவை. எனவே நீ பூக்களை போல் இல்லாமல் அவை என்றும் உருவாகும் செடிகளாக இரேன். பூவாக இருந்தால் உதிர் ந்து விடுவாய். செடியாய் இருந்தால் மலர்ந்து கொண்டே இருப்பாயே .
என் பேரன் எங்கிருந்தோ ஒரு கிளியை வாங்கி வந்து கூட்டில் அடைத்து வளர்த்தான். அப்பனே பறவையை கூட்டில் அடைப்பதையே விட ஒரு மரம் எங்கோ நடு. அதில் பல பறவைகள் கூடு கட்டி வாழுமே
முடியும் என்று மனம் நினைக்கும்போது நன்றாக அதை பற்றி அலசி விட்டு முடியும் என்று தீர்மானி. முடியாது என்ற நினைப்பு வந்தால் அதன் காரணத்தையும் யோசித்து முடிவெடுத்தால் நிச்சயம் தோல்வி நெருங்காது.
நீ எவ்வளவு பலமுள்ளவன் என்று தெரிய வேண்டுமானால் உன் பலவீனங்களை பற்றியும் நன்றாக தெரிந்திருக்கவேண்டும்.
குழந்தைகளை மரியாதை தெரிந்தவர்களாக வளர்க்க வேண்டுமானால் அவர்கள் எதிரே மற்றவர்களிடம் நீங்கள் முதலில் மரியாதையாக பேசி நடந்துகொள்ளுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்குத் தனியாக மரியாதை சொல்லித்தர வேண்டிய அவசியம் ஏற்படாது..
நம்மிடம் உள்ள பழக்கங்களை பற்றி ஒரு வார்த்தை. எது பழக எளிதாகவும் விடுவதற்கு கடினமாகவும் இருந்தால் அது தான் கெட்ட பழக்கம்.பழக கடினமாகவும் - விடுவதற்கு எளிதாகவும் இருந்தால் அவை நல்ல பழக்கங்கள்.
நம்மிடம் உள்ள ஒரு பெரிய குறை என்ன தெரியுமா? நாம் தேடும் ஒருவர் தேடும்போது கிடைப்பதில்லை. நம்மை தேடும் ஒருவரை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை
அன்புதான் உங்கள் பலவீனம் என்றால் நீங்கள் தான் இந்த உலகில் மிகப் பெரிய பலசாலி.
வீட்டில் கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி நிரப்புபவர்களே. உங்களுக்கு ஒரு வார்த்தை. அடிக்கடி அவசியம் இல்லாததை வாங்கினால் விரைவில் அவசியம் உள்ளதை விற்க வேண்டி வரும்.
ராபர்ட் ப்ரூஸ் என்பவன் சண்டையில் தோற்றுப்போய் உயிர் தப்பி ஒரு மரத்தடியில் காயத்தோடு உற்கார்ந்திருந்தபோது அவன் கண்ணில் ஒரு சிலந்தி பூச்சி தென்பட்டது. அதிலிருந்து அவன் தெரிந்து கொண்ட நீதி : உனது முயற்சி உன்னை பல முறை கைவிடலாம். ஆனால் ஒரு முறை கூட உனது முயற்சியை கைவிடாதே !
நாம் எல்லோருமே நல்ல நடிகர்கள் தானே. நான் ஒரு நல்லவன் என்று எப்படியெல்லாம் பிறரை நம்பவைக்க நடிக்கிறோம். உண்மையில் நல்லவனாக வாழ சிலரால் மட்டுமே முடியும்.
No comments:
Post a Comment