Thursday, January 27, 2022

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   --   நங்கநல்லூர்   J K   SIVAN ஸ்லோகங்கள்  162-163     நாமங்கள்  866 -879

अजा क्षयविनिर्मुक्ता मुग्धा क्षिप्र-प्रसादिनी ।

अन्तर्मुख-समाराध्या बहिर्मुख-सुदुर्लभा ॥ १६२॥




Ajakshaya vinirmukta mugdha kshipraprasadini

antarmukha samaradhya bahirmukha sudurlabha – 162


அஜாக்ஷய வினிர்முக்தா  முக்தா க்ஷிப்ரப்ரஸாதினீ |

அந்தர்முக ஸமாராத்யா  பஹிர்முக ஸுதுர்லபா || 162 ||


त्रयी त्रिवर्गनिलया त्रिस्था त्रिपुरमालिनी ।

निरामया निरालम्बा स्वात्मारामा सुधासृतिः ॥ १६३॥ or सुधास्रुतिः


Traei trivarganilaya trisdha tripuramalini

niramaya niralanba svatmarama sudhasrutih – 163


த்ரயீ, த்ரிவர்க நிலயா  த்ரிஸ்தா, த்ரிபுரமாலினீ |

நிராமயா  நிராலம்பா  ஸ்வாத்மாராமா  ஸுதாஸ்ருதி: || 163 ||


லலிதா ஸஹஸ்ரநாமம் - (866-879) அர்த்தம்  


866 अजा அஜா Ajā     

பிறப்பற்றவள் அம்பாள்  என்று   ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சொல்கிறது  (IV.5)  ப்ரக்ரிதியை  அஜா  என்கிறது.


867  क्षय-विनिर्मुक्ता  க்ஷய வினிர்முக்தா   -  

அம்பாள்  லலிதை  அழிவற்றவள் என்று திரும்ப திரும்ப  சொல்கிறோம்.  இந்த இடத்தில் அழிவு என்பது  மானுடராகிய நமக்கு நேரும்  மரணம்.   பிறப்பு இருந்தால் தான் இறப்பு. பிறப்பே இல்லையே. ப்ரம்மத்துக்கு ஆரம்பம் எது, முடிவு எது, பிறப்பு  இறப்பு  ஏது .  எல்லாமே ஒன்றாக இருந்தால்  எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இருக்காதே.


868   मुग्धा முக்தா    

அழகே உருவானவள்.  ஒன்றுமறியாத  என்று ஒரு அர்த்தம்.  பச்சைக் குழந்தைக்கு என்ன தெரியும்?.  பிறருக்கு தீங்கு நினைக்க கூட தெரியாத பருவம்.  அவள் தாய் ஸ்வரூபம்.  நாமெல்லோரும் அவள் குழந்தைகள். தாய் குழந்தைக்கு  என்றாவது, எப்போதாவது தீமை,  தீங்கு செய்ய  நினைப்பாளா?  அவள்  தியாக சின்னம்.  இந்த குணமே அவள் அழகை சீர் தூக்கிக்  காட்டுகிறது. .


869   क्षिप्र-प्रसादिनी  க்ஷிப்ரப்ரஸாதினீ -   

க்ஷிப்ர  என்ற  சீக்கிரம், சடுதியில்  என்று அர்த்தம்.  மற்ற தெய்வங்களை வழிபடுவோர் முக்தியடைய  நாளாகலாம்.  இங்கே எல்லாம் உடனேயே. அப்போதைக்கப்போதே,   இந்த பிறவியிலேயே அடையலாம்.   அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரங்கள்  அவளை உபாசிக்கும்  மஹா ஷோடசி மந்த்ரங்கள். மோக்ஷ சாதனம்.  பிரார்த்தனை, ஜபம் எல்லாம் விடாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும்.  விட்டு விட்டு  செய்வதால் பலன் இந்த ஜென்மத்தில் இல்லை. இன்னும் பிறவிகள் எடுத்து தான் பலன் பெறவேண்டும்.


870  अन्तर्मुख-समाराध्या அந்தர்முக ஸமாராத்யா   -   

அம்பாள்  ஏற்கனவே பலமுறை சொன்னபடி  யார்  உள்நோக்கி தியானம் செய்து ஆத்ம ஆராதனை செயகிறார்களோ அவர்களுக்கு ப்ரத்யக்ஷமாவாள் .


* 871*बहिर्मुख-सुदुर्लभा   பஹிர்முக ஸுதுர்லபா   

ஒரு சின்ன விஷயம்.  எவ்வளவு தான் முனைந்தாலும்,  ஆத்ம சிந்தனை இல்லாதவர்கள்  அம்பாளை காணமுடியாது.  மனது ஒன்று தான் சுத்தமாகி  உள் நோக்கி  தேடவேண்டும். அப்புறம் தான்  ஆத்மா புரியும். அம்பாள் தெரிவாள்.  முதலில்  ஐம்புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அதை அடக்கவில்லையென்றால் மனம் அடங்காதே . சௌந்தர்யலஹரி  (95) “ பஞ்சேந்திரியங்களை அடக்காதவர் உன்னை அடையமுடியாதே  அம்மா '' என்கிறது.


872  त्रयी    த்ரயீ :  - மூன்றானவள்.    அம்பாள்  வேதஸ்வரூபமல்லவா? யஜுர், ரிக், சாம  வேதமானவள் . வேத மாதா.


873  त्रिवर्ग-निलया  த்ரிவர்க நிலயா-  

கடந்த, நிகழ், எதிர்  முக்காலங்களையும் தானாக கொண்டவள்.  தர்ம, அர்த்த, காம புருஷார்த்தங் களின் தோற்றம்  ஸ்ரீ லலிதை.  மோக்ஷம் தருபவள்.


874   त्रिस्था   த்ரிஸ்தா, - 

சிருஷ்டி ஸ்திதி லயம்,     படைத்தல், காத்தல், அழித்தல்  ஆகிய முச்செயல்களிலும் ஆதாரமானவள் அம்பாள்.  ப்ரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய   மூவரின் அம்சம் அவள்.   சஞ்சித, ப்ராரப்த, ஆகாமிய கர்மாக்கள்  மூன்று.  அவள் அதே தான்.    சத்வ ரஜோ தமோ குணங்களும் மூன்று,  சக்திகளில் இச்சை, கிரியை, ஞானம் மூன்று.  ஆகவே  மூன்றானவள். -


875  त्रिपुरमालिनी  த்ரிபுரமாலினீ   

ஸ்ரீ சக்ர உபாசனையில் ஆறாவது ஆவரண பிரதான தேவதை திரிபுர மாலினி. சர்வ ரக்ஷகி. மற்ற யோகினிகள், நிர் கர்ப்ப யோகினிகள், அவளுக்கு தொண்டு செய்கிறார்கள்.   சிவன் தான் காமன். அவன் மனைவி மாலினி. த்ரி என்பது  மூன்று ஸ்திதிகளை, விழிப்பு, தூக்கம், கனவு ஆகிய நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளான அம்பாளை குறிக்கிறது.


876  निरामया  நிராமயா    

நோய்நொடி நெருங்காதவள். மாயா  என்றாலே  வியாதி நிவாரணம். ரெண்டு   வித வியாதிகளில் ஒன்று உடல் ரீதியானது. மற்றது மனோவியாதி. அம்பாள் உடல் உள்ளம் இரண்டுக்கும் அப்பாற் பட்டவள் . சர்வ ரோக நிவாரணி அம்பாள் திருநாமம்.


877  निरालम्बा  நிராலம்பா 

எதையும் சாராத தனித்வமானவள் அம்பாள். அவளைத்  தான்  எல்லாமே சார்ந்திருக்கிறது .


878  स्वात्मारामा ஸ்வாத்மாராமா ,     

ரொம்ப  ரொம்ப  அழகான நாமம் இது.  தன்னில் தன்னை காண்பவள். அது தரும் ஆனந்தத்தில் திளைப்பவள்.  ப்ரஹதாரண்யக உபநிஷத் சொல்வதை கொஞ்சம் கேட்போம்:  (I.iv.3) “ அவன் நிம்மதியற்று தவித்தான். யாருமே  தனிமையில் சந்தோஷமாக இல்லை. துணை தேடினான். ஜோடியானான். பிறகு உடலை இரு கூறாக்கி னான்.  அதிலிருந்து கணவன் மனைவி  தோன்றினர் . ஆகவே  உடலில் ஒரு பாதி தான் கணவனோ மனைவியோ.?  ஒரு விதையை இரண்டாகப் பிளந்தது  போல்.  பிறகு  பிரபஞ்சத்தில் சிவ சக்தியால்  உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. வேறு போல  காட்சி அளித்தாலும் இரண்டுமே ஒன்று தான்.  அம்பாளின் சங்கல்பத்தால் ஜீவன்கள் தோன்றின.


879 सुधास्रुतिः   ஸுதாஸ்ருதி  - 

அம்பாள் தான் அம்ருத தாரை பொழியச் செய்பவள். நிலவுக்கும் அமுதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  சந்த்ர மண்டல மத்யகா  என்று ஒரு பெயர் அம்பாளுக்கு உண்டே. குண்டலினி ஆஞா  சக்ரத்தை தொட்டவுடன்  அங்கே சலசலப்பு  நேர்கிறது. ஸஹஸ்ராரத்தை நோக்கி  அம்ருதம் பாய் கிறது.  மேலண்ணத்திலும், தொண்டையிலும் அம்ருத சக்தி உணரமுடிகிறது.  நம்மால் அல்ல . பரம ஞானிகளால்.  பிரம்மானந்தம் பெறுகிறார்கள்.


சக்தி பீடம்                  குருக்ஷேத்திர  காளி  


தென்னிந்தியாவை விட  வட  இந்திய  ஊர்கள்  தான்  அன்னியர்கள் ஆக்கிரமிப்புக்கும்  அவர்களது இன , மத, வெறிச் செயல்களுக்கும்  அக்கிரமங்களுக்கு, நாசகார்யங்களுக்கும்  நிறைய  பலி  ஆகியிருக்கிறது. யுத்த பூமியான  குருக்ஷேத் ரத்தில் ஒரு சக்தி பீடம் உண்டு.    பகவத் கீதை  தர்மக்ஷேத்ரம் இந்த  குருக்ஷேத்ரம் என்கிறது.    கண்ணன் கீதையை உபதேசித்த இடம்.   பல வருஷங்களாக  கீதா ஜெயந்தி வருஷா வருஷம்  கொண்டாடப்படும்  இடம். 


பழைய சிவாலயம் ஒன்று  இப்போது தானேசர்  எனப்படும்  ஸ்தானேஸ்வர மஹாதேவர் ஆலயம். இது  ஹரியானாவில் உள்ளது.  இந்த சக்தி பீடத்துக்கு  தேவி கூப பத்ரகாளி ஆலயம்  என்றும் சாவித்ரி பீடம், காளிகா பீடம், ஆதி பீடம் என்றும் பெயர்கள் இருக்கிறது.   தக்ஷனின் யாகத்தீயில் தன்னை மாய்த்துக்  கொண்ட  பார்வதியின் உடலை சுமந்து பரமேஸ்வரன் கோபாக்னியோடு தாண்டவ மாடும்  போது அவளது உடலை 52  துண்டுகளாக  மஹா விஷ்ணு  தன்னுடைய  சுதர்சன சக்ரத்தால் துண்டித்து அவை விழுந்த இடங்கள் தான்  52 சக்தி பீடங்கள்.  ஸ்தானேஸ்வரம் இங்கே  சதியின்  வலது கணுக்கால் விழுந்த இடம்.   பாண்டவர்கள் கிருஷ்ணனோடு நடந்து வந்து,   இந்த ஆலயத்தில் அம்பாளை தரிசித்து சக்தி பெற்று மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள்.  கிருஷ்ணனும் பலராமனும்   இந்த பத்ரகாளி  ஆலயத்தில் தான் முடி இறக்கிக் கொண்டார்கள் என்று கூட  ஒரு சேதி.  

ஸ்தானேஸ்வர் மஹாதேவர்  ஆலயத்தில் அம்பாள் தான் அந்த சக்தி.  அந்த ஆலயத்தில்  பத்ர காளியாக இருக்கிறாள்.  2 கி.மீ. தள்ளி மஹாதேவர் ஆலயம் இருக்கிறது.   பாண்டவர்கள் இந்த பரமேஸ்வரனைத்  தான் போரில் வெற்றி  பெற வேண்டினார்கள்.  கோவில் குளத்தின் தீர்த்தம் பவித்ரமானது. குருக்ஷேத்ரம்  செல்பவர்கள் இந்த சிவாலயத்தை தரிசிக்காமல்  யாத்திரை பூர்த்தி யாகாது.  ஒருகாலத்தில்  இந்த ஊர்  உத்ரவேதி, பிரம்மவேதி, தர்மக்ஷேத்ரம் என்றெல்லாம் பெயர் கொண்டிருந்தது.  சீனாக்கார  யாத்ரி ஹ்யூவான் ஸ்வாங் இங்கே வந்திருக்கிறான்.  புண்ய வான்.

நான் இன்னும்  செல்ல முடியவில்லை.


 பாண்டவர்களின்  முன்னோர்களில்  குரு என்பவன் இங்கே தவமிருந்து சிவன் அருள் பெற்றான். அவன் பெயரால் இந்த ஊர்  குருக்ஷேத்ரம்  ஆனது.   பரசுராமன் இங்கே பல க்ஷத்ரியர்களை கொன்றான். ஹர்ஷ வர்த்தனன்  என்ற  சக்கரவர்த்தி இதை தலைநகரமாக கொண்டிருந்தான்.


வலகில்ய ரிஷிகள் ஸ்தாபித்த  சிவாலயம்.  சிவன் திகம்பரனாகவும், விஷ்ணு மோஹினியாகவும் காட்சி தந்த இடம்.   குருக்ஷேத்திர விஸ்தீரணம்  ஹரியானாவில்  மத்திய, மேற்கு பாகத்திலிருந்து

தெற்கு பஞ்சாப்  வரை நீண்டது.


தைத்ரிய ஆரண்யகம்  என்ன சொல்கிறது?  குருக்ஷேத்ரம் துர்க்னா வுக்கு தெற்கே, (சிறுஞா/சுக், எனும் பஞ்சாபின் சிர்ஹிண்ட்  பகுதி)  காண்டவத்துக்கு  வடக்கே, (டில்லி, மேவாத் பகுதி)   மாருவுக்கு  கிழக்கே ( பாலைவனம்)  பாரின்னுக்கு மேற்கே  என்கிறது.


குரு  எனும் அரசன்  இந்த இடத்தை  புனிதமாக தேர்ந்தெடுத்தான்.  இது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளது. ஆஹா   இது  எட்டு விசேஷங்கள் கொண்டது  போலிருக்கிறதே. எனவே  தவம் செய்ய  ஆன்மீகமானது, ஸத்யம் நிலவும் இடம்,  க்ஷமா எனும் மன்னிக்கும் தன்மை உள்ளது, தயா எனும்  கருணை கொண்ட பிரதேசம், சுத்தமானது,  தானம் செய்ய தூண்டும் இடம், யஞா எனும் பக்தியை  ஊக்குவிக்கும் இடம்,  பிரம்மச்சர்யம் எனும் மனோபலம்  தரும் இடம்  என்று தீர்மானித்தான்.    மஹா விஷ்ணு அவன் தவத்திற்கு இணங்கி  ''குரு , நீ விரும்பிய இந்த இடம் என்றும் ஒரு க்ஷேத்ரமாக விளங்கும்,  இங்கே மரணமடைவபவன்  யாராயிருந்தாலும்  அவனுக்கு மோக்ஷம் நிச்சயம் ''  என்று வரம் தந்தார். குருக்ஷேத்ரம் எனும் இடம்,  ஸரஸ்வதி , த்ரிஷாத்வதி  எனும்   இரண்டு நதிகளுக்கு இடையே உள்ளது. பிற்காலத்தில்  மௌரியர்கள் ஆண்டு, புத்த   மதமும் ஊடுருவியது. குஷானர்கள் வந்தனர்.யுத்தத்தில் வென்று  ஆண்டனர். குப்தர்கள் ஆக்கிரமித்து ஆண்டனர். புஷ்யபுதி  வம்சம் தொடர்ந்தது.  ஹர்ஷன் காலத்திற்கு பிறகு காஷ்மீரர்கள் உள்ளே நுழைந்தனர்.  கஜினியிலிருந்து முகம்மது  வந்து சேர்ந்தான். டெல்லி சுல்தான்கள் ஆட்சியில்  பல காலம்  வாடியது.

 சயீதுகள் , லோடிகள், முகலாயர்கள்,   வெள்ளைக்காரர்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறோம்  நாம். ..... அடேயப்பா  குருக்ஷேத்ரம் எத்தனை ரத்தங்களை பார்த்திருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...